Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 18 மார்ச், 2021

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர் - தல வரலாறு

 Vaaymoornaathar Temple : Vaaymoornaathar Vaaymoornaathar Temple Details |  Vaaymoornaathar- Tiruvaaymoor | Tamilnadu Temple | வாய்மூர்நாதர்

மூலவர் : வாய்மூர்நாதர்
அம்மன்/தாயார் : க்ஷீரோப வசனி, பாலினும் நன்மொழியம்மை
தல விருட்சம் : பலா
தீர்த்தம் : சூரியதீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன், பிரம்மா,தேவர்கள், வான்மீகநாதர்
தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124வது தலம்.

இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 188 வது தேவாரத்தலம் ஆகும்.

தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும் , சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும்.

நவக்கிரகங்கள் இங்கு நேர் வரிசையில் உள்ளன.

காசியில் எட்டு பைரவர்கள் உள்ளது போல், இக்கோயிலிலும் எட்டு பைரவர்கள் உள்ளனர். இவர்களை தரிசித்தால் பயம் விலகும். 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறப்படுகிறது . ஆனால் இப்போது நான்கு தான் இருக்கின்றன.

இந்திரன் மகன் ஜெயந்தன் பைரவர் அருளால் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்.


தல வரலாறு:

சிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் வடிவமே விடங்க வடிவ லிங்கமாகும். விடங்க லிங்கம் என்பது மிகச்சிறிதாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் கோவில்களில் இதை ஒரு பாத்திரத்திற்குள் வைத்திருப்பார்கள். இதை தரிசித்தால், சொர்க்கம் செல்லலாம் மற்றும் அகால மரணம் ஏற்படாது என்பது நம்பிக்கை.இத்தகைய சிறப்பு வாய்ந்த விடங்க லிங்கத்தை, இந்திரன் தனக்கு பூஜிக்க தருமாறு வற்புறுத்தி கேட்டதால் இந்திரனிடம் சிவன் விடங்க வடிவத்தை தந்தார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான். சிவபெருமான் அந்த லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார்.

முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர் வடபகுதியில் ஆண்டு வந்த போது, ஒரு சிவராத்திரி இரவில், அவனுக்கு சிவன் காட்சி கொடுத்தார். இந்திரனிடம் இருக்கும் சிவலிங்கத்தை வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த என்றார்.அச்சமயத்தில் இந்திரன் வாலாசுரன் என்பவனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள எதைக் கேட்டாலும் தருவதாக சொல்லியிருந்தான்.வாலாசுரனைக் கொன்று விடங்க வடிவத்தை வாங்கி வரும்படி சிவன் முசுகுந்தனுக்கு யோசனையும் சொன்னார். முசுகுந்தன் சிவனிடம், அப்படியே செய்கிறேன். ஆனால், விடங்க வடிவம் என்றால் எப்படியிருக்கும் என்பதைத் தனக்கு காட்ட வேண்டும் என்றான். சிவனும் அவ்வாறே செய்ய, அங்கு ஒளிவெள்ளம் எழும்பியது. முசுகுந்தனுடன் மட்டுமின்றி முனிவர்கள், தேவலோகமே அங்கு திரண்டு வந்து விட்டது.

பிறகு, முசுகுந்தன் இந்திரனிடம் வேண்டி விடங்க வடிவ லிங்கத்தை தனக்கு தருமாறு கேட்டான், இந்திரன் தேவலோக விஸ்வகர்மாவை அழைத்து தன்னிடம் இருந்த அசல் விடங்க வடிவ லிங்கம் போலவே இன்னொரு லிங்கம் செய்து தருமாறு சொல்லி அதை முசுகுந்தனிடம் கொடுத்தான், சிவபெருமான் கருணையால் முசுகுந்தன் இது அசல் அல்ல என்று தெரிந்து கொண்டு , இந்திரனே நீ பூஜை செய்யும் அசல் விடங்க வடிவ லிங்கம் தான் எனக்கு வேண்டும், நீ கொடுத்த லிங்கம் அதுவல்ல என்று கேட்டான்., மேலும், நீ கொடுத்த வரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னான்.

இவ்வாறு ஆறுமுறை நடந்து, பின்னர் கடைசியில் ஏழாவதாக தன்னிடம் இருந்த அசல் விடங்க லிங்கத்தைக் கொடுத்தான் இந்திரன், அதுமட்டுமல்ல பின்னர் எல்லா ஏழு லிங்கங்களும் உனக்குத்தான் என்று தேவேந்திரன் முசுகுந்தனுக்கு கொடுத்து விட்டான் , எல்லா விடங்க லிங்கங்களுமே ,உளி (டங்கம்) படாமல் .,தேவ சிற்பியால்,தனது மனோ சக்தியால் செய்யப்பட்டது என்பதால் விடங்க லிங்கம் என்று அழைக்கப்பட்டது, இந்த ஏழு விடங்க லிங்கங்களும் முசுகுந்தச் சக்ரவர்த்தியால் ஏழு ஊர்களில் வைத்துப் பூஜை செய்யப்பட்டு வந்தன. தற்போதும் இவை இருக்கின்றன

1. திருவாரூர் : வீதி விடங்கர்
2.நாகப்பட்டினம் : சுந்தர விடங்கர்
3.திருக்கரவாசல் : ஆதி விடங்கர்
4.திருக்குவளை : அவனி விடங்கர்
5.திருவாய்மூர் (நாகப்பட்டினம் மாவட்டம் ) :நீல விடங்கர்
6. திருநள்ளாறு : நாக விடங்கர்
7. திருமறைக்காடு ( வேதாரண்யம்) : பவனி விடங்கர்.,

பிறகு, முசுகுந்தன், சிவபெருமானுக்கு திருவாய்மூரில் கோயில் எழுப்பினான், அவனின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார்.

பைரவரின் அருளால் சாபம் தீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன், இத்தல இறைவனிடம் யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள்புரிந்தார். அதன்படி, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது.

திருநாவுக்கரசர் மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது தான் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும் ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும் போது இறைவன் அவர் கனவில் தோன்றி அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் இங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். அங்கே திருமறைக்காட்டில் அப்பரைக் காணாத சம்பந்தர், அவரைத் தேடிக்கொண்டு திருவாய்மூர் வந்து சேர்ந்தார். இறைவன் இருவருக்கும் திருக்கோலம் காட்டி அருளினார்.


கோவில் அமைப்பு:

இத்தலம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மூன்று நிலைகளுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடனும் ஒரு பிராகாரத்துடனும் அமைந்துள்ளது. ராஜகோபுர வாயிலின் முன்பு கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் அமைந்துள்ளது.கோயிலின் முன்பாக குளம் உள்ளது. மூலவர் வாய்மூர்நாதர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஐப்பசி மாதப் பிறப்பன்று நீலவிடங்கப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. வெளிச்சுவற்றில் நால்வர், பைவரர் சந்நிதிகளும் உள் சுற்றில் விநாயகரும், வள்ளி தெயவ்யானை சமேச சுப்பிரமணியரும், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன.

கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். விடங்கருக்கு நீலவிடங்கர் என்று பெயர். நடனம் கமலநடனம். தியாகராஜர் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மேலுள்ளார். இத்தலத்தில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ளனர். ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர் மற்றும் சுவர்ண பைரவர் ஆகிய 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால், இப்போது அகோர பைரவர், ஆனந்த பைரவர், இத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய 4 மூர்த்தங்கள்தான் இருக்கின்றன. மற்ற நான்கு மூர்த்தங்களுக்கு பதிலாக 4 தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள பாபமேக பிரசண்ட தீர்த்தம் சகல பாவத்தையும் போக்கவல்லது. பிரம்மா முதலான தேவர்கள், தாரகாசுரனுக்குப் பயந்து பறவை உருவெடுத்து சஞ்சரிக்கும்போது, இத்தலம் வந்து இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்ற பெருமை உடையது. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.

சிறப்புக்கள் :

இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.
இத்தலத்தில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ளனர்.

திருவிழா:
மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை. சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை வைகாசி விசாகம் பிரமோற்சவமாக நடத்தப்படுகிறது. வழக்கமான விழாக்கள் உண்டு. பைரவருக்கு அஷ்டமியில் பூஜை உண்டு. ஐப்பசி மாதப்பிறப்பன்று தியாகராஜருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகின்றது.

போன்: -

குருக்கள் 9487992974

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டுக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலம் அடையலாம்
இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.. தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் மூன்றவதாக கருதப்படும் தலமாகும்.நவக்கிரகங்கள் இங்கு நேர் வரிசையில் உள்ளன. காசியில் எட்டு பைரவர்கள் உள்ளது போல், இக்கோயிலிலும் பைரவர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக