பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
'நோ பார்க்கிங்' (No Parking) பகுதிகளில் வாகனங்களை நிறுத்த கூடாது. அதை மீறி யாராவது வாகனங்களை நிறுத்தினால், அவர்களுக்கு காவல் துறையினர் மூலம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்ட காரணத்தால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை 'டோ' (Tow) செய்து கொண்டு செல்வது வழக்கம். அதாவது பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ரோப் அல்லது சங்கிலியை கட்டி மற்றொரு வாகனம் மூலம் இழுத்து சென்று விடுவார்கள். ஆனால் வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்வதற்கு அவற்றின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்கள் பல்வேறு புகார்களை எழுப்பியுள்ளனர். சில சமயங்களில் வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்வதற்கு தனியார் காண்ட்ராக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். எத்தனை வாகனங்கள் 'டோ' செய்து கொண்டு செல்லப்பட்டதோ, அதை பொறுத்துதான் அவர்களுக்கு வருமானம் வரும்.
எனவே அவர்கள் சில சமயங்களில் வேண்டுமென்றே அதிக வாகனங்களை வலுக்கட்டாயமாக 'டோ' செய்து கொண்டு செல்வதாக வாகன உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் இந்த தனியார் காண்ட்ராக்டர்கள், குண்டர்களை போல் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதும் வாகன உரிமையாளர்களின் குற்றச்சாட்டு.
சில சமயங்களில் தங்களின் வாகனத்தை இந்த தனியார் காண்ட்ராக்டர்கள் சேதப்படுத்துவதாகவும் வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்லும் முறைக்கு வாகன உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
எனவே கர்நாடக மாநில அரசு தற்போது இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்வதற்கு கர்நாடக மாநில அரசு தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளது. ஆனால் இது தற்காலிக தடைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்லும் பணிகளை கர்நாடக மாநில அரசு 15 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இடைப்பட்ட நாட்களில் இது தொடர்பான புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனங்களை பறிமுதல் செய்யும்போது அவை கையாளப்படும் முறை வாகன உரிமையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தி வந்தது. இந்த சம்பவங்களால் ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வாகனங்களை விடுவிப்பதற்கு அதிக லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் இருக்கின்றன.
இது தொடர்பாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில் கர்நாடக அரசு தற்போது தீவிரமாக நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா கூறுகையில், ''வாகனங்களை 'டோ' செய்து கொண்டு செல்வது தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு உரிய தீர்வை காண வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
போக்குவரத்தை எளிமையாக்கவும், 'டோ' செய்வது தொடர்பாக பொதுமக்களுக்கு இருக்கும் கவலைகளை தீர்க்கவும் அரசு விரைவில் முடிவு எடுக்கும். அதிகாரிகளுடன் இது தொடர்பாக நான் ஏற்கனவே ஆலோசனை நடத்தி விட்டேன். முதல் அமைச்சருடன் கலந்து ஆலோசித்த பின்னர் விரைவில் முடிவு அறிவிக்கப்படும்'' என்றார்.
எனவே அடுத்த 15 நாட்களுக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில அரசு இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்பதை தெரிந்து கொள்ள நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக