Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 மார்ச், 2022

ஒரு சில விமான நிலையங்கள் இரவு நேரத்தில் மூடப்பட்டு விடும்... இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா?

ஒரு சில விமான நிலையங்கள் இரவு நேரத்தில் ஏன் மூடப்படுகின்றன? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை நாம் பார்த்துள்ளோம். இதில், ஊரடங்கு மிக முக்கியமானது. ஊரடங்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் விதித்தன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது வேறு விஷயம்.

ஆனால் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது, இரவு நேரங்களில் பயணம் செய்வதற்கு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் பயணம் செய்ய தடையை சந்திப்பது மக்களுக்கு புதுமையான ஒரு விஷயமாக இருந்தது. இந்த செய்தியில் படிக்கவுள்ள மற்றொரு இரவு நேர தடையும் உங்களுக்கு புதுமையாக இருக்கும்.

பொதுவாக ரயில் நிலையங்களும் மற்றும் பேருந்து நிலையங்களும் அனைத்து நேரங்களிலும் இடைவிடாமல் செயல்படும். 24/7 என்ற அடிப்படையில் அவை இயங்குகின்றன. வருடத்தின் 365 நாட்களும் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டே இருப்பதால், ரயில் நிலையங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கு ஓய்வு என்பது கிடையவே கிடையாது.

ஆனால் விமான நிலையங்கள் அப்படிப்பட்டவை கிடையாது. உலகில் ஒரு சில விமான நிலையங்கள் இரவு நேரத்தில் செயல்படாது. இரவு நேரங்களில் அவை மூடப்பட்டு விடும். இந்த விமான நிலையங்கள் பகல் நேரத்தில் மட்டும்தான் இயங்கும். இரவு நேரங்களில் விமான நிலையங்களை மூடி வைப்பதற்கு ஒலி மாசுபாடுதான் (Noise Pollution) காரணமாக உள்ளது.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் ஒரு சில விமான நிலையங்கள், இரவு நேரத்தில் மூடப்பட்டு விடும். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் விமான நிலையங்கள் செயல்படாது. இரவு நேரத்தில் மூடப்படும் நேரம், விமான நிலையங்களை பொறுத்து மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த நேரத்தில் அவசரமாக வரும் விமானங்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படும். அதாவது தொழில்நுட்ப கோளாறு போன்ற பிரச்னைகளால் உடனடியாக தரையிறங்க வேண்டிய விமானங்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படும். மற்ற விமானங்கள் தரையிறங்குவதற்கோ அல்லது புறப்படுவதற்கோ அனுமதி வழங்கப்படாது.

விமானங்கள் தரையிறங்கும்போதும், புறப்படும்போது அதிக சத்தம் எழும். விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு இது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. பகல் நேரத்திலாவது இந்த பிரச்னையை ஓரளவிற்கு சமாளித்து விடலாம். ஆனால் இரவு நேரங்களில் அதிக சத்தம் காரணமாக மக்கள் தூங்க முடியாமல் தவிக்கும் நிலை காணப்படுகிறது.

மிக அதிக இரைச்சல் ஏற்படுவதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்துதான், இரவு நேரங்களில் விமான நிலையங்களை மூடும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 1960களிலேயே இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அன்றைய காலகட்டத்தில் விமானங்களின் இன்ஜின் தற்போதைய அளவை காட்டிலும் மிக அதிக சத்தத்தை எழுப்புவதாக இருந்தது.

ஆனால் தற்போது தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து விட்டதால், விமான இன்ஜின்கள் எழுப்பும் சத்தம் ஓரளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதும் கூட விமானங்களின் இன்ஜின் அதிக இரைச்சலை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கின்றன. முன்பு இருந்ததற்கு தற்போது பரவாயில்லை என்ற நிலையை விமான பொறியியல் துறை எட்டியுள்ளது என்று சொல்லலாம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போதும் விமான நிலையங்களால் இரவு நேரத்தில் தூங்க முடிவதில்லை என பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி கொண்டுதான் உள்ளனர். உண்மையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தூக்கம் கெட்டு போனால், எதிர்காலத்தில் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்.

இதுதவிர விமானங்களில் இருந்து வெளிப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வாயுக்களும் முக்கியமான ஒரு பிரச்னையாகதான் பார்க்கப்படுகிறது. விமானங்களில் ஒலி மாசுபாடு மட்டுமல்லாது, காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதை ஓரளவிற்கு கட்டுப்படுத்தும் முயற்சியாகதான் இரவு நேரங்களில் ஒரு சில விமான நிலையங்கள் மூடப்பட்டு விடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக