இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்ஐசி விளங்குகிறது. இதன் நிகர சொத்து மதிப்பு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் பிராண்ட் மதிப்பு 8.655 பில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 6.8 சதவீதம் டாலராக உயர்ந்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்திற்கு 1.2 கோடிக்கு மேலான முகவர்கள் மற்றும் 25 கோடிக்கும் மேலான பாலிசிகளை எல்.ஐ.சி. வைத்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். உலகிலேயே 3வது இடத்தில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பொது பங்குகள் விரைவில் வெளியாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1ம் தேதி நடந்த பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்திருந்தார்.
அதன்படி வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பொது பங்குகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளியாகும் பட்சத்தில் மொத்தம் ஒதுக்கப்படும் பங்குகளில் 10 சதவீத பங்குகள் பாலிசிதார்களுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த ஐபிஒ குறித்து பணியாளர்கள் எதுவும் பேசக் கூடாது என நிர்வாகம் கூறியிருக்கிறது. ஐபிஒ-வை கையாளுவதற்கு வங்கியாளர்களை நியமனம் செய்யும் வேலையையும் மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலாளர் துஹின் காந்தா பாண்டே, “"சில்லறை விற்பனை சாளரத்தின் கீழ், பாலிசிதாரர்களுக்கான பங்குகளை 10 சதவீதம் வரை ஒதுக்கவும், சில தள்ளுபடிகளை வழங்கவும் விதிகளை வகுத்துள்ளோம். இதில் ஊழியர்களுக்கும் பங்கு ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். பொதுப் பங்கு வெளியீட்டுக்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிர்வாகம் வரும் வாரத்தில் தாக்கல் செய்யும் என்றும், செபி-யின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு மார்ச் மாதத்தில் எல்ஐசி பொதுப் பங்கு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு சதவீத பங்குகள் விற்பனைக்கு வரும் என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் "குறைந்தது 5% நிச்சயமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என ஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ. 78 ஆயிரம் கோடியை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே எல்ஐசி பங்குகளை பொதுவில் வெளியிடுவதன் மூலமாக கிடைக்கும் வருமானம் இந்த இலக்கை எட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்வொர்க் 18ன் குழும ஆசிரியர் இன்-சீஃப் ராகுல் ஜோஷியுடன் ஒரு பிரத்யேக உரையாடலில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்ஐசி ஐபிஓ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது இந்த வருடமே நடக்க வேண்டும். எல்ஐசி ஐபிஓவில் இருந்து இந்த வருடமே நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக