Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற முதியவர் புதிய காரோடு வீடு திரும்பிய அதிசயம்... இளம் வயது கனவு 83 வயதில் நிறைவேறியது

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற முதியவர் புதிய காரோடு வீடு திரும்பிய அதிசயம்... இளம் வயது கனவு 83 வயதில் நிறைவேறியது

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற 83 வயது முதியவர் புதிய காருடன் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களுக்கு வயது என்பது வெறும் எண்கள்தான் என சொல்வார்கள். மும்பையை சேர்ந்த முதியவர் ஒருவரின் விஷயத்தில் இந்த வாக்கியம் உண்மையாகியுள்ளது. ஆம், அவர் தனது முதல் புதிய காரை 83வது வயதில் வாங்கியுள்ளார். பொதுவாக இந்த வயதில் கார்களை ஓட்டுவதற்கு முதியவர்கள் தயங்குவார்கள். சிலருக்கு விருப்பம் இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது.

ஆனால் இவற்றுக்கு நேர் எதிராக 83வது வயதிலும் காரை ஓட்ட வேண்டும் என்ற ஆசையுடன், இந்த முதியவர் தனது முதல் புதிய காரை வாங்கியுள்ளார். இந்த முதியவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் தற்போது நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவரது வாழ்க்கை பயணம் பற்றிய நெகிழ்ச்சியான தகவல்கள் விரிவாக கிடைத்துள்ளன.

இந்த முதியவருக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இளம் வயதிலேயே சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்துள்ளது. ஆனால் அவருக்கு குடும்ப பொறுப்புகள் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. மேலும் சொந்தமாக ஒரு புதிய கார் என்ற தனது கனவை விட குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் அவருக்கு இருந்தது.

எனவே புதிய காரை வாங்குவதற்கு பதிலாக விலை குறைவான செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவதைதான் அவர் வழக்கமாக வைத்திருந்தார். செகண்ட் ஹேண்ட் காரை வாங்கினால் பணத்தை சேமிக்கலாம் என்பதே இதற்கு காரணம். இதற்கிடையே இந்த முதியவரின் பிள்ளைகள் வாழ்க்கையில் நன்றாக 'செட்டில்' ஆக தொடங்கினர். முதியவருக்கு பேர குழந்தைகளும் பிறந்தனர்.

இதன் பின்னர் தனது அடிப்படை தேவைகளுக்காக மற்றொரு யூஸ்டு காரை வாங்க அந்த முதியவர் முடிவு செய்தார். ஆனால் அவரது பிள்ளைகளோ, புத்தம் புதிய காரை ஓட்டுவதற்கே நீங்கள் தகுதியானவர் என வலியுறுத்தினர். இந்த உரையாடல் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின், அந்த முதியவரின் பிள்ளைகள் தங்கள் தந்தைக்காக புதிய கார் ஒன்றை முன்பதிவு செய்தனர்.

அவர்கள் முன்பதிவு செய்தது மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) கார் ஆகும். ஆனால் கார் எப்போது டெலிவரி செய்யப்படும்? என்ற தேதியை அவர்கள் தங்கள் தந்தையிடம் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே கடந்த ஜனவரி 16ம் தேதி அந்த முதியவரின் பேரக்குழந்தைகளில் ஒருவரின் பிறந்த நாள் வந்தது.

அப்போது மதிய உணவு சாப்பிடுவதற்காக அந்த முதியவரை அவரது பிள்ளைகள் வெளியே கூட்டி சென்றனர். ஆனால் மதிய உணவு சாப்பிட்டு முடித்த பின், அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக மாருதி சுஸுகி ஷோரூமிற்கு அந்த முதியவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பெரிய 'சர்ப்ரைஸ்' காத்திருந்தது.

ஆம், அவரது கண்களுக்கு முன்பே அவருக்காக புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் நின்று கொண்டிருந்தது. இந்த நிகழ்வுகள் அந்த முதியவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. டெலிவரி சம்பிரதாயங்கள் முடிந்த பின், அந்த முதியவர் தனது குடும்பத்தினரை தனக்காக வாங்கப்பட்ட புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் கூட்டி சென்றார்.

புதிய காரின் உரிமையாளராக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த காரில் அனைத்து இடங்களுக்கும் பயணிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடும்ப உறுப்பினர்களை சென்று சந்திப்பதுடன், லோனவாலாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அந்த முதியவர் கூறியுள்ளார்.

லோனவாலா என்பது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். அங்கு தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவதாக அந்த முதியவர் தெரிவித்துள்ளார். அந்த முதியவருடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கு நாம் அனைவரும் நம்முடைய வாழ்த்துக்களை இங்கே தெரிவித்து கொள்வோம்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை வயதானவர்களாலும் கூட எளிதாக கையாள முடியும். எனவே முதியவர்கள் மத்தியிலும் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் மிகவும் பிரபலமான காராக திகழ்கிறது. வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக