இந்தியாவின் முதல் இ-டிராக்டரை மெக்சிகோ நாட்டில் விற்பனைச் செய்வதற்காக அந்நாட்டைச் சேர்ந்த ஓர் நிறுவனத்துடன் செலஸ்டியல் இ-மொபிலிட்டி நிறுவனம் கை கோர்த்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் செலஸ்டியல் இ-மொபிலிட்டி (Cellestial E-Mobility). இந்நிறுவனம் இ-ட்ராக்டர்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. அதாவது, எலெக்ட்ரிக் ட்ராக்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நாட்டில் விற்பனைக்கு வந்த முதல் மின்சார டிராக்டர் இதுவே ஆகும்.
இந்த டிராக்டரையே நிறுவனம் தற்போது வெளிநாடு ஒன்றில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டு சந்தையிலேயே இ-டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டைச் சேர்ந்த குருபோ மார்வெல்ஸா (Grupo Marvelsa) எனும் நிறுவனத்துடன் செலஸ்டியல் இ-மொபிலிட்டி கூட்டு சேர்ந்திருக்கின்றது.
இந்த இணைவின் வாயிலாகவே மெக்சிகன் சந்தையில் செலஸ்டியல் நிறுவனம் உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் டிராக்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, நிறுவனத்தின் இ-டிராக்டர்கள் குருபோ மார்வெல்ஸா நிறுவனத்தின் விற்பனையகங்கள் வாயிலாக விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன.
இந்நிறுவனத்திற்கு சொந்தமாக 2,500-க்கும் அதிகமான விற்பனையகங்கள் மெக்சிகோவில் செயல்பட்டு வருகின்றன. இத்துடன், 800 அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, 35க்கும் அதிகமான எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.
செலஸ்டியல் இ-மொபிலிட்டி நிறுவனமானது விவசாயம், விமான நிலையம் மற்றும் கூட்ஸ் கேரியர் ஆகிய பிரிவுகளுக்கு பயன்படக் கூடிய வாகனங்களை பிரத்யேகமாக தயாரித்து வருகின்றது. மின்சாரத்தால் இயங்கக் கூடிய வாகனங்களை மட்டுமே இந்த பிரிவுகளுக்கு ஏற்ப நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது.
அந்தவகையில் விவசாய பணிகளுக்கு பயன்படும் வகையில் நிறுவனம் உருவாக்கியதே இ-டிராக்டர். இதனை நிறுவனம் 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகத்தில் இருந்து தற்போது வரை சுமார் 1,800 யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்திருக்கின்றது.
உண்மையில் இது ஒரு நல்ல வரவேற்பு ஆகும். எலெக்ட்ரிக் டிராக்டருக்கு இத்தகைய சூப்பரான வரவேற்பு கிடைத்திருப்பதை கொண்டே உலக நாடுகளிலும் விற்பனைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் செலஸ்டியல் இ-மொபிலிட்டி களமிறங்கியிருக்கின்றது.
இதன் ஒரு பகுதியாக, அதாவது, முன்னோட்டமாக மெக்சிகோ சந்தையில் இ-டிராக்டரை கூட்டணியின் அடிப்படையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, செலஸ்டியல் இ-மொபிலிட்டி நிறுவனம் இன்னும் சில நாடுகளிலும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய டிராக்டர்களைக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செலஸ்டியல் நிறுவனத்தின் இ-டிராக்டர் மூன்று விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடக்கின்றது. 27 எச்பி, 35 எச்பி மற்றும் 55 எச்பி ஆகிய தேர்வுகளிலேயே அந்த டிராக்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்டவைகளாக காட்சியளிக்கின்றன.
அந்தவகையில், 27 எச்பி அதிகபட்சமாக 13.5 Kw பவரை வெளியேற்றக் கூடியதாக காட்சியளிக்கின்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 20 கிமீ ஆகும். மேலும், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த டிராக்டரில் 150 Ah திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைவிட அதிகம் திறன் கொண்டவையாக 35 எச்பி-யும், 55 எச்பி மாடலும் இருக்கின்றன. இதில் 35 எச்பி மாடல், 21 Kw பவர், மணிக்கு 25 கிமீ வேகம் மற்றும் 75 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களைக் கொண்டிருக்கின்றது. 55 எச்பி மாடல், 36 Kw முதல் 40 Kw வரையும், உச்சபட்சமாக ஓர் முழு சார்ஜில் 75 கிமீ ரேஞ்ஜும், மணிக்கு 30 கிமீ வேகம் ஆகிய திறன்களைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இத்தகைய சூப்பர் திறன்களைக் கொண்ட எலெக்ட்ரிக் டிராக்டர்களையே மெக்சிகோ சந்தையில் இந்திய நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. செலஸ்டியல் இ-மொபிலிட்டி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக