பொதுவாக கார் பேட்டரிகளின் ஆயுட்காலம் 3-5 ஆண்டுகள் மட்டுமே. பயணங்கள் மற்றும் க்ளைமேட் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து கார் பேட்டரிகளின் ஆயுட்காலம் மாறுபடும். ஒரு பேட்டரியின் ஆயுட்காலம் முடிந்தவுடன், புதிய பேட்டரியை வாங்க வேண்டும். அப்படி புதிய பேட்டரியை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆம்பியர் ஹவர் (Ampere Hour)இதனை சுருக்கமாக Ah என குறிப்பிடுகின்றனர். பேட்டரியால் எவ்வளவு மின்சாரத்தை (Electricity) சேமிக்க முடியும் என்பதை இது குறிக்கிறது. இதனை பேட்டரியின் திறன் (Capacity) என்று கூட கூறலாம். அதிக Ah என்றால், பேட்டரி நீண்ட நேரத்திற்கு சிறப்பாக இயங்கும். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போவதற்கான வாய்ப்புகள் குறைவு.
பேட்டரியின் வயது (Battery Age)
பேட்டரி எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? என்பதை கண்டுபிடித்தால் அதன் வயது எளிதாக தெரிந்து விடும். பேட்டரியின் வயதை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. உதாரணத்திற்கு உங்கள் கார் பேட்டரியில் 5/19 என குறிப்பிடப்பட்டுள்ளது என வைத்து கொள்வோம். அப்படியானால் இந்த பேட்டரி 2019ம் ஆண்டு 5வது மாதம் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும்.
முதலில் உள்ள எண் மாதத்தையும், இரண்டாவதாக உள்ள எண் வருடத்தையும் குறிக்கிறது. ஒரு சில பேட்டரிகளில் எண்களுடன், எழுத்துக்களும் இருக்கும். உதாரணத்திற்கு 8B. அப்படியானால் இந்த பேட்டரி 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும். முதலில் உள்ள எண், பேட்டரி உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டின் கடைசி இலக்கத்தை ஒத்திருக்கும்.
அதாவது 2018. இங்கே B என்பது மாதத்தை குறிக்கிறது. A என்றால் ஜனவரி. அப்படியானால் B என்பது பிப்ரவரி மாதத்தை குறிக்கிறது. இந்த எளிய முறையின் மூலம் பேட்டரி எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும். உற்பத்தி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆன பேட்டரியை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.
கோல்டு க்ராங்க்கிங் ஆம்ப்ஸ் (Cold Cranking Amps)
இதனை சுருக்கமாக சிசிஏ (CCA) என குறிப்பிடுகின்றனர். இது ஒரு ரேட்டிங் ஆகும். குளிரான சூழல்களில், காரின் இன்ஜினை ஸ்டார்ட் செய்வதில் பேட்டரிக்கு இருக்கும் திறனை வரையறை செய்வதற்காக இந்த ரேட்டிங் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிசிஏ ரேட்டிங் அதிகமாக இருக்கும் பேட்டரியை வாங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும்.
சிசிஏ ரேட்டிங் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அதை பொறுத்துதான் பேட்டரியின் 'ஸ்டார்ட்டிங் பவர்' இருக்கும். எனவே அதிக சிசிஏ ரேட்டிங் உள்ள பேட்டரியை வாங்குங்கள். குறிப்பாக குளிர் அதிகமாக உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் அனைவரும் அதிக சிசிஏ ரேட்டிங் உள்ள பேட்டரியை வாங்குவது மிகவும் அவசியமானது.
பேட்டரி சைஸ் (Battery Size)
கார் பேட்டரிகளை பொறுத்தவரை பல்வேறு சைஸ்கள் இருக்கின்றன. அதாவது நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை மாறுபடும். உங்கள் காரின் ஓனர் மேனுவல் (Owner's Manual) மூலமாக உங்களுக்கு தேவைப்படும் பேட்டரி சைஸ் என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அல்லது உங்களுக்கு தெரிந்த மெக்கானிக்கிடம் ஆலோசனை கேட்கலாம்.
நீங்கள் சரியான அளவுடைய பேட்டரியை வாங்குவது மிகவும் அவசியம். அப்போதுதான் பேட்டரி உங்கள் காரில் கச்சிதமாக பொருந்தும். இதுதான் பேட்டரிக்கு பாதுகாப்பு. அத்துடன் அதிர்வுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றாலும், பேட்டரி சரியான அளவில் இருப்பது அவசியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
முந்தைய அனுபவம் (Previous Experience)
புதிய பேட்டரியை வாங்குவதற்கு முன்பு, இதற்கு முன்னர் பேட்டரி வாங்கும்போது உங்களுக்கு எத்தகைய அனுபவம் கிடைத்தது? என்பதை சிந்தித்து பாருங்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளையும் கொடுக்காமல் உழைத்த பேட்டரியை மீண்டும் வாங்குவது குறித்து யோசிக்கலாம். உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களிடமும் ஆலோசனைகளை கேளுங்கள்.
பழைய பேட்டரியின் ஆயுள் (Old Battery Life)
இதற்கெல்லாம் முன்னதாக உங்களிடம் தற்போது இருக்கும் பழைய பேட்டரியின் ஆயுட்காலத்தை ஒரு முறை பரிசோதித்து கொள்ளுங்கள். மெக்கானிக் ஷாப் அல்லது பேட்டரி நிபுணர்களிடம் இதனை நீங்கள் சோதிக்கலாம். உங்களுக்கு கண்டிப்பாக புதிய பேட்டரி தேவையா? அல்லது பராமரிப்பு பணிகளை செய்தால் போதுமா? என்பதை தெரிந்து கொள்வதற்கு இது உதவி செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக