கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் என்னும் ஊரில் அருள்மிகு காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோவையிலிருந்து அவினாசி செல்லும் வழியில் சின்னியம்பாளையம் என்னும் ஊர் உள்ளது. சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் மூலவர் இரு காரை மரங்களுக்கிடையே சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
மகா மண்டப நுழைவாயிலின் இருபுறமும் கம்பீர தோற்றத்தில் துவார பாலகர்களான ஜெயன் மற்றும் விஜயன் காட்சியளிக்கின்றனர்.
மூலவருக்கும், உற்சவருக்கும் தனித்தனி பெரிய திருவடிகள் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு.
வேறென்ன சிறப்பு?
அருள்மிகு காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயிலின் உள் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருடனான யோக நரசிம்மர் சன்னதியும், தன்வந்திரி பகவான் சன்னதியும் அமைந்துள்ளன.
வடக்குப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் துளசி மாடம் உள்ளன. வெளிச்சுற்று பிரகார பாதையின் இருபுறமும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் மிளிர்கின்றது.
இத்திருக்கோயிலின் நுழைவு வாயிலில் கோபுரம் இல்லாத ராஜ மண்டபமானது கோஷ்டத்தில் சங்கும், சக்கரத்துடன் பெரிய திருவடி மற்றும் சிறிய திருவடியுடன் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலின் மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவ மூர்த்தியாகிய பெருமாளையும், எதிரே கருடாழ்வாரையும் தரிசிப்பது சிறப்பு.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை அன்று மூலவருக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடைபெறும்.
கார்த்திகை மாதம் பிரியாவிடை விண்ணப்பத் திருநாள், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி மகோற்சவம் மற்றும் புரட்டாசி மாதம் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் திருக்கல்யாண மகோற்சவம் ஆகியவை இத்தலத்தின் முக்கிய விழாக்களாகும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை, குழந்தைப்பேறு, உடல்நல பாதிப்புகள் நீங்க இத்தலத்தில் நடைபெறும் புரட்டாசி திருக்கல்யாண வைபவத்தில் கலந்துக்கொண்டு பெருமாளையும், தாயாரையும் வழிபட்டால் உடனே நிறைவேறும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் இறைவனுக்கு புது வஸ்திரம் சாற்றியும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக