மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஏன் சன்ரூஃப் வழங்கப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சன்ரூஃப் வசதி தற்போது பிரபலமடைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பலரும் விரும்புவதால், பட்ஜெட் விலையில் கிடைக்கும் கார்களில் கூட தற்போது சன்ரூஃப் வசதியை காண முடிகிறது. ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற மகுடத்தை தலையில் சூடி கொண்டிருக்கும் மாருதி சுஸுகி, சன்ரூஃப் வசதியில் இருந்து விலகியே நிற்கிறது.
ஆம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எந்த ஒரு காரிலும் சன்ரூஃப் வசதி கிடையாது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ், சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற கார்கள் சன்ரூஃப் வசதியை பெறுவதற்கு தகுதியானவை. ஆனால் அந்த கார்களில் மட்டுமல்லாது, எந்த ஒரு காரிலும் மாருதி சுஸுகி நிறுவனம் சன்ரூஃப் வசதியை வழங்குவதில்லை.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் சன்ரூஃப் வசதி வழங்கப்படாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதற்கு இந்தியாவின் 'க்ளைமேட்' முதல் காரணம். உலகில் அதிக வெப்பம் நிலவும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் பெரும்பாலான மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கும். குறிப்பாக கோடை காலங்களில் வெயில் நம்மை சுட்டெரிக்கும்.
எனவே இந்தியாவில் ஆண்டு முழுவதும் கார்களில் ஏசி வசதியை பயன்படுத்தியாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. பொதுவாக வெளிப்புறங்களில் நிலவும் வெப்ப நிலையை விட காரின் உள்ளே வெப்ப நிலை இன்னும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஏசி இல்லாமல் கார்களில் பயணம் செய்வது என்பது சவாலான காரியம்தான்.
குளிர் காலத்தில் வேண்டுமானால் கார்களில் ஏசி-யின் பயன்பாடு குறைவாக இருக்கலாம். இதை தவிர்த்து விட்டு பார்த்தால், ஆண்டு முழுவதும் ஏசி-யை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இங்கு மிகவும் அதிகமாக உள்ளது. ஏசி-யை அதிகமாக பயன்படுத்த வேண்டியுள்ளதால், மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களில் சன்ரூஃப் வசதியை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் குளிரான சூழல் உள்ள பகுதிகளுக்குதான் சன்ரூஃப் மிகவும் ஏற்றது என மாருதி சுஸுகி நிறுவனம் நம்புவதாகவும் தெரிகிறது. குளிரான சூழல் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் காரின் கேபினை வெதுவெதுப்பாக வைத்து கொள்வதற்காக சூரிய ஒளியை அதிகம் சார்ந்திருக்கின்றனர். சூரிய ஒளியை காரின் உள்ளே அனுமதிப்பதற்கு சன்ரூஃப் பயன்படுகிறது.
எனவேதான் குளிரான சூழல் உள்ள பகுதிகளுக்கு சன்ரூஃப் மிகவும் உகந்தது என மாருதி சுஸுகி நிறுவனம் கருதுவதாக கூறப்படுகிறது. இந்தியா போன்ற வெப்பமான நாட்டில் சன்ரூஃப் வசதி மூலம் அதிகப்படியான பலன்கள் கிடைக்காது என்பது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கருத்து. அத்துடன் இங்கு பெரும்பாலானவர்கள் சன்ரூஃப் வசதியை தினமும் பயன்படுத்துவதும் கிடையாது.
எனவே மாருதி சுஸுகி நிறுவனம் சன்ரூஃப்பை அத்தியாவசியமான வசதிகளின் பட்டியலில் சேர்க்கவில்லை. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அடிப்படையான ஒரு கொள்கை காரணமாகவும் கார்களில் சன்ரூஃப் வசதி தவிர்க்கப்படுகிறது. முடிந்த வரை குறைவான விலையில் கார்களை விற்பனை செய்வதும், சர்வீஸ் செய்து தருவதும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கொள்கைகளில் ஒன்று.
ஆனால் கார்களில் சன்ரூஃப் வசதியை வழங்கினால், விலை அதிகரித்து விடும். அத்துடன் சன்ரூஃப் வசதியை வழங்கினால், அதனை முறையாக பராமரிக்க வேண்டும். இதன் காரணமாக சர்வீஸ் செய்வதற்கான செலவும் அதிகரித்து விடும். இதுபோன்ற காரணங்களாலும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களில் சன்ரூஃப் வசதியை வழங்குவதில்லை.
மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களில் சன்ரூஃப் வசதியை வழங்காமல் இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பாதுகாப்பு தொடர்பாக உள்ள அச்சுறுத்தல்தான் அது. சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டி கொண்டு பயணம் செய்தவர்கள் காயமடைந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நிறைய நடந்துள்ளன.
குறிப்பாக குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டி கொண்டு பயணம் செய்வதை குழந்தைகள் அதிகமாக விரும்புவார்கள். ஆனால் திடீரென ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு அதனை சமாளிக்க தெரிவதில்லை. குப்பை போன்ற பொருட்கள் பறந்து வந்து குழந்தைகளை தாக்கிய சம்பவங்களும் கடந்த காலங்களில் நடைபெற்றதுண்டு.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் சன்ரூஃப் வழங்கப்படாமல் இருப்பதற்கு இவைதான் முக்கியமான காரணங்கள். ஆனால் சன்ரூஃப் தொடர்பான தனது கொள்கையை வரும் காலங்களில் மாருதி சுஸுகி நிறுவனம் மாற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. எனவே எதிர்காலத்தில் மாருதி சுஸுகி நிறுவனமும் சன்ரூஃப்பை வழங்கினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக