ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை என்னும் ஊரில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
ஈரோட்டில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் சென்னிமலை உள்ளது. சென்னிமலையில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
எந்த தலத்திலும் இல்லாத வகையில் இத்தலத்தில் முருகப்பெருமான் இரண்டு தலைகளுடன் காட்சியளிக்கிறார். இவரே அக்னி ஜாத மூர்த்தி ஆவார்.
முதன்முதலாக இத்தலத்தில்தான் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்தது.
தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு திருக்கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய பொதி காளைகள் மூலம் தினமும் அடிவாரத்திலிருந்து திருமஞ்சனத் தீர்த்தம் மலைக்குக் கொண்டு செல்வது தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு.
ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி தேரில் நான்கு ரத வீதிகளிலும் உலா வருகிறார். இதேபோன்று, பங்குனி உத்திர திருவிழாவுக்கு என்று தனித்தேர் இவருக்கு உண்டு.
வேறென்ன சிறப்பு?
வறட்சி நிலவும் காலத்தில் கூட இத்தலத்தின் தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் சன்னதியின் முன்புறம் தண்ணீர் வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தம் அதிசயமாகும்.
வள்ளியும், தெய்வானையும் சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் தனிச்சன்னதியில் தவம் செய்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
அம்மன் சன்னதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின்நாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சித்திரை வருட பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
கல்யாணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செவ்வாய் தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் முருகனுக்கு அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், முடி இறக்கி காது குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக