Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம் - பகுதி 7: ஓர் இனிய பயணத்தொடர்

பேருந்து நிறுத்தத்திலிருந்து பொர்ராக் குகைகளுக்கு ஆறு கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். இரண்டு மலைகளை ஏறி இறங்கனால் அடுத்தும் வரும் ஒரு மலைமுகட்டின் பக்கவாட்டு விளிம்பில் அக்குகைகள் இருக்கின்றன. அந்த மலைத்தொடர்க்கு அனந்தகிரி மலைவரை (Anatagiri Hill Range) என்பது பெயர். கடல் மட்டத்திலிருந்து ஐயாயிரம் அடிகள்வரை உயரமுடைய காளிகொண்டல் என்ற சிகரப்பகுதியும் அங்கிருக்கிறது. உதகையைப் போன்ற பரப்பளவில் ஏற்காட்டை விடவும் சற்றே உயரத்தில் அமைந்த மலைத்தொடர் என்று அரக்குப் பள்ளத்தாக்குப் பகுதியைக் கூறலாம்.
வழியோரத்தில் நீரோடை ஒன்று அளவான நீரோட்டத்தோடு இருந்தது. அதன் படுகையிலிருந்த மணலை அப்பகுதியினர் அள்ளிக்கொண்டிருந்தனர். அரக்குப் பள்ளத்தாக்கில் குடியிருப்போர் பலரும் தொல்குடிகள். அவர்களுடைய உடற்கட்டைப் பார்த்தவுடன் தெரிகிறது.

Exploring Odhisha, travel series - 7
ஆந்திரர்களைப் பொறுத்தவரை யாரோடும் துணிந்து பேச்சு கொடுக்கலாம். நாமாக இருந்தால் "யாரிவர்... நம்மிடம் ஏன் பேசவேண்டும் ?" என்று குறுகுறுப்பாக எண்ணுவோம். ஆனால், ஆந்திரர்களுக்குப் புதியவர்களிடம் பேசுவதில் முதல்தடையேதும் எழுவதில்லை. நம்மை மதித்துப் பேசுகிறாரே என்கிற மலர்ச்சிதான் முகத்தில் தோன்றும். முடிந்தவரை சிரித்த முகத்தோடு உரையாடுவார்கள். புதியவரோடு உரையாடிக் கடுகடுப்பான எதிர்வினையை நீங்கள் பெறவே முடியாது. நாம் செய்யும் குறும்புகளால் அவர்கள்தாம் விலகிப்போவார்களே தவிர, நம்மைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

Exploring Odhisha, travel series - 7
மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்களிடம் அவ்விடத்தில் குளிக்கத் தகுமா என்பதைப்போல் சைகையில் கேட்டேன். இங்கே கலங்கலாக இருப்பதால் இன்னும் சற்று மேலே சென்று தெளிந்த நீரில் குளிர்வீர்களாக என்பதைப்போல் வழிகாட்டி அனுப்பினர். அவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் தெளிந்த நீர்த்தேங்கல் இருந்தது. ஓடையின் நடுவிலமைந்த தடாகம் அது. இளங்குளிரான நீரில் நெடுநேரக் குளியல். எழுந்து உடைமாற்றிக்கொண்டு வழியில் சிற்றூண் உண்டுவிட்டு பொர்ராக் குகை முகப்பை அடைந்தோம்.

Exploring Odhisha, travel series - 7
பகலுணவு கட்டிக்கொண்டு குகைக்குள் பணியாற்றும் காவலர்கள் செல்லத் தொடங்கியிருந்தனர். குகைக்குள் இருக்கும் சிவலிங்கப் பூசாரிகள், வழிகாட்டிகள் என்று பலரும் உள்ளே நுழையத் தொடங்கினர். பொர்ராக் குகைப் பகுதியிலேயே சிறு மலைக்கிராமம் இருக்கிறது. குகையில் பணிபுரிவோர்க்கு என்று தொழிலாளர் நலச்சங்கத்தின் அறிவிப்பு பலகையைப் பார்த்தேன்.
குகைப்பாதையை ஒட்டிய பகுதி செங்குத்துச் சரிவாக இறங்குகிறது. அதன் அடியாழத்தில் கோஸ்தானி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. கோ என்றால் பசு. ஸ்தானி (ஸ்தனம்) என்றால் பால்மடி. பசுப்பால்மடி என்ற பெயரில் பொர்ராக் குகையோரத்தில் ஓடும் ஆற்றுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

Exploring Odhisha, travel series - 7
வழியோரத்தில் மூங்கில்களைக் கணுக்கணுவாக வெட்டிக்கொண்டிருந்தார்கள். அங்கே மூங்கில் கோழிக்கறி மிகவும் புகழ்பெற்ற உணவாம். உருட்டு திரட்டான மூங்கில்களைக் கணுதோறும் இடைவெளி விட்டு ஓரடிக்கு ஒன்றாக வெட்டி அதனுள் காரக்குழைவு பூசிய கோழிக்கறியை அடைத்து நெருப்பில் வாட்டுகிறார்கள். மூங்கிலின் மேற்பரப்பு கரியாகும்மட்டும் தீயில் சுடுகிறார்கள். உள்ளிருக்கும் கறி நன்கு வெந்துவிடுகிறது. அதை ஒரு தட்டில் பரிமாறுகிறார்கள். ஒரு மூங்கில் கோழி இருநூற்றைம்பது உரூபாய். மூங்கிலால் செய்யப்பட்ட குவளைகள் குடுவைகள் என பழங்குடிப் பொருள்கள் பலவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Exploring Odhisha, travel series - 7
பொர்ராக் குகையின் நுழைவுக் கூண்டு திறக்கப்பட்டிருந்தது. நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு நுழைவாயிலை அடைந்தோம். அந்தத் தடுப்பிலிருந்து சிறிது தொலைவு நடந்து மடிந்து திரும்ப வேண்டும். ஆந்திரத்தின் கடப்பை மாவட்டத்திலுள்ள பிலம் குகைகளுக்கு மூன்று முறைகள் போயிருக்கிறேன். அந்தக் குகையைவிடவும் இது எப்படிப்பட்டது என்று அறியும் ஆவலால் மனம் பரபரப்படைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக