Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம் - பகுதி 8: ஓர் இனிய பயணத்தொடர்

பொர்ராக் குகையை நோக்கிச் செல்லும் பாதை ஓரிடத்தில் செங்குத்தாக வளைந்தது. வளைந்த இடத்தில் நமக்கு நேர் எதிரே குகையின் வாயிற்பகுதி கண்ணில் பட்டது. 

பார்த்தவுடன் "அடேங்கப்பா....!" என்று வாய்விட்டு வியந்தேன். ஒரு மலையின் பக்கவாட்டுச் சரிவில் மிகப்பெரிய வட்டமாய் ஒரு துளை போட்டால் எப்படி இருக்கும் ? பொர்ராக் குகையின் வெளித் திறப்புப் பகுதி அகன்று திறந்த மலைத்தாயின் வாய்போல் இருந்தது. 

கடப்பை மாவட்டத்தில் நான் மூன்று முறை சென்று பார்த்திருந்த பிலம் குகைகள் கிலோமீட்டர் கணக்கில் நீளமுள்ளவைதாம், ஆனால் பிலம் குகை தட்டையான நிலப்பரப்பின்மேல் அமைந்திருக்கிறது. 

சமநிலம் ஒன்றில் கிணறுபோல் இறங்கும் குழிதான் பிலம் குகையின் வாயில். ஆனால், பொர்ராக் குகைக்கு செங்குத்தாய் எழுந்த தோரண வாயில் அமைந்துவிட்டது. எல்லா மலைகளிலும் குகைகள் என்ற பெயரில் பாறையிடுக்குகளையே பார்த்திருக்கிறோம். 

பொர்ராக் குகைதான் உள்ளே ஓர் ஊரே வாழக் கூடிய அளவுக்குப் பெரிதாய்ப் பரந்து விரிந்திருக்கிறது. பிலம் குகையானது தண்ணீர்க் குழாயைப் போல உருண்டையான குடைவுகளில் சென்றுகொண்டே இருப்பது. பொர்ராக் குகையோ அதற்கு நேரெதிராக வான் தொடும் விதானங்களையும் ஆழமாய்ச் செல்லும் பாதாளங்களையும் கொண்டது. 

குகைக்குள் ஆங்காங்கே பொத்தல்கள் இருக்கின்றன. அதன் வழியாக வானத்தைப் பார்க்க முடியும். உள்ளே கதிரொளி விழுகிறது. மலைமேலிருக்கும் அந்தத் திறப்புகளில் தவறி விழுந்து எண்ணற்றோர் உயிரிழந்திருக்க வேண்டும். பொர்ராக் குகைகள் நூற்றைம்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்க வேண்டும் என்று கணித்திருக்கிறார்கள். 

அஃதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான குகைகள். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. நாம் பார்க்கின்ற எல்லாமே கோடிக்கணக்கான ஆண்டுகள் பழையவைதாம். நள்ளிரவில் ஒரு விண்மீனின் ஒளியைப் பார்க்கிறீர்கள். 

அது மின்விளக்கின் ஒளியைப் பார்ப்பதைப் போன்றதில்லை. நீங்கள் பார்க்கும் விண்மீன் ஒளிக்கதிர் அப்போது அங்கே ஒளிர, இப்போது இவ்விடத்திலிருந்து அதைப் பார்க்கிறீர்கள் என்றா நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை. நம்மை அடைந்த விண்மீனின் ஒளி பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. விண்வெளியில் அத்தனை ஒளியாண்டுகள் பயணம்செய்து இப்போது உங்களை அடைந்த ஓர் ஒளிக்கதிரைத்தான் பார்க்கிறீர்கள். 

உங்கள் விழித்திரையில் படும் விண்மீனின் ஒளிக்கதிர் எண்ணிப் பார்க்க முடியாத பழைமைப்போதில் தோன்றியது. மெய்சிலிர்க்கிறதுதானே ? அந்தச் சிலிர்ப்புத்தான் பொர்ராக் குகைகளைப் பார்க்கையில் ஏற்படுகிறது. குகை வாயிலில் இருக்கை வரிசைகள் போடப்பட்டுள்ளன. குகையைப் பார்த்துவிட்டு மேலேறி வருவோர் அவ்விருக்கைகளில் அமர்ந்து மூச்சு வாங்குகின்றனர். 

அரை வட்டக்கல் வானவில்லைப்போல வாயில் பகுதி இருக்கிறது. அங்கிருந்து இறங்க கடப்பைக் கல்பாவிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக்கட்டுகளில் இறங்கினால் குகையின் உள்முதல் முகப்பை அடையலாம். முகப்புப் பகுதியில் இருந்தபடி உள்ளே போகவேண்டிய குகைக்குடைவைப் பார்க்கலாம். வானளாவிய சாம்பல் புகைச்சுருள்போல அந்தக்குகை உள்ளே செல்வது தெரிகிறது. 

குகைக்குள் நூற்றுக்கணக்கான விளக்குகளால் ஒளிபாய்ச்சுகின்றனர். அவை அடிக்கடி நிறம்மாறுகின்றன. அந்நிறமாற்றம் ஏற்படுத்தும் மெய்ம்மயக்கத்தைச் சொற்களால் விளக்க இயலாது. அங்கே சென்றுதான் உணர முடியும். உள்முகப்பில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் மூத்ததும் இளையதுமான இரண்டு பெண்மணிகள் அமர்ந்திருந்தனர். 

அவர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்ததை வைத்துப் பார்க்கையில் தம் குடும்பச் சச்சரவுகளை அலசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது. அதலபாதாளக் குகைகளிலும் அவர்களை ஆட்டிப் படைக்கும் குடும்பத் தளைகளை எண்ணிக்கொண்டேன். 

குகையின் பலவிடங்களில் சிவலிங்கங்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கு மலர்சூடி மாலையிட்டு வழிபாடு நிகழ்த்தும் பூசாரிகளும் அமர்ந்திருக்கின்றனர். சுற்றுவட்டாரப் பகுதியினர் பொர்ராக் குகையின் சிவலிங்கங்களை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சிவராத்திரிதோறும் இக்குகைகளிலுள்ள சிவலிங்கங்களை உள்ளூர்வாசிகள் திரளாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக