Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம்...-3 ஒரு இனிய பயணத் தொடர்!


கலங்கலான நீர்க்குடுவையில் அலையும் துகள்கள் பிறகு மெல்ல மெல்ல அடிப்படிவாக அமர்வதுபோல இருப்பூர்தியில் நெருக்கிய கூட்டத்தினர் ஆங்காங்கே அமர்ந்தனர். மேலும் சிலர் இரண்டு கம்பிகளுக்கிடையே தொட்டில் கட்டி ஏறிப் படுத்துக்கொண்டனர். இருப்பூர்தித் தொட்டிலுக்கு இலவயமாகவே தாலாட்டு கிடைக்கும். என் உடலும் தகடுபோல் இருந்திருந்தால் அந்தத் தொட்டிலில் ஏறிப் படுக்க விரும்பிருப்பேன்.

வழியில் கூடூர் (குட்டூர் ?) என்னும் நிலையத்தில் பச்சை விளக்கின்றி வண்டி நின்றது. இருப்பூர்தி நிலையத்தின் வணிகர்கள் மொய்மொய்யென்று மொய்த்தனர். எதை வாங்கினாலும் பத்து உரூபாய்தான். ஒரு தேநீர் வாங்கிக் குடித்தேன். ஆந்திரத்திற்குள் இருக்கின்ற நிலையங்கள் தூய்மையாக இருக்கின்றன என்பதை முதற்பார்வையிலேயே உணர்ந்தேன். நிலையத்திற்குள் மக்கள் நடமாட்டம் குறைவு, ஒவ்வொரு நிலையமும் ஊர்க்கு நடுவில் அமையாமல் ஓரஞ்சாரமாக அமைந்திருப்பதுகூட தூய்மைக்குக் காரணமாக இருக்கலாம்.

தமிழ்நாட்டிலும் ஒவ்வோர் இருப்பூர்தி நிலையமும் ஊர்க்கு வெளியேதான் கட்டப்பட்டன. ஆனால், இருப்பூர்தி நிலையத்தைச் சுற்றியே இங்கே ஒவ்வோர் ஊரும் பெருகிப் பெரிதாயிற்று. தமிழ்நாட்டு இருப்பூர்தி நிலையங்களில் மக்கள் நடமாட்டமும் மிகுதி. இரண்டு மாநிலங்களின் இருப்பூர்தி நிலையத்தின் நடைமேடைச் சீட்டு விற்பனையைக் கணக்கிட்டாலே உண்மை விளங்கும்.

வயல்வெளிகளின் கண்கொள்ளாக் காட்சிகளில் மெய்ம்மறந்திருந்தபோது இருப்பூர்தி விஜயவாடாவை நெருங்கிக்கொண்டிருந்தது. சிறு சிறு பாலங்களில் சடசடவென்று கடந்துபோகும் இருப்பூர்தி பேராறுகளில் அளவான விரைவோடும் இசைப்பிசகில்லாத தடக் தடக் ஒலியோடும் பாலங்களைக் கடக்கும்.

ஆந்திரத்தில் நாம் முதலில் கடக்கவேண்டிய பேராறு பெண்ணை ஆறு. பெண்ணை என்பதற்குப் பனைமரம் என்று ஒரு பொருளுண்டு. இராயலசீமைப் பகுதியில் தோன்றும் அவ்வாறு தாடிபத்ரி, ஜெம்மலமடுகு ஆகிய ஊர்களின் வழியாகப் பாய்ந்து நெல்லூர்க்கு அருகே குணகடலில் (வங்கக் கடலில்) கலக்கிறது. தாடிபத்ரியில் உள்ள தாடி என்பதற்கும் பனை என்றுதான் பொருள். பெண்ணையாற்றின் துணையாறான சித்ராவதி ஆறும் பேராறுதான். பழந்தமிழகத்தின் வடவெல்லையாக ஆந்திரத்தின் இந்தப் பெண்ணையாற்றைத்தான் குறிப்பிடுவார்கள்.

வடபுலத்துப் படைகள் தென்னகத்திற்குள் புகுவதைத் தடுத்து அரண்களாக இருந்து காத்தவை பெண்ணை, கிருட்டிணை நதிகள்தாம். 597 கிலோமீட்டர்கள் பாய்கின்ற பெண்ணை ஆறு காவிரிக்குச் சற்றே சிறிது. குடகிலிருந்து புகார் வரைக்குமான காவிரியின் நீளம் எண்ணூறு கிலோமீட்டர்கள். பெண்ணையாற்றின் தங்கயைப்போல் நமக்கு வாய்த்த ஆறுதான் தென்பெண்ணை. வட தமிழகத்தில் அவ்வப்போது சிறுவெள்ளம் பாய்கின்ற நதியாக தென்பெண்ணை ஆறுதான் நமக்கு மிஞ்சியிருக்கிறது.

இந்தியாவில் பாயும் எல்லா ஆறுகளுக்கும் பெண்பெயர்தான் என்றும் பிரம்மபுத்திர ஆற்றுக்கு மட்டும்தான் ஆண்பெயர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அது பிற்கால இடைச்செருகல் கருத்து. அவ்வாறு பெயரிடல் தமிழ் வழக்கில்லை என்று நான் மறுப்பேன். கொற்றலை, கூவம், அடையாறு, தண்பொருநை, நொய்யல், கல்லாறு, மஞ்சளாறு, மணிமுத்தாறு என்பன நம் ஆறுகளின் தூய தமிழ்ப்பெயர்கள். இவை இயற்கைப் பெயர்களாக இருப்பதைக் காண்க.

விஜயவாடாவை நெருங்கியதும் கிருட்டிணை ஆறு இடைப்படும். கிருட்டிணையும் கோதாவரியும் உலகின் எவ்வொரு நதிகளோடும் ஒப்பிடத்தக்க நீர்ப்பெருக்கை உடையவை. கிருட்டிணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாகார்ச்சுன சாகர் அணைக்கட்டைப் பார்த்தால் இது நிலநடுக்கடலோ என்று வியக்க வேண்டியிருக்கும். நாகர்ச்சுன சாகரின் அணைக்கட்டுக்கு உலகின் மிகத் தொன்மையான நாகரிகப் பள்ளத்தாக்கு ஒன்று பலிகொடுக்கப்பட்டிருப்பதை அறிவீர்களா ? சாதவாகனப் பேரரசின் தலைநகரப் பகுதிதான் அது. தமிழ்ச்சங்க காலத்தோடு தொடர்புடைய அவ்வரசர்களின் ஆட்சிமொழியாக தமிழும் பிராகிருதமும் இருந்தன. அந்தத் தமிழிலிருந்துதான் தெலுங்கு கிளைத்திருக்க வேண்டும். நாகார்ச்சுன அணையின் நடுத்தீவு ஒன்றில் அந்தச் சாதவாகன அரசின் தொல்பொருள் சின்னங்களைக் காத்து வருகிறார்கள்.

கிருஷ்ணா என்று வடமொழிச் செல்வாக்கின்படி இப்போது அந்நதியை அழைக்கிறார்கள். அவ்வாற்றுக்கு அப்பெயரைச் சூட்டியது பிற்கால நிகழ்வாகத்தான் இருக்கவேண்டும் என்று ஆராய்ந்தேன். நல்ல விடை கிடைத்தது. கிருஷ்ணவேணி என்னும் பெண் பெயரைத்தான் அவ்வாற்றுக்குச் சூட்டியிருக்கிறார்கள். அதையே கிருஷ்ணை என்று சுருக்கி அழைத்திருக்கிறார்கள். அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டபோது கிருஷ்ணா ஆயிற்று. நாம் எதையும் ஆங்கிலத்தை அடியொற்றியே எழுதிப் பழக்கப்பட்டவர்களாயிற்றே... முல்லைப் பேரியாறு என்பதை ஆங்கிலத்தில் படித்தபடி முல்லைப் பெரியார் என்று எழுதுகிறோமே... அதன்படியே கிருஷ்ணை என்றெழுதாமல் கிருஷ்ணா என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கர்கள் இப்பெயர்கள்மீது கேள்வியே எழுப்ப மாட்டார்கள். கிருஷ்ணா என்று போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால், கிருஷ்ணாவைத் தற்பவத் தமிழாக்கியதில் நாம் தவறிழைக்கவில்லை. கிருட்டிணை (கிருஷ்ணை) என்றே எழுதுகிறோம். இந்நதியின் உண்மையான பெயர் என்ன ? மகாராட்டிரத்தின் சதாரா மாவட்டம் மகாபலேச்சுவரத்தில் தோன்றி 1300 கிலோமீட்டர்கள் பாய்ந்து குணகடலில் கலக்கிறது. இந்நதி தோன்றுமிடம் கரிசல் மண்ணுக்குப் பெயர்பெற்ற மகாராட்டிரப் பகுதி. அதனால் நதிவெள்ளம் கன்னங்கரேல் என்றுதான் இருக்கும். அதன் அடிப்படையில் கன்னபெண்ணை என்று தெலுங்கில் அழைத்திருக்கிறார்கள். கிருஷ்ணை என்பது கருநிறத்தோடு தொடர்புடைய சொல்லாயிற்றே.... அதனால் கன்னபெண்ணையைக் கிருஷ்ணா என்று கூறிவிட்டார்கள்.

கிருட்டிணை நதிக்குக் 'கரும்பெண்ணை' என்ற நல்ல தமிழ்ப்பெயரும் இருக்கிறது. பெண்ணைக்கு எப்படிச் சித்திராவதி ஆறோ அதுபோன்றே கரும்பெண்ணையின் துணையாறு துங்கபத்திரை. துங்கபத்திரையும் சித்திராவதியும் துணையாறுகள் என்ற இலக்கணத்திற்குள் அடங்காத பேராறுகள். ஆந்திரர்களுக்குக் கிட்டிய தனிப்பெருங்கொடை கரும்பெண்ணை ஆறுதான். கரும்பெண்ணையைவிடப் பேராறான கோதாவரியைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் ஆந்திரர்கள் கரும்பெண்ணையால்தான் நன்றாக வாழ்கின்றார்கள். சென்னைக்கு நீர் தருவதும் அதே கரும்பெண்ணை அன்னைதான்.

காவிரியாறு கடல்கலக்கும் முன்னர் தோன்றி வளர்ந்த திருச்சிராப்பள்ளியைப்போல, பெண்ணைக்கு நெல்லூரும் கரும்பெண்ணைக்கு விஜயவாடாவும் கோதாவரிக்கு இராஜமுந்திரியும் அமைந்திருக்கின்றன. நீர்ப்பெருக்கு குறைந்துவரும் பேராறுகளில் ஒன்றாக கரும்பெண்ணையை மதிப்பிட்டிருக்கிறார்கள். விஜயவாடாப் பாலத்தில் கரும்பெண்ணையில் வெள்ளம் இல்லைதான். ஆனால், ஆங்காங்கே ஆற்றுப்படுகையில் தேங்கிய நீர்க்குளமும் அவற்றுக்கிடையே இணைப்பதைப்போல் நீரோட்டமும் இருக்கின்றன.

இத்தொடரில் ஆறுகளைப் பற்றி விரிவாகப் பேசுவது என் விருப்பம். ஆறுகளையும் நீர்நிலைகளையும் பற்றி அறிந்து வியந்து பேசுவதுதான் அவற்றைக் காக்கும் உணர்ச்சியைத் தூண்டுவதாகும். முற்காலத்தில் மன்னர்களை 'வளநாடன், நீர்நாடன், புனல்நாடன்' என்று புகழ்ந்தது எதற்கு? அவ்வாறு புகழ்ந்தால்தான் அப்புகழ்ச்சிக்குக் குறையேற்படக்கூடாது என்று நீர்நிலைகளைப் போற்றிக் காப்பான். இக்கட்டுரையில் ஆறுகளைப்பற்றி மயங்கிப் பேசுவதும் படிப்போர்க்கு இயற்கையைக் காக்கும் உணர்ச்சியைத் தூண்டுவதற்குத்தான். விஜயவாடாவை இருப்பூர்தி நெருங்கியது. வண்டிக்குள் சுந்தரத் தெலுங்கில் பேச்சொலிகள் கேட்கத் தொடங்கின. 

- தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக