
இன்போசிஸ் நிறுவனம் கடந்த வாரம் தனது ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாகத் தனது ஊழியர்கள் கடந்த 1.5 வருடமாக வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர் என்ற தகவலுடன் ஆரம்பித்து, கொரோனா தொற்று எண்ணிக்கை நாட்டில் கணிசமாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, தனது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பணிகளுக்கு ஏற்ப, சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயம் இருப்பின், அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடு உடன் அலுவலகம் வந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கை நாட்டில் குறைந்துள்ளதைத் தொடர்ந்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்ல சில தளர்வுகளை நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. ஆனால், அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டு இருக்க வேண்டும் என்றும் நிறுவனம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
அதேபோல், நிறுவனத்தின் பணிபுரியும் குழு உறுப்பினர்கள் அலுவலகத்திற்குக் கட்டாயம் வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் இன்போசிஸ் கூறியுள்ளது. ஆனால், சில ப்ராஜெக்ட்களுக்கு ஏற்ப, வாடிக்கையாளரின் தேவை இருப்பின், அந்த ஊழியர்கள் மட்டும் அலுவலக்கிற்கு வந்து செல்லலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும், அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
இத்துடன், நிறுவனம் சமீபத்தில் வேலைக்காகத் தேர்வு செய்த பிரஷ்ஷர்களையும் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுக்கான பயிற்சியை வழங்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தேவையான அனைத்து அடிப்படைத் தேவை மற்றும் பாதுகாப்பு வசதிகளை நிறுவனம் தற்பொழுது மும்முரமாக உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்த்துப் பழகிப்போன ஊழியர்கள் இனி மீண்டும் அலுவலக அனுபவத்திற்கு வரும் போது என்ன சிக்கலை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக