Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 பிப்ரவரி, 2022

எதிர்காலத்தில் முக்கிய எரிபொருளாக மாறும் GREEN HYDROGEN.. உலகளவில் ஏற்றுமதி செய்யவும் திட்டம் - நிதின் கட்கரி!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் க்ரீன் ஹைட்ரஜன் (green hydrogen) எதிர்காலத்தின் எரிபொருள் என்றும், க்ரீன் ஹைட்ரஜனை உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் இந்தியா தீவிரமாக செயல்பட உள்ளதாகவும் கூறி இருக்கிறார். 

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவுடன் இணைந்து இந்தியாவில் க்ரீன் ஹைட்ரஜன் அடிப்படையிலான முன்னோடித் திட்டத்தைத் தொடங்க அரசு செயல்பட்டு வருவதாகவும் நிதின் கட்கரி கூறி இருக்கிறார். வரும் மார்ச் 15-16-க்குள் அரசு இந்த முன்னோடி திட்டத்தை தொடங்க கூடும் என்று கட்கரி கூறினார்.

இது தொடர்பாக மேலும் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியன் ஆயிலின் ஃபரிதாபாத் ஆய்வகத்தில் இருந்து பசுமை ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றப்பட்ட டொயோட்டா கார் வரும் மார்ச் 15-ஆம் தேதி ஹரியானாவிற்கு அருகிலுள்ள நகரத்தில் சோதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறி இருக்கிறார். பசுமை ஹைட்ரஜன் அதாவது க்ரீன் ஹைட்ரஜனானது புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நிலையான ஆற்றலாக மற்றும் net-zero emissions-களுக்கு மாற்றத்தின் சாத்தியமான வினையூக்கியாக கருதப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை ( renewable electricity) பயன்படுத்தி தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரிப்பதன் மூலம் க்ரீன் ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. க்ரீன் ஹைட்ரஜனை தயாரிப்பது தொடர்பாக தனது யோசனைகளையும் மத்திய அமைச்ச நிதின் கட்கரி பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நாம் தற்போது பசுமை ஹைட்ரஜனை நோக்கி நகர்கிறோம்... சாக்கடை மற்றும் கழிவு நீரிலிருந்து இதை தயாரிக்க வேண்டும் என்பது என் எண்ணம்... குறைந்த செலவில் க்ரீன் ஹைட்ரஜனை தயாரிக்க சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கு கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோலியம் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகிறோம். ஆனால் இந்த நிலையை மாற்ற எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், சிஎன்ஜி (கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்), எலெக்ட்ரிக், பயோ-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மற்றும் க்ரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை மாற்றாக பயன்படுத்த விரும்புகிறோம் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டு உள்ளார்.

மும்பை, புனே மற்றும் டெல்லி போன்ற நகரங்கள் எலெக்ட்ரிக் பேருந்துகளை தேர்வு செய்வதால், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை (EVs) அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளில், நல்ல உற்பத்தி எண்ணிக்கைகளை பெறுவதன் மூலம் எலெக்ட்ரிக் டூ வீலர்கள், த்ரீ வீலர்கள் மற்றும் 4 வீலர்கள் மற்றும் பேருந்துகளின் விலை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு சமமாக இருக்கும். லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிப்பதுடன், ஜிங்க்-அயன், சோடியம்-அயன் மற்றும் அலுமினியம்-அயன் பேட்டரிகளை இந்தியா உருவாக்கி வருகிறது, இந்த புதிய கெமிஸ்ட்ரி நாட்டின் தொழில்துறைக்கு உதவியாக இருக்கும். மேலும் இது குறித்து நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.

5 ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறும், இந்தத் துறையின் டர்ன்ஓவர் ரூ. 7.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.15 லட்சம் கோடியாக உயரும். இது அதிகபட்ச வேலை வாய்ப்பைக் கொடுக்கும் துறை. இது ஜிஎஸ்டி-யில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அதிகபட்ச வருவாயை அளிக்கிறது என கூறியுள்ளார் நிதின் கட்கரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக