ஜப்பானில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இப்போது ஒரு புதிய வகை டைனோசர் பற்றிய தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் நகங்கள் பற்றிய பரிணாமத் தகவலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
இந்த புதைபடிமம் தெரிசினோசொரஸ் (Therizinosaurus) எனப்படும் டைனோசர்களின் குழுவிற்குச் சொந்தமானது என்றும் கூறியுள்ளனர். இந்த டைனோசர்களின் நகங்கள் நீளமான கத்திகள் போன்று கூர்மையானதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கூர்மையான கோர நகங்களைக் கொண்ட டைனோசர்
இவ்வளவு நீளமாகக் கூர்மையான கோர நகங்களைக் கொண்ட இந்த டைனோசர் உண்மையில் சாது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்ப முடியவில்லை அல்லவா? இந்த Therizinosaurus பற்றி இன்னும் பல சுவாரசிய தகவலும் விஞ்ஞானிகளால் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதைப் பற்றி அறிந்துகொள்ளலாம் வாங்க.
இந்த வகையான புதைபடிமங்கள் ஆசியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன மற்றும் மங்கோலியா (Mongolia) மற்றும் சைன் (Chine) போன்ற நாடுகளில் தெரிசினோசர்களின் புதைபடிமங்கள் நிறைந்துள்ளன.
145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றி திரிந்த டைனோசர்
ஆராய்ச்சியாளர்கள், சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், ஜப்பானில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தெரிசினோசொரஸ் புதைபடிமத்தைப் பற்றி விவரித்துள்ளனர். இந்த தெரிசினோசொரஸ் இரண்டு கால்களைப் பயன்படுத்தி நடக்கும் டைனோசர் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது முதன்மையாக தாவர வகை மற்றும் மூன்று கால்விரல்களைக் கொண்டிருக்கும் சாதுவான டைனோசர் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த உயிரினம் சுமார் 145 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரகத்தில் சுற்றித் திரிந்ததாகத் தெரிகிறது.
இது தெரிசினோசொரஸின் வேறுபட்ட இனமா?
இருப்பினும், புதிய புதைபடிமமானது தெரிசினோசொரஸின் வேறுபட்ட இனமாகும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் பேரலிதெரிசினோசொரஸ் ஜபோனிகாஸ் (Paralitherizinosaurus japonicas) என்று பெயரிட்டுள்ளனர். இது ஒரு பகுதி முதுகெலும்பு மற்றும் ஒரு பகுதி மணிக்கட்டு மற்றும் முன்கால் கொண்ட கொக்கி வடிவ நகங்களுடன் இந்த புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது முதலில் 2008 ஆம் ஆண்டில் ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள புதைபடிமங்கள் நிறைந்த ஓசுஷினாய் அமைப்பிலிருந்து வேறுபட்ட ஆராய்ச்சியாளர்களின் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
82 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வேறு இனம்
ஆரம்பத்தில், பழங்கால ஆராய்ச்சியாளர்கள் இது தெரிசினோசொரஸுக்கு சொந்தமானது என்று நம்பினர், ஆனால், சரியான ஒப்பீட்டுத் தரவு இல்லாததால் அதை உறுதிப்படுத்த முடியாமல் போனது.
இப்போது, முன்கால் நகங்களின் உருவவியல் அடிப்படையில் தெரிசினோசொரஸை வகைப்படுத்த உதவும் தரவுகளின் வளர்ச்சியுடன், விஞ்ஞானிகள் புதைபடிமத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தனர். சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய பகுப்பாய்வு மூலம், புதைபடிமமானது 80 மில்லியன் முதல் 82 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தெரிசினோசர் இனத்தைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
கோரமான கூர்மை நகங்களால் இந்த டைனோசர் செய்தது இதை தானா?
கால் எலும்பு டைனோசரின் வாள் போன்ற நகத்தை வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த டைனோசரின் கூர்மையான நகங்கள் மற்ற உயிரினங்களைக் கிழித்தெறியப் பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மற்ற உயிரினங்களை விட தாவரங்களை மட்டுமே வெட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த டைனோசர் அதன் நகங்களை ஆக்கிரமிப்புக் கருவிகளாகப் பயன்படுத்தாமல், புதர்கள் மற்றும் மரங்களைத் தன் வாய்க்கு அருகில் இழுத்துச் சாப்பிடப் பயன்படுத்தியது, என்று தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தின் ராய் எம். ஹஃபிங்டன் புவி அறிவியல் துறையின் ஆராய்ச்சிப் பேராசிரியரான அந்தோனி ஃபியோரிலோ கூறியுள்ளார்.
நிலத்தில் இறந்து, கடலில் அடித்துச் செல்லப்பட்ட டைனோசர் இனம்
நிலத்தில் இறந்து, கடலில் அடித்துச் செல்லப்பட்ட டைனோசர் இனம்
இந்த கோர நகங்கள் கொண்ட சாதுவான டைனோசர் நிலத்தில் இறந்து, கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று புதைப்படிவத்தை கண்டறிந்த விஞ்ஞானி குழு தெரிவித்துள்ளது.
இந்த மாதிரியைக் கொண்டு டைனோசரின் அளவைக் கண்டறிவது கடினமாக இருந்தாலும், அது நிச்சயமாக ஒரு பெரிய உயிரினமாக இருந்திருக்க வேண்டும் என்று ஃபியோரிலோ தெரிவித்துள்ளார். இந்த டைனோசர் படிமம் கிடைத்த இடத்திற்கு அருகில் இன்னும் சில எலும்புகள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் ஆராய்ச்சியாளர்கள் அடுத்தகட்ட தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக