Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

வானிலை மட்டும் காரணமல்ல... விமானங்களை ஏன் ரத்து செய்கின்றனர் தெரியுமா? இந்த ரகசியங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

வானிலை மட்டும் காரணமல்ல... விமானங்களை ஏன் ரத்து செய்கின்றனர் தெரியுமா? இந்த ரகசியங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானங்கள் ஏன் திடீரென ரத்து செய்யப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவரா? அப்படியானால் விமானம் ரத்து செய்யப்படும்போது ஏற்படும் விரக்தியின் வலி உங்களுக்கு தெரியும். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. எனவே பயணிகள் அடுத்த விமானத்திற்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதாகிறது.

பொறுமையான மனநிலை உடையவர்களை கூட இந்த காத்திருப்பு சில சமயங்களில் எரிச்சலடைய செய்து விடுகிறது. சரி, விமானங்கள் உண்மையில் ஏன் திடீரென ரத்து செய்யப்படுகின்றன? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு பின்னணியில் உள்ள காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கணிக்க முடியாத வானிலை

விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக வானிலை பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்தாலோ, மிகவும் குளிரான வானிலை நிலவினாலோ அல்லது பனி புயல் வீசினாலோ விமானங்கள் தரையில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மிக அதிக வெப்பம் சுட்டெரித்தாலும் கூட விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு விடும்.

ஏனெனில் இந்த வானிலைகள் விமானங்களுக்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற சமயங்களில் விமானங்களால் சரியாக செயல்பட முடியாது. எனவே அடுத்த முறை வானிலை சாதகமாக இல்லை என நீங்கள் நினைத்தால், அதற்கு ஏற்றபடி முன்கூட்டியே தயாராகி விடுங்கள். இதற்கு நீங்கள் புறப்படும் மற்றும் சென்று சேரும் இடங்களின் வானிலை அறிக்கைகளை பார்க்கலாம்.

இயந்திர கோளாறுகள்

விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கான முக்கியமான காரணங்களில் இயந்திர கோளாறுகளும் ஒன்று. இயந்திர கோளாறு கண்டறியப்பட்டால், விமானம் புறப்படுவதற்கு முன்பாக அது சரி செய்யப்படும். இதன் காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படலாம். அல்லது விமானம் ரத்தும் செய்யப்படலாம். ஏனெனில் பயணிகளின் பாதுகாப்புதான் முதன்மையானது.

ஊழியர்கள் பற்றாக்குறை

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். இதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதுதான் உண்மை. மற்ற நிறுவனங்களை போலவே விமான நிறுவனங்களுக்கும் சில சமயங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

ஒரே நேரத்தில் பெரும்பாலானவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். அவர்களுக்கு மாற்று ஊழியர்கள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அல்லது க்ரூ உறுப்பினர்களுக்கு (Crew Members) பறப்பதற்கான தகுதி இல்லை என விமான நிறுவனங்கள் அறிவித்தாலும் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு காரணங்கள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தாலும் கூட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விடும். பாதுகாப்பு என வந்து விட்டால், விமான நிறுவனங்கள் மிகவும் சீரியஸாக எடுத்து கொள்ளும். எனவே வெறும் மிரட்டலுக்காக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் என்றால் கூட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அல்லது விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு விடும்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விமான நிலையத்தில் இருக்கும்போது விளையாட்டிற்காக கூட குண்டு வெடிப்பு, தீவிரவாதம் சம்பந்தப்பட்ட பேச்சுக்களை பேசாதீர்கள். நீங்கள் விளையாட்டாக எதையோ பேச போய், அது விபரீதத்தில் முடிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கவனமாக இருங்கள்.

சாஃப்ட்வேர் பிரச்னை

விமான அட்டவணைகள் மற்றும் வழித்தடங்கள் போன்றவை கம்யூட்டர் அல்காரிதம்களை ( Computer Algorithms) சார்ந்தவை. எனவே சாஃப்ட்வேர்களில் ஏற்படும் பழுதுகள் மிகப்பெரிய பிரச்னைகளை உண்டாக்கலாம். அத்துடன் சைபர் அட்டாக் போன்ற மற்ற தகவல் தொழில்நுட்ப பிரச்னைகளாலும் விமானங்கள் ரத்து செய்யப்படலாம்.

பயணிகள் பற்றாக்குறை

விமானங்கள் வானில் பறக்க வேண்டுமென்றால் அதிக செலவாகும். எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவு மட்டுமின்றி விமான நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களையும் செலுத்த வேண்டும். எனவே போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லை என்றாலும் விமானங்கள் ரத்து செய்யப்படும். மிகவும் குறைவான பயணிகளுடன் விமானங்களை இயக்கினால் கடுமையான நஷ்டம் ஏற்படும்.

விமானம் அல்லது இடப்பற்றாக்குறை

ஒரு சில விமான நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பயணிகளை முன்பதிவு செய்யும். உண்மையை சொல்வதென்றால், அவர்கள் அனைவருக்கும் விமானத்தில் இடம் இருக்காது. கடைசி நிமிடத்தில் ஒரு சிலர் முன்பதிவை ரத்து செய்தால், இருக்கைகள் போதிய அளவிற்கு இருக்கும் என்பது விமான நிறுவனங்களின் எண்ணம்.

ஆனால் யாரும் முன்பதிவை ரத்து செய்யாவிட்டால் நிலைமை சிக்கலாகி விடும். அனைத்து பயணிகளும் அமர்வதற்கு விமானத்தில் இடம் இருக்காது என்பதால், விமான நிறுவனங்கள் அந்த விமானத்தை ரத்து செய்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்படுவது துரதிருஷ்டவசமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக