Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 பிப்ரவரி, 2022

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து காரை திருடி சென்ற மன நோயாளி... காரணம் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து காரை திருடி சென்ற மன நோயாளி... காரணம் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கர்நாடக மாநிலத்தில், போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றே தற்போது களவாடப்பட்டுள்ளது.

இது காவல் துறைக்கு சொந்தமான கார் ஆகும். இந்த காரை திருடியவர் பிடிபட்டு விட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இந்த கார் திருட்டு சம்பவம் தற்போது நாடு முழுவதும் கவனம் பெற்றிருப்பதற்கு இந்த சுவாரஸ்யமான தகவல்களே காரணம்.

காவல் துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றுவதற்காகவே போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடி சென்றுள்ளார். காவல் துறையினரின் காரை ஓட்டி பார்க்க வேண்டும் என்பதுதான் அந்த நபரின் நீண்ட நாள் கனவு. இந்த கனவை நிறைவேற்றுவதற்காக அவர் காவல் துறையினரின் காரை திருடி சுமார் 112 கிலோ மீட்டர் ஓட்டி சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் நாகப்பா ஆகும். இவருக்கு தற்போது 45 வயதாகிறது. இவர் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஆன்னிகேரி பகுதியை சேர்ந்தவர் ஆவார். நாகப்பா ஓட்டுனராக வேலை செய்து கொண்டுள்ளார். இலகு ரக மற்றும் கனரக வர்த்தக வாகனங்களை அவர் பல ஆண்டுகளாக ஓட்டி வருகிறார்.

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து காரை திருடி சென்ற மன நோயாளி... காரணம் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

எனவே கர்நாடக மாநிலம் முழுவதும் பயணம் செய்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அத்துடன் அண்டை மாநிலங்களுக்கும் அவர் வாகனங்களை ஓட்டி சென்றுள்ளார். பல்வேறு வாகனங்களை ஓட்டியிருந்தாலும், காவல் துறையினருக்கு சொந்தமான காரை ஓட்ட வேண்டும் என்ற ஆசை அவர் மனதிற்குள் நீண்ட நாட்களாக இருந்து கொண்டிருந்தது.

இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த நாகப்பா சம்பவத்தன்று ஆன்னிகேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அதன் முன்பாக உலாவி கொண்டிருந்தார். அதிகாலை 3.30 மணியளவில் அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே காவலர்கள் சிலர் பணியில் இருந்தனர்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்குள் நாகப்பா நுழைந்தார். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் துறையினரின் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) காரை அவர் நெருங்கினார். அப்போது நாகப்பாவிற்கு சாதகமான சில விஷயங்கள் நடந்தன. ஆம், காவல் துறையினரின் மஹிந்திரா பொலிரோ 'லாக்' செய்யப்படாமல் இருந்தது.

அத்துடன் சாவியும் கூட காரிலேயே வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டதும் நாகப்பா மகிழ்ச்சியடைந்தார். தனது நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது என அவர் உற்சாகத்தில் திளைத்தார். இதன்பின் காரை எடுத்துக்கொண்டு படாகிக்கு அருகே உள்ள மோட்பென்னூர் என்னும் பகுதிக்கு சென்றார். கார் திருடப்பட்ட ஆன்னிகேரியில் இருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவில் மோட்பென்னூர் அமைந்துள்ளது.

மோட்பென்னூர் சென்றடைந்ததும், நாகப்பா காரை நிறுத்தி விட்டார். நீண்ட தூரம் காரை ஓட்டி வந்த களைப்பு காரணமாக, காருக்கு உள்ளேயே அவர் தூங்க ஆரம்பித்தார். நீண்ட நேரமாக காவல் துறையினரின் கார் அங்கு நின்று கொண்டிருந்ததால், உள்ளூர் மக்கள் சந்தேகம் அடைந்தனர். காருக்கு உள்ளே சீருடை அணிந்த காவல் துறையினர் யாரும் இல்லாததால், மக்களின் சந்தேகம் வலுத்தது.

எனவே படாகி காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின்பேரில், படாகி காவல் துறையினர் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். பின்னர் காருக்கு உள்ளே இருந்த நாகப்பாவை அவர்கள் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கார் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. எனவே ஆன்னிகேரி காவல் துறையினருக்கும் அவர்கள் தகவல் அளித்தனர்.

இதன்பேரில் தங்களது காரை திரும்ப பெறுவதற்காக ஆன்னிகேரி காவல் துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். திருடப்பட்ட காரில் எரிபொருள் இருந்துள்ளது. இதுவும் நாகப்பாவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. தனது கனவை நிறைவேற்றுவதற்காக நாகப்பா காரை திருடியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏன் மோட்பென்னூர் சென்றார்? என்பதற்கான காரணம் வெளியாகவில்லை.

தற்போது நாகப்பா மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது நாகப்பா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நாகப்பா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதான் அவரது முதல் குற்றச்செயல் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். தனது கனவை நிறைவேற்றிய நாகப்பா தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக