Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 மார்ச், 2022

சீப்பு வியாபாரியின் சாமர்த்தியம்...!!

ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்.

யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தார்.

மொட்டை அடித்துள்ள புத்த பிட்சுகளிடம் சீப்பு வியாபாரமா? என்று மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.

சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி, அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டார்.

ஒரு மகன் சொன்னான்...

'நான் இரண்டு சீப்புகளை புத்த மடாலயத்திற்குள் விற்றேன்"

வியாபாரி எப்படி? என கேட்டார்.

'புத்த பிட்சுகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.

இரண்டு புத்த பிட்சுகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்"

இன்னொரு மகன் சொன்னான்.

'நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்"

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டார்... எப்படி?

'வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்கு வருபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.

அப்படி கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்.

ஒரு பெரிய கண்ணாடியும், சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்"

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினார்.

மூன்றாம் மகன் சொன்னான்... 'நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்"

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றார்... எப்படி?

'அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன்.

அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம்? என்று என்னை கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன்.

அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்" என்றான்.

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல.

புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க, இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள்.

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக