Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 பிப்ரவரி, 2022

இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

 Bounce Electric Scooter Infinity E1 Launch Price Rs 69k - New TVC

பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் நுழைந்துள்ளன. அதில் சில நிறுவனங்கள் நற்பெயரையும் சம்பாதித்துள்ளன.

பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்று பவுன்ஸ் (Bounce). குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஹை-எண்ட் லக்ஸரி மோட்டார்சைக்கிள்களையும், மற்றவர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்பட கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்களையும் பவுன்ஸ் நிறுவனம் வாடகைக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெறாமல் பவுன்ஸ் நிறுவனம் இதனை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். சந்தையில் மிக நீண்ட காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சூழலில், பவுன்ஸ் நிறுவனம் தனது சொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதற்கு முடிவு செய்தது.

இதன்படி இன்ஃபினிட்டி இ1 (Bounce Infinity E1) எனப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பவுன்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை 60 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். தங்களது புத்தம் புதிய இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்ப்பதற்கு பவுன்ஸ் நிறுவனம் எங்களை அழைத்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்பதையும், இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 டிசைன்

முதலில் டிசைன் பற்றி பார்த்து விடலாம். ரெட்ரோ ஸ்டைலில் தனித்துவமான டிசைனில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எல்இடி பகல் நேர விளக்குகளும் வட்ட வடித்திலேயே வழங்கப்பட்டுள்ளன. ஹை மற்றும் லோ பீம்களை இரண்டு ப்ரொஜெக்டர் யூனிட்கள் கையாள்கின்றன.

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் குறைவான பாடி லைன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பின் பகுதியில் எல்இடி டெயில்லைட்கள் இடம்பெற்றுள்ளன. டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களும் கூட எல்இடி யூனிட்கள்தான். ஒட்டுமொத்தத்தில் சாலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 வசதிகள்

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தகவல்களை ரைடருக்கு வழங்குகிறது. ட்ரிப் மீட்டர்கள், பேட்டரி லெவல், ரேஞ்ச், ஸ்பீடு, நேரம் உள்பட பல்வேறு தகவல்களை இது காட்டுகிறது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியையும் இது கொண்டுள்ளது. நீங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருக்கும்போது, உங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளை காண்பிக்க இது அனுமதிக்கிறது.

டயல் பெரியதாகவும், தகவல்களை பார்ப்பதற்கு எளிமையாகவும் உள்ளது. சூரிய வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருக்கும் சமயங்களிலும் கூட தகவல்களை எளிமையாக பார்க்கலாம். இரவு நேரத்தில், வெள்ளை நிற பின்னொளி இருப்பதால், அப்போதும் எளிமையாக காண முடிகிறது. அதேபோல் இருக்கைக்கு அடியிலும் ஓரளவிற்கு நல்ல இடவசதி உள்ளது. ஆனால் முழு-சைஸ் ஹெல்மெட்டை இதற்குள் வைக்க முடியாது. இருக்கைக்கு அடியில்தான் மாற்றி கொள்ள கூடிய பேட்டரி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர டைப்-ஏ யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட்டையும் இது பெற்றுள்ளது.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 மோட்டார் செயல்திறன், ரேஞ்ச் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

முதலில் மோட்டார் பற்றி பார்த்து விடலாம். பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 2kWh பேட்டரி தொகுப்பும், 2.2kW எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 85 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இது உண்மையிலேயே மிக சிறப்பான விஷயம்.

பவர், ஈக்கோ மற்றும் ட்ராக் ஆகிய ரைடிங் மோடுகளையும் பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈக்கோ மோடில் மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்திலும், பவர் மோடில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும். மணிக்கு 65 கிலோ மீட்டர் என்பதுதான், பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பஞ்சர் ஏற்பட்டு விட்டால், ட்ராக் மோடு மிகவும் உதவிகரமாக இருக்கும். ட்ராக் மோடை ஆக்டிவேட் செய்து விட்டால், மணிக்கு 3 கிலோ மீட்டர் என்ற வேகத்தில், நீங்கள் ஸ்கூட்டருடனே நடக்கலாம். அதனை தள்ள தேவையில்லை. அதே நேரத்தில் ரெகுலர் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 100-120 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம்.

அதாவது 2 மணி நேரத்திற்கு உள்ளாகவே பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பிவிட்டால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈக்கோ மோடில் 65 கிலோ மீட்டர் தூரமும், பவர் மோடில் 50 கிலோ மீட்டர் தூரமும் பயணிக்கும். இது நடைமுறை பயன்பாட்டில் கிடைக்க கூடிய ரேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுன்ஸ் நிறுவனம் பெங்களூரில், பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை (Battery Swapping Stations) அமைத்துள்ளது. அத்துடன் நாடு முழுவதும் இத்தகைய ஸ்டேஷன்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ஸ்வாப்பிங் வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் 850 ரூபாய் என்ற மாத சந்தா திட்டத்தில் இணைய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷனுக்கு சென்று, ஸ்கூட்டரில் உள்ள பழைய பேட்டரியை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை மாற்றி கொண்டு கிளம்பலாம். இந்த செயல்முறைகள் முழுமையாக முடிவடைவதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. ஒரு முறை பேட்டரியை மாற்றுவதற்கு 35 ரூபாய் மட்டுமே செலவு ஆகும்.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைகள் அகலமாகவும், சௌகரியமாகவும் உள்ளன. ஆனால் இந்த இருக்கையின் முன் பகுதி, வழக்கமாக இருப்பதை காட்டிலும், சற்று அகலமாக இருக்கிறது. எனவே ரைடர் தனது கால்களை சற்று அகலமாக விரித்து உட்கார வேண்டும். இது கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக குறைவான உயரம் கொண்டவர்கள் அசௌகரியத்தை சந்திக்கலாம். சவாரி தரத்தை பொறுத்தவரையில், பவுன்ஸ் நிறுவனம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். விறைப்பான சஸ்பென்ஸன் காரணமாக, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டும்போது சௌகரியமான அனுபவம் கிடைக்கவில்லை.

குண்டும், குழியுமான சாலைகளில் வேகமாக பயணிக்கும்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிலையாக இருப்பதில்லை. அதேபோல் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஹேண்டில்பார் ரைடருக்கு மிக நெருக்கமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹேண்டில்பாரை இடது அல்லது வலது பக்கத்தில் முழுமையாக திருப்பும்போது, உங்கள் முழங்கால்களில் இடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் உயரமானவர் என்றால், இது நிச்சயமாக நடக்கலாம். எனினும் ஆக்ஸலரேஷன் 'ஸ்மூத்' ஆக உள்ளது. பவுன்ஸ் நிறுவனம் தெரிவித்த அதிகபட்ச வேகத்தை எளிமையாக எட்ட முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் மற்றும் செயல்திறன் ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது. குறிப்பாக பவுன்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு சில குறைகள் இருக்கவே செய்கின்றன. எனினும் அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என நம்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக