
உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்கள் மூலம் ஒலி மாசுபாடு ஏற்படுத்தும் இரு சக்கர வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர பிரதேச மாநில அரசு அதிகாரிகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் நாளில் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவான 80 டெசிபல்களுக்கு மேலே ஒலி எழுப்பும் டூவீலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி அப்துல் மொயின் அடங்கிய பென்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ''மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்கள் மூலம் அதிக ஒலி எழும்புவதால், வாகனம் வெகு தூரத்தில் வரும்போதே கேட்கிறது. இது குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது'' என நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், ''ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான அனுமதிக்கப்பட்ட அளவு 75 முதல் 80 டெசிபல்கள் வரை மட்டுமே. வாகனம் உற்பத்தி செய்யப்படும்போது இதனை மனதில் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் சைலென்சர்களில் மாடிஃபிகேஷன் செய்யும்போது ஒலி அளவு 80 டெசிபல்களை கடக்கிறது.
இந்த பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்'' எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. உண்மையிலேயே இந்த பிரச்னை தற்போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்தியாவில் நிறைய பேர் இரு சக்கர வாகனங்களில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட/ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினரும், அதிகாரிகளும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டுதான் உள்ளனர். ஆனால் நிறைய பேர் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. எனவே ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரோடு ரோலர் மூலம் அவற்றை நசுக்கி அழிக்கின்றனர்.
இந்த வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் ரோடு ரோலர்கள் மூலம் விதிமுறைகளை மீறிய சைலென்சர்களை காவல் துறையினர் அழித்த வீடியோக்களை நாம் பல முறை கண்டுள்ளோம். எனினும் வாகன ஓட்டிகள் நிறைய பேர் தொடர்ந்து இந்த தவறை செய்து கொண்டுள்ளனர்.
எனவேதான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில், அதிகாரிகள் தங்களது நடவடிக்கைகளை இன்னும் கடுமையாக்குவார்கள் என நம்பலாம். இதன் மூலம் ஒலி மாசுபாடு பிரச்னை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக