
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் புட் டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்று முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்க்காத லாபத்தை அள்ளிக் கொடுத்தது.
இந்நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி, லாபம் மற்றும் கடன் நிலுவை குறித்து முதலீட்டாளர்களுக்குக் கவலையாக இருந்தாலும், டெக் நிறுவனம் என்பதாலும் வளர்ச்சி அடைய இன்னும் அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் நியூ ஏஜ் முதலீட்டாளர்கள் ஆர்வமாக முதலீடு செய்தனர்.இந்த நிலையில் புதிதாக ஒரு நிறுவனத்தைத் துவங்கியுள்ளது சேமேட்டோ.
உணவு டெலிவரி நிறுவனம்
இன்றைய வர்த்தகச் சந்தையில் வெறும் உணவு டெலிவரி நிறுவனமாக மட்டுமே இருந்தால் நீண்ட காலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்க முடியாது என்பதைச் சீக்கிரமாகவே உணர்ந்த சோமேட்டோ நிர்வாகம் புதிதாக ஒரு துறையில் இறங்க முடிவு செய்து அதற்காகப் புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.
சோமேட்டோ உணவு டெலிவரி
ஐபிஓ வெளியிடுவதற்கு முன்பாகவே சோமேட்டோ உணவு டெலிவரியை தாண்டி இந்தியாவில் தற்போது மிகவும் வேகமாக வளரும் மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு ஹோம் டெலிவரி செய்யத் திட்டமிட்டு வந்தது.
மளிகை பொருள் டெலிவரி நிறுவனமா..?
இந்நிலையில் இன்றைய அறிவிப்பைப் பார்த்ததும் அனைவரும் சோமேட்டோ உணவு பொருட்களை டெலிவரி செய்யவே புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோமேட்டோ அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
பேமெண்ட் சேவை
இந்தியாவில் தற்போது ஆன்லைன் டெலிவரி சேவையை விடவும் வேகமாக வளர்வது ஆன்லைன் பேமெண்ட் சேவை தான், எனவே சோமேட்டோ இத்துறையில் இறங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பேமெண்ட் துறையில் அதிகளவிலான நிறுவனங்கள் இருக்கும் நிலையில், தற்போது சோமேட்டோவின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
சோமேட்டோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
சோமேட்டோ நிறுவனம் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில், சோமேட்டோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சோமேட்டோ அதிகாரப்பூர்வமாகப் பேமெண்ட் துறையில் இறங்கியுள்ளது.
சோமேட்டோ பேமெண்ட்ஸ்
சோமேட்டோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பேமெண்ட் அக்ரிகேட்டர் சர்வீசஸ் மற்றும் பேமெண்ட் கேட்வே சேவைகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறையின் கீழ் இயங்க உள்ளதாகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 லட்சம் ரூபாய் மதிப்பு
இதற்காகச் சோமேட்டோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தற்போது ரூபாய் முகமதிப்பு உடன் 10000 பங்குகள் கொண்ட நிறுவனமாக உருவாக்கப்பட்டு உள்ளது. வெறும் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டு உள்ளது.
சோமேட்டோ நிறுவன பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் சோமேட்டோ நிறுவன பங்குகள் சுமார் 3.79 சதவீதம் வரையில் சரிந்து 133.15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் இருக்கும் காரணத்தால் சோமேட்டோ பங்குகள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
சோமேட்டோ ஐபிஓ
சோமேட்டோ பங்குகள் ஐபிஓ வெளியிட்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நாளில் இருந்து இந்நிறுவனப் பங்குகள் விலை 115 ரூபாயில் அதிகப்படியாக 147.80 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. முதல் நாள் வர்த்தகத்திலேயே சோமேட்டோ 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுத் தொடர்ந்து இந்த அளவீட்டைக் கைவிடாமல் உள்ளது. ஆனால் இன்று சோமேட்டோ பங்கு மதிப்பு சரிவுக்குச் சில முக்கியக் காரணமும் உண்டு
பங்குச்சந்தை முதலீடுகள்
இந்திய சந்தையில் கார்ப்ரேட் நிறுவன முடிவுகள், வேலைவாய்ப்பு, உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக மும்பை பங்குச்சந்தையில் கடந்த 3 நாட்களாக அதிகளவிலான அன்னிய முதலீடுகள் குவிந்தது நாம் பார்த்தோம். இதன் மூலம் சென்செக்ஸ் 54000 புள்ளிகளையும், நிஃப்டி 16000 புள்ளிகளையும் முதல் முறையாகத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது.
லாபத்திற்குப் பங்குகள் விற்பனை
இந்த சாதகமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ரீடைல் முதலீட்டாளர்களும், குறுகிய கால முதலீட்டாளர்களும் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். இதேவேளையில் அமெரிக்க, ஆசிய சந்தையும் சரிந்துள்ளது.
ஆசிய, அமெரிக்கச் சந்தை
அதிகளவிலான பங்கு விற்பனை, ஆசிய, அமெரிக்கச் சந்தையின் சரிவின் காரணமாக இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தடுமாற்றத்துடன் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனப் பங்குகளில் பல முக்கிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக