மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தென்னாப்பிரிக்காவில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவை தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனங்களில் மஹிந்திரா குழுமமும் ஒன்று. இந்நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், தென்-ஆப்பிரிக்காவிலும் நிறுவனம் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
சுமார் 18 ஆண்டு காலமாக நாட்டில் நிறுவனம் வர்த்தகம் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஒட்டுமொத்த காலத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச எண்ணிக்கையிலான வாகனத்தை தென்னாப்பிரிக்காவில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைச் செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பாண்டு ஜனவரியிலேயே சாதனைப்படைக்கும் அளவிற்கு நிறுவனம் புதிய விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது. 2022 ஜனவரி மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,010 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. ஒரே ஒரு மாதத்தில் இத்தனை எண்ணிக்கையில் தென்னாப்பிரிக்காவில் நிறுவனம் வாகனங்களை விற்பனைச் செய்வது இதுவே முதல் முறை என கூறப்படுககின்றது.
ஆகையால், இந்நிகழ்வை நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக கொண்டாடி வருகின்றது. தென்னாப்பிரிக்காவின் தேசிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (National Association of Automobile Manufacturers of South Africa) வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனை நிறுவனத்தின் 'ஆல்-டைம் பெஸ்ட் சேல்' எனவும் அது குறிப்பிட்டுள்ளது. 18 ஆண்டுகளில் முதல் முறையாக அதிக விற்பனை எண்ணிக்கையை எட்டி இருப்பதனாலேயே இவ்வாறு அச்சங்கம் குறிப்பிட்டிருக்கின்றது. கோவிட் வைரஸ் பிரச்னை மற்றும் சிப் பற்றாக்குறை என வாகன உலகமே இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கின்ற வேலையில் இத்தகை சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மஹிந்திரா பெற்றிருக்கின்றது.
இந்த விற்பனை எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் பெற்றதைக் காட்டிலும் 77 சதவீதம் அதிகம் என கூறப்படுகின்றது. மேலும், நிறுவனத்தின் உள் நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட பிக்-அப் ரக வாகனங்களுக்கே தென் ஆப்பிரிக்காவில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் 618 யூனிட்டுகள் பிக்-அப் ட்ரக் விற்பனையாகி இருக்கின்றன. பேக்கி (bakkie) எனும் பெயரில் தென்னாப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் பிக்-அப் ட்ரக்கிற்கு தென்னாப்பிரிக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. மும்மடங்கு அதிக வேகத்தில் இக்காரின் விற்பனை வளர்ந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுமட்டுமின்றி, மஹிந்திரா நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான கேயூவி 100 என்எக்ஸ்டி (KUV 100 NXT) மற்றும் ஸ்கார்பியோ (Scorpio) கார்களுக்கும் தென்னாப்பிரிக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. சிக்கனமான மற்றும் அதிக திறன் கொண்ட கார் பிரியர்கள் மத்தியில் கேயூவி 100 என்எக்ஸ்டி மாடலுக்கும், அட்வென்சர் பயன்பாடு மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்ய விரும்புவோர்கள் மத்தியில் ஸ்கார்பியோவிற்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது.
இந்தியாவிற்கு வெளியே தென்னாப்பிரிக்காவை இரண்டாவது தாயகமாகக் கொண்டு மஹிந்திரா நிறுவனம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்நாட்டில் 2004 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக கால்தடம் பதித்தது. இந்த தருணத்தில் இருந்து இந்தியாவில் எப்படி நிறுவனம் செயல்பட்டு வருகின்றதோ அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் அது செயல்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் சாவாலான ஆண்டுகளாக நிறுவனத்திற்கு அமைந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நல்ல துவக்கத்தைக் கொடுக்கும் வகையில் 2022ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மிக சிறப்பனை விற்பனை வளர்ச்சியை மஹிந்திரா பெற்றிருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக