ஸ்போடிபை ஆடியோ நிறுவனத்தில், கொரோனா குறித்து ஜோ ரோகன் நடத்திய நிகழ்ச்சி மூலமாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டன என்று சர்ச்சை நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், சந்தை மதிப்பில் அந்நிறுவனம் மூன்றே நாட்களில் ரூ.200 கோடியை இழந்துள்ளது.
ஸ்வீடனை தலைமையகமாக கொண்ட ஸ்போடிபை நிறுவனம் ஆன்லைன் மியூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் போட்காஸ்ட் (ஆன்லைன் பேட்டிகள்) நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சேவைகளை நடத்தி வருகிறது.
ஆன்லைன் போட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்கி, அதன் மூலம் பிரபலம் அடைந்தவரான ஜோ ரோகனின் சமீபத்திய நிகழ்ச்சிகள் பல சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பருவநிலை மாற்றம் என்பதே ஒரு புரளி என்ற கருத்தில், அவர் அண்மையில் வெளியிட்ட எபிசோட் மூலம் எக்கச்சக்கமாக கண்டனங்களையும், திட்டுகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து மருத்துவர் ராபர்ட் மலோனிடம் பேட்டி கண்டார். அப்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அமெரிக்கர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஒட்டுமொத்த மக்களிடமும் சைக்கோத்தனம் நிலவுகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிராக உலகம் முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் எழும்பி வருகின்றன. ஸ்போடிபை நிறுவனத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், பாப் பாடகர் நீல் யங் தனது பாடல்களை ஸ்போடிபை நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெற்றார்.
இதுமட்டுமல்லாமல், 270 விஞ்ஞானிகள், கொரோனா குறித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து ஸ்போடிபை நிறுவனத்துக்கு கடிதம் எழுதினர். இளவரசர் ஹாரி கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை விபரீதமாக வெடித்துள்ளது.
ஸ்போடிபை நிறுவனத்துடன் ரூ.187 கோடி அளவுக்கு முதலீட்டு ஒப்பந்தங்களை செய்துள்ள ஆர்ச்வால் நிறுவனத்தின் நிறுவனர்கள், ஸ்போடிபை நிறுவனம் அதன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். குறிப்பாக, பொது சுகாதார பிரச்னையின்போது, அதை எதிர்கொள்ள நிறுவனம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில், ஸ்போடிபை நிறுவனத்தின் பங்குச் சந்தைகள் மதிப்புகள் கடந்த வெளிக்கிழமை 19 மாதங்களில் இல்லாத சரிவுடன் நிறைவடைந்தது. குறிப்பாக, பாப் பாடகரின் கண்டனம் தான் இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஸ்போடிபை நிறுவனம் ஒன்று ரோகனை வைத்துக் கொள்ளலாம் அல்லது இந்த யங் இருக்க வேண்டும். இருவரும் ஒன்றாக இருக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, யங்கின் பாடல்களை தங்கள் தளத்தில் இருந்து ஸ்போடிபை நிறுவனம் நீக்கியது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பலர் பின்வாங்கிய நிலையில், பங்குச் சந்தையில் ஸ்போடிபை நிறுவனத்தின் மதிப்பில் ரூ.200 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக