Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 டிசம்பர், 2017

கலிங்கம் காண்போம் - பகுதி 9: ஓர் இனிய பயணத்தொடர்

பொர்ராக் குகைக்குள் நுழைந்தவுடன் முன் வளாகத்தைப்போல் பெருங்குடைவான பகுதி ஒன்றிருக்கிறது. அங்கே அமர்வதற்கு இருக்கைகள் இட்டிருக்கிறார்கள். 

அவ்விடத்தில் சற்று நேரம் அமர்ந்து நம்மை இளைப்பாற்றிக்கொண்டு உள்ளே செல்வது நலம். குகையின் கீழாக இறங்கும் படியில் இறங்கினால் ஓரிடத்தில் தடுப்பு அமைத்து வைத்திருப்பதைப் பார்க்க முடியும். 

அவ்விடத்தில் நமக்கு எதிரே இருக்கும் பெரிய உடைப்பின் வழியாக உள்ளே பார்க்க முடிகிறது. அங்கே பாறையிடுக்களுக்கு இடையே ஓடும் குகை நீரோடை தெரிகிறது. மென்மையான ஓடைச் சலசலப்பும் கேட்கிறது. உள்ளே நீண்டு கீழிறங்கினாற்போல் செல்லும் 

அந்நீரோடையின் இடையிடையே உள்ள பொந்துகளின் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளிறங்குகிறது. அந்த வெளிச்சம்தான் நீரோடையைப் பார்ப்பதற்கு உதவுகிறது. 

பூமிக்குள் நரம்புபோல் செல்லும் அவ்வோடை கண்காணாத தொலைவில் கோஸ்தானி ஆற்றில் ஒரு நீரூற்றாகக் கலந்துவிடுகிறது. அங்கிருந்து மேலும் மேலும் சுழன்றும் வளைந்தும் ஏறியும் இறங்கியும் செல்ல வேண்டும். 

குகையின் கூரைப்பகுதிக்கும் குகையின் தாழ்வான பகுதிக்கும் இடையே 230 அடிகள் உயர வேறுபாடு இருக்கின்றது. அப்படியானால் குகையின் கூரைக்கும் தளத்துக்கும் இடையிலுள்ள பெருந்திறப்பைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். 

பொர்ராக் குகைகள் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்பதால் அவற்றுக்குள் கோடானு கோடி ஆண்டுகளால் நிகழ்ந்த குகை வினைகளுக்குரிய தடயங்கள் ஏதேனும் இருக்க வேண்டும், இல்லையா ? புவியியல் அறிஞர்களின் ஆர்வம் அவற்றில்தானே செல்லும் ? ஆம். கோடானு கோடி ஆண்டுகளுக்கு முந்திய பாறை வினைகள் அக்குகைக்குள் நிகழ்ந்திருக்கின்றன. 

கூரையிலிருந்து நீர்ச்சொட்டுகளின் தொடர்ச்சியான வழிவுகளால் ஊசி முனைகளைப் போன்ற தொங்கும்பாறைப் படிவங்கள் தோன்றியிருக்கின்றன. இவற்றைத் தொங்குவீழ்படிவுகள் (Stalactites) என்று அழைக்கிறார்கள். இவற்றை ஆங்கிலப் படங்களிலோ பனிப்பாறைகள் மிகுந்துள்ள பகுதிகளிலோதான் நாம் காண முடியும். 

பொர்ராக் குகைகளில் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இத்தகைய தொங்குவீழ்படிவுகள் காணப்படுகின்றன. மேலிருந்து கீழே விழும் நீர்ச்சொட்டுகள் தொடர்ந்து ஒன்றின்மீது ஒன்றாய்ப் படிந்து தரையின்மீதும் படிவுகளை உருவாக்கியிருக்கின்றன. 

இவற்றைத் தேங்குவீழ்படிவுகள் (Stalagmites) என்று புவியியலில் அழைக்கின்றார்கள். கூரையிலிருந்து விழுந்தவை கூர்முனையோடும் தரையிலிருந்து எழுந்தவை மழுங்கு முனையோடும் இருக்கின்றன. அந்த மழுங்கு முனைகள் உள்ள வீழ்படிவுகளைச் சுயம்பாய்த் தோன்றிய சிவலிங்கங்கள் என்று வழிபடுகின்றார்கள். 

ஆங்காங்கே அத்தகையை சிவலிங்களுக்கு மாலையிட்டு வழிபாடு செய்யும் உள்ளூர்ப் பூசாரிகளும் அமர்ந்திருக்கின்றனர். கூரையிலிருந்து தளத்திற்கு வந்த தொங்குபடிவமும், தரையிலிருந்து மேலாக வளர்ந்த தேங்குபடிவமும் ஒரு கட்டத்தில் ஒன்றாகச் சேர்ந்துவிட்டன. அ

வற்றைப் பார்க்கையில் ஆலமரத்தின் அடிமரத்தைப்போல் உருண்டு திரண்ட பெருங்குகைத்தூண்களாகக் காட்சியளிக்கின்றன. தொங்குகின்ற படிவங்களை நிறம்மாறிக்கொண்டே இருக்கும் வண்ண விளக்கொளியில் பார்க்கையில் மாய யதார்த்தக் கற்பனைகளில் தோன்றும் உருவங்களைப்போல் இருக்கின்றன. 

விளிம்புகளில் குஞ்சங்கள் தொங்கும் இராட்சதக் குடைகளைப்போல் அவை மேலிருந்து தொங்குகின்றன. குகையின் ஓரிடத்தில் கிழக்குக் கடற்கரை இருப்பூர்தித்துறை (East Coast Railway) ஓர் அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறது. அப்பலகைக்கு நேர்மேலே இருப்புப்பாதை செல்கிறது என்பதுதான் அந்த அறிவிப்பின் நோக்கம். 

பெருந்தூண்களாய் அமைந்த ஓரிடத்திற்குச் சுழல்படிகள் அமைத்திருக்கிறார்கள். நேர் செங்குத்தாக ஏறும் அப்படிகளில் நீர்த்துளிகள் சொட்டியவாறே இருக்கின்றன. கொஞ்சம் ஏமாறினாலும் வழுக்கி விழவேண்டியதுதான். கைப்பிடிக் கம்பிகளை இறுக்கப்பற்றிக்கொண்டு முயன்று ஏறினால் அந்தத் தூணுக்குள் வாயிற்கதவின் அளவுக்குப் பெரும்பிளவு இருக்கிறது. 

மாடக்குகைபோல் இருக்கும் அவ்விடத்தில் ஒரு சிவலிங்கத்திற்கு வழிபாடு நடக்கிறது. குகைக்குள் வருவோர் எல்லாரும் அந்த இலிங்கத்தை வணங்கிச் செல்கிறார்கள். குகைக்குள் நிலவும் குளிர்ந்த தட்பவெப்பமும் ஓசையற்ற பேரமைதி நிலையும் இடையிடையே கேட்கும் நீர்த்துளிச் சொட்டலோசையும் என் நினைவை விட்டு என்றும் அகலாதவை. ஓரிடத்தில் அகன்று விரிந்திருக்கும் குகைப்பகுதி இன்னோரிடத்தில் குனிந்து செல்லுமளவுக்குக் குறுகலாகவும் இருக்கிறது. 

குகையின் முடிவு ஒரு பெருங்கூடத்தைப்போல் காணப்படுகிறது. அங்கே நின்றவாறு குகையின் வெளிப்பகுதியைக் காண இயலாது. நான் சென்றிருந்தபோது இடையே ஒருமுறை மின்வெட்டு ஏற்பட்டு குகை விளக்குகள் அனைத்தும் அணைந்தன. அப்போது உள்ளிருந்த சுற்றுலாப் பயணிகள் ஓவென்று குரலெழுப்பினர். 

அவரவர் கையிலிருந்த கைப்பேசிகளில் சிறு விளக்கேற்றினர். பிறகு உடனே மின்சாரம் வந்துவிட விளக்குகள் ஒளிர்ந்தன. இருட்குகையில் மாக்கருளில் நின்றிருந்த அந்த அருநொடிகள் எவர்க்கும் எந்நிலையிலும் வாய்க்காதவை. குகைமனிதன் மட்டுமே உணர்ந்தவை. அதை நானும் உணர்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக