இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் யூபிஐ எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே அளவிற்கு நெட்பேங்கிங் சேவையில் உடனடி பணப் பரிமாற்றத்திற்கு இருக்கும் மிக முக்கியமானது IMPS சேவை.
மத்திய அரசும் சரி, ரிசர்வ் வங்கியும் சரி டிஜிட்டல் நிதி பரிமாற்ற சேவைகளை அனைத்துத் துறையில் கொண்டு வர பெரிய அளவில் ஆதரவு அளித்து வரும் நிலையில், நெட்பேங்கிங் சேவையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதிமாக இன்று ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதம் என எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2022ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாகவும், நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.3 சதவீதமாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
IMPS - ரூ.5 லட்சமாக உயர்வு
இதைத் தொடர்ந்து பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த் தாஸ் IMPS பணப் பரிமாற்ற சேவையில் ஒரு நாளுக்கு அதிகப்படியாக 2 லட்சம் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இந்த அளவீட்டை 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
ஏற்கனவே IMPS மற்றும் NEFT பணப் பரிமாற்றத்தை 24 மணிநேரமும் செய்யச் சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பணப் பரிமாற்ற அளவீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதிகப் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் எனத் திட்டமிடுவோர் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் ஒரு நாளுக்கு 5 லட்சம் வரையில் IMPS மூலம் பணத்தை அனுப்பலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் தளத்தில் இருக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற வேண்டும் என்பதற்காகவும், மக்கள் எவ்விதமான பிரச்சனைகளையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மக்கள் மத்தியில் உடனடியாகப் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் நீண்ட கால அடிப்படையில் அதிகப் பலன்களை அளிக்கும்.
யூபிஐ தளத்தின் ஆதிக்கம்
இதேபோல் யூபிஐ தளத்தின் வாயிலாக இந்தியாவில் 2020 ஜூலையில் 2.91 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையில் 2021 ஜூலை மாதம் 6.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜூன் 2021ல் பதிவு செய்யப்பட்ட 5.47 லட்சம் கோடி ரூபாய் சாதனை அளவீடு முறியடிக்கப்பட்டு உள்ளது.
டெபிட் கார்டு பயன்பாடு சரிந்தது
இந்தியாவில் யூபிஐ அறிமுகம் செய்யப்பட்ட பின்பு டெபிட் கார்டு நேரடியாகப் பயன்படுத்திச் செய்யப்படும் பணப் பரிமாற்றம் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதே ஜூலை மாதத்தில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட பரிமாற்றத்தை விடவும் யூபிஐ தளத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பணப் பரிமாற்றத்தின் அளவு 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக