Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 அக்டோபர், 2021

விமானத்தின் கதவுகளை சுற்றிலும் ஏன் தடிமனான கோடு இருக்கிறது தெரியுமா?

விமானத்தின் கதவுகளை சுற்றிலும் ஏன் தடிமனான கோடு இருக்கிறது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானத்தின் கதவுகளை சுற்றிலும் ஏன் தடிமனான கோடுகள் வழங்கப்படுகின்றன? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களின் கதவுகள் மற்றும் அவசர கால வழியை சுற்றிலும் (Emergency Exit) தடிமனான கோடு வழங்கப்பட்டிருக்கும். அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்கள் இதனை கவனித்திருக்கலாம். அவர்களுடைய மனதில் இந்த கோடுகள் ஏன் வழங்கப்படுகின்றன? என்ற சந்தேகம் பலமுறை எழுந்திருக்கலாம்.

அந்த சந்தேகத்தை இன்று நாங்கள் நிவர்த்தி செய்கிறோம். ஒரு சிலர் இதனை அழகிற்காக செய்யப்படுகின்ற டிசைன் என நினைத்திருக்கலாம். நீங்கள் அவ்வாறு நினைத்திருந்தால், உங்கள் எண்ணத்தை உடனடியாக மாற்றி கொள்ளுங்கள். பொதுவாக விமானங்களின் பல்வேறு அம்சங்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவையாகதான் இருக்கும்.

விமானங்களின் கதவுகள் மற்றும் அவசர கால வழியை சுற்றிலும் தடிமனான கோடு வழங்கப்படுவதும் கூட பாதுகாப்பு தொடர்புடையதுதான். விமானங்கள் வர்த்தக ரீதியில் பறக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான விபத்துக்கள் அரங்கேறின. அதில், நிறைய விபத்துக்கள் மிகவும் அபாயகரமானவையாக இருந்தன.

இந்த விபத்துக்களில் சிக்கிய பலரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. இதற்கான காரணம் மிகவும் சாதாரணமானது. விமானம் விபத்தில் சிக்கிய இடத்தில் வெளியே நிற்கும் மீட்பு குழுவினரால், கதவுகளை வேகமாக கண்டறிய முடியாததுதான் அந்த காரணம். எனவே விமானத்தின் உள்ளே சிக்கியுள்ளவர்களை அவர்களால் விரைவாக மீட்க முடியவில்லை.

பொதுவாக இரவு நேரங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலானது. அதிலும் விமானம் விபத்தில் சிக்கினால் அதிக அளவு புகை வரும். இந்த இரண்டு சூழ்நிலைகளின்போதும், விமானத்தின் உள்ளே சிக்கியிருந்த பலரை மீட்பு குழுவினரால் வேகமாக காப்பாற்ற முடியவில்லை. எனவே அவர்கள் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.

இதற்கு கதவுகளை கண்டுபிடிக்க முடியாதது முக்கியமான காரணம் என்பதால், அதன்பின் விமானங்களின் வண்ணங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. விமானங்களின் கதவுகள் மற்றும் அவசர கால வழியை சுற்றிலும் தடிமனான கோடுகள் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் விமானங்களின் கதவுகளை கண்டறிவது எளிமையாக்கப்பட்டது.

பொதுவாக விமானம் என்ன நிறத்தில் உள்ளதோ, அதற்கு மாறுபட்ட ஒரு நிறத்தைதான் கதவுகள் மற்றும் அவசர கால வழியை சுற்றி பூசுவார்கள். இது கதவுகளை கண்டறியும் பணியை இன்னும் எளிமையாக்கும் என்பதுதான் இதற்கு காரணம். விமானம் விபத்தில் சிக்கி விட்டால், மீட்பு பணிகளில் ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியம்.

கதவுகளை வேகமாக கண்டறிந்தால்தான், உள்ளே இருப்பவர்களை விரைவாக மீட்க முடியும். விமானத்தின் நிறத்திற்கு மாறுபட்ட நிறத்திலான கோடுகளை கதவுகள் மற்றும் அவசர கால வழியை சுற்றிலும் தடிமனாக வழங்குவது, இந்த பணிகளுக்கு உதவி செய்கிறது. விமானத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நுட்பமாக கவனித்தால், நமக்கு நிறைய தகவல்கள் தெரியவரும். அதில், இந்த கோடுகளும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக