நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், வியாழக்கிழமை தனது அனைத்து மாடல்களின் விலை வரம்பையும் அடுத்த வாரம் முதல் ரூ .3,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் திருத்தம் செய்யும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
உற்பத்தி பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க விலை உயர்வு அவசியமாகிறது என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் பல்வேறு வகைகளில் விலை உயர்வு ரூ .3,000 வரை இருக்கும் என்றும் துல்லியமாக விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது வாகனத்தின் மாடல் மற்றும் சந்தை நிலையை பொறுத்தது என்றும் ஹீரோ மோடோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக ஹீரோமோடோகார்ப் விலைகளை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் அதன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஜனவரி மாதத்தில் ரூ .1,500 வரை உயர்த்தியது. மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விலைகள் ரூ.2500 வரை உயர்த்தப்பட்டன.
ஹீரோ மோட்டோகார்ப் பல்வேறு வகையான பைக்குகள் (Bikes) மற்றும் ஸ்கூட்டர்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்கிறது. கடந்த மாதம், உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,31,137 அலகுகளாக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 5,68,674 யூனிட்கள் விற்கப்பட்டன. இவ்வாண்டு விற்பனை 24 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில், எஃகு, பிற உலோகங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் படிப்படியாக உயர்ந்துள்ளன. இது வாகன உற்பத்தியாளர்களுக்கான உள்ளீட்டு செலவுகளை அதிகரிக்கச்செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா (Maruti Suzuki India) செலிரியோ தவிர, அதன் அனைத்து வாகன வரம்பின் விலையையும் 1.9 சதவீதம் வரை அதிகரித்தது. பல்வேறு உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பால் விலைகளை உயர்த்த முடிவு செய்ததாக நிறுவனம் குறிப்பிட்டது. இந்த ஆண்டு மாருதி இந்தியா செய்த மூன்றாவது விலை உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக