ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் கேமிங் என்பது உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
மக்களவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டது, இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் பதிலளித்துள்லது. அதில் ஆன்லைன் கேமிங் என்பது உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன்மூலம் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து மத்திய அரசு அறிந்து வைத்திருக்கிறது. அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணையின் படி சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அதேபோல் இதை பின்பற்றி சில மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருக்கிறது. அதேபோல் மத்திய அரசும் தனக்குள்ள அதிகாரத்தின் மூலம் இதை நெறிப்படுத்த தயாராகி அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது என குறிப்பிட்டது.
சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பதும் ஒருவகை போதைதான். ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வந்தது. இதனால் பல குடும்பம் பாதிக்கப்பட்டது அதுமட்டுமின்றி இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். மது மட்டுமில்லை சூதும் ஒருவகை போதைதான். இதில் இப்போது ஜெயித்துவிடலாம், விட்டதை பிடித்துவிடலாம் என சொத்தை இழந்தவர்கள் ஏராளம்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். அதன்படி அதிமுக அரசு நவம்பர் 21, 2020 ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கினார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பல்வேறு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதித்து முந்தைய அதிமுக அரசு சட்டம் போட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பார்க்கையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டதோடு இந்த விதியை ரத்து செய்தது. இதன்மூலம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு ஆன்லைன் சூது பிரியர்கள் மீண்டும் கணக்கை தொடரத் தொடங்கினர். அதோடுமட்டுமின்றி மொத்தமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடியாது என குறிப்பிட்டும் உரிய விதிகளை பிறப்பித்து புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இதை கருத்தாக கொண்டு முறையான விதிமுறைகளுடன் புதிய சட்டம் கொண்டு வர தற்போதைய திமுக அரசு முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை திமுக எதிர் கட்சியாக இருந்த போதே வலியுறுத்தப்பட்டது எனவும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய விரைவில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றம் கூறியப்படி புதிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக