இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சேரமான் பெருமாள் அல்லது கழறிற்றறிவார்
நாயனார் சேர நாட்டு மன்னன். மகோதை என்னும் ஊரில் இருந்து கொண்டு கி.பி. 871
ஆண்டுகளைச் சார்ந்து அரசாண்டு வந்தார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகச்
சேர்க்கப்பட்ட போது சேரமான் பெருமாள் நாயனார் என வழங்கப்பட்டார். இவர் சிவ
பூசையின் போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு
பெற்றிருந்தார் என்றும், அதனால் கழறிற்று அறிவார் எனப் போற்றப்பட்டார் என்றும்
பெரியபுராணம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
கழறிற்றறிவார் நாயனார் அவர்களின்
வரலாற்றை விரிவாகக் காண்போமாக:-
சோழ நாட்டிலே சேரமன்னர் குலமும் உலகும்
செய்த பெரும் தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர், மண்
மேற் சைவநெறி வாழ வளர்ந்து, முன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினாற் கண்ணுதற்
பெருமானாகிய சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்துடையராயினார் தமக்குரிய
அரசியற் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களமென்னுந் திருக்கோயிலையடைந்து
சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துறைதலை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும்
உறுதியல்ல எனவுணர்ந்த அப்பெருந்தகையார், நாடோறும் விடியற்காலத்தே நித்திரை
விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத்
திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும்
திருமெழுகுமிட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து இறைவனுக்கு நீராட்டி, முன்னைய
அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி
அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டையாட்சி
புரிந்த செங்கொற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதிவினைத் துறந்து தவஞ்செய்தற்
பொருட்டுக் கானகஞ் சென்றான்.
இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல
அமைச்சர்கள் சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சில நாள் ஆராய்ந்தனர். பண்டைச்
சேர மன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை
திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய
பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திருவஞ்சைக்களத்தை அடைந்து
பெருமாக்கோதையாரை வணங்கி இச்சேரநாட்டின் ஆட்சியுரிமை தங்களுக்குரியதாதலால் தாங்களே
இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்’ என வேண்டினர்.
பெருமாக்கோதையார் ‘மென்மேலும் பெருகும் இன்ப மயமாகிய சிவதொண்டுக்கு இடையூறான
ஆட்சியுரிமையை ஏற்றுக்கொள்ளும்படி இவ்வமைச்சர்கள் என்னை வற்புறுத்துகின்றார்கள்.
இச்சிவதொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சிபுரிய இறைவனது
திருவருள் துணைபுரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தையுணர்ந்து நடப்பேன்’
எனத் தமதுள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத் திருக்கோயிலிற் புகுந்து இறைவன்
திருமுன்னர் பணிந்து நின்றார். இறைவனது திருவருளால் தமக்குரிய அரசுரிமையில்
வழுவாது ஆட்சிபுரிந்த இறைவனைப் பேரன்பினால் விரும்பி வழிபடுமியல்பும், புல் முதல்
யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை
குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்துணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வும், கெடாத
வலிமையும், கைம்மாறு கருதாது இரவர்க்கு ஈயவல்ல (கொடுக்கவல்ல) கொடை கெடாத
வண்மையும், நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும்
ஆகிய எல்லா நலங்களும் உயர் திணை மக்களும் கழறிய (மிருகங்களின்) சொற்பொருளை
உய்த்துணரும் நுண்ணறிவினைப் பெற்றவர் பெருமாக்கோதையாராதலின் அவர்க்கு
கழறிற்றறிவார் என்பது காரணப்பெயராயிற்று.
உலகுயிர்கள் கழறுச் சொற்கள் அனைத்தையும்
உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார், தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல்
வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கி அமைச்சர்
வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவுபெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வெண்டுவன
செய்ய உரிய நன்னாளில் திருமுடிசூடி இவ்வுலகத்தை ஆட்சிபுரியும் பெருவேந்தராயினார்.
மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத்
திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் பட்டத்து யானை மீது அமர்ந்து வெற்றிக்குடையும்
வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கிவர, நகரில் நகரில் திருவுலா வந்தனர். அப்பொழுது
உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் கண்ணெதிர்பட்டான். மழையில் நனைந்து
வந்த அவனது சரீரம் உவர்மண் படிந்து வெளுத்திருந்தமையால் அதாவது உடல் முழுவதும்
படிந்து வெளுத்திருந்தமையால் உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம்
எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார்.
அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன், அரசரைப்
பணிந்து ‘அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்’ என்றான். அதுகேட்ட சேரர்பிரான்
‘அடியேன் அடிச்சேரன் காதலாற் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை
அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக’ என
அவனிற்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது
அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சரனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப்
போற்றினர்.
சேரமான் பெருமாள் யானை மீதமர்ந்து
நகர்வலஞ் செய்து அரண்மனை அடைந்து அரியணையில் வீற்றிருந்து அரசுபுரிந்தருளினார்.
மேற்றிசை வேந்தராகிய இப்பெருந்தகையார் கீழ்த்திசை வேந்தராகிய சோழ மன்னரோடும்
தென்திசை வேந்தராகிய பாண்டிய மன்னரோடும் நண்பராக விளங்கினார். மூவேந்தரும்
தமிழகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள பகைகளைக் களைந்து திருநீற்றொளியாகிய சிவநெறி
வளரவும், வேதநெறி வளரவும் அறநூல் முறையே ஆட்சி புரிந்தனர்.
பெருமாதைக் கோதையார் தாம் பெற்ற
அரசபதவியின் பயனும் நிறைந்த தவமும், தேடும் பொருளும், பெருந்துணையும் ஆகிய
இவையெல்லாமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளும்
திருவடித்தாமரையெனத் தெளிந்தார். ஆதலால் நாள்தோறும் சிவபூசை செய்வதை, தமக்குரிய
கடைமையாக மேற்கொண்டார். திருமஞ்சனம், பூ, புகை, ஒளி ஆகியவற்றுடன் செய்யும் அன்பு
நிறைந்த சிவபூசை ஏற்றுக்கொண்ட இறைவர், தமது திருவடிச் சிலம்பின் ஒலியினைச் சேரமான்
செவிகுளிரக் கேட்டின்புறும் வண்ணம் ஒலிப்பித்தலை வழக்கமாகக் கொண்டருளினார்.
இவ்வாறு சிவபூசையிலீடுபட்ட சேராமான்
பெருமான் சிவனடியார்களுக்கு வரையாது கொடுத்தும், சிவவேள்விகள் செய்தும்
எவ்வுயிர்க்கும் நலஞ்செய்து வந்தார். இந்நிலையில் பாண்டியனது தலைநகராகிய
மதுரையம்பதியிலே திருவாலவாயென்னுந் திருக்கோயிலிலே எழுந்தருளியிருக்கும்
சோமசுந்தரக் கடவுள் தம்மை இன்னிசையாற் பரவிப்போற்றும் பாணபத்திரனென்னும் இசைப்
பாணரது வறுமையை நீக்கத் திருவுளங் கொண்டு அவரது கனவில் தோன்றி ‘அன்பனே, என்பாற்
பேரன்புடைய சேரமான் பெருமாளென்னும் வேந்தன் உனக்குப் பொன், பட்டாடைகள்,
நவமணிகலன்கள் முதலாக நீ வேண்டியதெல்லாங் குறைவறக் கொடுப்பான். அவனுக்கு ஒரு
திருமுகம் எழுதிக்கொடுத்திருக்கிறோம் நீ அதனைப் பெற்றுக்கொண்டு மலைநாடு சென்று
பொருள் பெற்று வருவாயாக’ எனக் கூறி ‘மதிமலிபுரிசை’ எனத் தொடங்கும் திருப்பாடல்
வரையப் பெற்ற திருமுகத்தைக் கொடுத்தருளினார். திருவாலவாயுடையார் அருளிய
திருமுகப்பாசுரத்தைப் பெற்ற பாணபத்திரர், சேர நாட்டையடைந்து சேரமான் பெருமாளைக்
கண்டார். பாணர் தந்த திருமுகத்தை வாங்கி முடிமேற் கொண்ட சேரர் பெருமான்
அப்பாசுரத்தைப் பலமுறை படித்து உளமுருகினார். அமைச்சர் முதலியோரை அழைத்து தமது
நிதியறையில் உள்ள பலவகைப் பொருள்களையும் பொதி செய்து கொணரச் செய்து
‘இப்பெரும்பொருள்களையும், யானை, குதிரை முதலிய சேனைகளையும், இம்மலைநாட்டு ஆட்சியுரிமையினையும்
தாங்களே ஏற்றருள வேண்டும்’ எனப் பாணபத்திரரை வேண்டி நின்றார். அவரது கொடைத்
திறத்தைக் கண்டு வியந்த பாணபத்திரர் ‘என் குடும்ப வாழ்விற்குப் போதுமான பொருள்களை
மட்டும் அடியேன் தங்கள்பால் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனது ஆணை. ஆதலின்,
அரசாட்சியும் அதற்கு இன்றியமையாத அரசுறுப்புக்களுமாகிய இவற்றைத் தாங்களே கைக்
கொண்டருளதல் வேண்டும்’ என்று கூறினார். இறைவரது ஆணையைக் கேட்ட சேரபெருமாள்.
அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சிப் பாணபத்திரது வேண்டுகோளிற்கு இசைந்தார். பாணரும்
தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் பெற்றுக் கொண்டு அன்பினால் தம்மைப் பின்
தொடர்ந்து வந்து வழியனுப்பிய சேரமானிடம் விடைபெற்று மதுரை நகரத்தையடைந்தார்.
கழறிற்றழிவாகியாராகிய சேராமான்பெருமாள்,
என்றும் போல ஒருநாள் சிவபூசை செய்துகொண்டிருந்த பொழுது, வழிபாட்டில்
நாடோறுங்கேட்டின்புறுவதாகிய திருச்சிலம்பொலியை அன்று கேட்கப் பெறாது பெரிதும்
மனங்கலங்கினார். அடியேன் என்ன பிழை செய்தேனோ எனப் பொருமினார். இறைவனை வழிபடும் ஆசை
காரணமாக யான் சுமந்துள்ள இவ்வுடம்பினால் அடியேன் பெறுதற்குரிய இன்பம் வேறென்ன
இருக்கிறது எனக் கலங்கித் தம் உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் உடைவாளை உருவித்
தம் மார்பில் நாட்டப் புகுந்தார். அந்நிலையில் அருட்கடலாகிய கூத்தப் பெருமான்
விரைந்து தனது திருவடிச் சிலம்பொலியைச் சேராமன் பெருமாள் செவிகுளிரக் கேட்டு
மகிழும் வண்ணம் ஒலிக்கச் செய்தார். சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்த சேரவேந்தர் தமது
உடைவாளைக் கீழே எறிந்துவிட்டுத் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்று, ‘தேவர்களும்
தேடிக் காணுதற்கரிய பெருமானே! இத்திருவருளை முன்பு செய்யாது தவிர்த்தது எது கருதி?
என வினவினார். அந்நிலையில் தோன்றாத் துணையாக மறைந்து நின்றருளிய இறைவர் “சேரனே!
வன்றொண்டனாகிய சுந்தரன் தில்லையம்பலத்திலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு
ஐம்புலன்களும் ஒன்றிய உணர்வுடன் நின்று புகழமைந்த திருபதிகங்களால் நம்மைப் பரவிப்
பாடினான். அவன் பாடிய தீஞ்சுவைப் பாடலில் நாம் திளைத்திருந்தமையால் இங்கு நீ
புரியும் வழிபாட்டிற்கு உரிய நேரத்தில் வரத் தாழ்ந்தோம்’ எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சேரமான் பெருமாள் ‘அடியார்களுக்கு அருள் புரியும்
இறைவனது கருணைத்திறம் என்னே’ என வியந்து உளமுருகினார். இறைவன்
திருநடம்புரிந்தருளும் பெரும்பற்றப் புலியூரிலமைந்த பொன்னம்பலத்தையும் அங்கே
இறைவனது ஆடல் கண்டு மகிழ்ந்த தன்னேரில்லாப் பெரியோராகிய வன்றொண்டரையும் கண்டு
வழிபடுதல் வேண்டும் எனக் கருதிச் சோழ நாட்டிற்குச் செல்ல விரும்பினார்.
திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டுச் சேனைகளுடன்
புறப்பட்டுச் கொங்கு நாட்டைக் கடந்து சிவனடியார்கள் எதிர்கொண்டு போற்றச் சோழநாட்டை
அடைந்தார். அந்நிலையில் தில்லைவாழ் அந்தணர்களும் சிவனடியார்களும் எதிர்கொண்டு அவரை
வரவேற்றனர். அடியர்களோடு தில்லைத் திருவீதியை வலம் வந்து எழுநிலைக் கோபுரத்தை
வணங்கி உட்புகுந்த சேரமான்பெருமாள் நாயனார் திருப்பேரம்பலத்தை இறைஞ்சி உள்ளே
புகுந்து இறைவன் ஆடல் புரியும் திருச்சிற்றம்பலத்தின் முன் அணைந்தார். அளவில்லாப்
பெருங்கூத்தராகிய இறைவரது திருக்கூத்தினை ஐம்புலன்களும் ஒன்றிய ஒருமையுணர்வாற்
கண்டு உருகிப் போற்றித் திருவருளின்பக் கடலில் திளைத்து இன்புற்றார். தாம் பெற்ற
பேரின்பத்தை வையத்தார் அனைவரும் பெற்று மகிழும் வண்ணம் கூத்தப்பெருமானது
கீர்த்தியை விரித்துரைக்கும் செந்தமிழ்ப் பனுவலாகிய பொன்வண்ணத் திருவந்தாதியினைப்
பாடியருளினார். சேரர் பாடிய திருவந்தாதியினைக் கேட்டு மகிழ்ந்த தில்லையம்பலவர்
அதற்குப் பரிசிலாகத் தூக்கிய திருவடியிலணியப் பெற்ற திருச்சிலப்பொலியை நிகழ்த்தியருளினார்.
ஆடற்சிலம்பொலியினைச் செவிமடுத்து அளவிலாப் பேருவகையுற்ற சேரமான்பெருமாள்
காலந்தோறும் கூத்தப்பெருமானைக் கும்பிட்டுத் திருல்லைப்பதியிற் சில நாள்
தங்கியிருந்தார்.
பின்னர் நம்பியாரூரரைக் கண்டு
வணங்குவதற்கு விரும்பித் தில்லையினின்றும் புறப்பட்டுப் பல தலங்களை வணங்கி
திருவாரூரை அடைந்தார். சேரமான் பெருமாளது வருகையையுணர்ந்த நம்பியாரூரர்,
சிவனடியார்களுடன் அவரை எதிர்கொண்டழைத்தார். நம்பியாரூரைக் கண்ட சேரவேந்தர் நிலமிசை
விழுந்திறைஞ்சினார். தம்மை வணங்கிய சேரமான்பெருமாளைத் தாமும் வணங்கித் தம் இரு
கைகளாலும் தூக்கியெடுத்துத் தம் இரு கைகளாலும் ஒருவரொவரிற் கலந்த பெரும்
நட்பினராய்ப் பெருமகிழ்ச்சியுற்றார்கள். இங்கனம் இருவரும் உயிர் ஒன்றி உடம்பும்
ஒன்றாம் என அன்பினால் அளவளாவி மகிழும் தோழமைத் திறத்தைக் கண்ணுற்ற சிவனடியார்கள்,
நம்பியாரூரரைச் ‘சேரமான் தோழர்’ என்ற பெயரால் அழைத்து மகிழ்ந்தனர். சேரமான்
தோழராகிய சுந்தரர் சேரமான் பெருமானது கையினை பற்றி அழைத்துச் சென்றார். இருவரும்
திருவாரூர்க் திருக்கோயிலை அடைந்து அடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய
மண்டபத்தைப் பணிந்து திருக்கோயிலை வலம் வந்தனர். சேரமான் பெருமாள் உடைய நம்பியாராகிய
சுந்தரரைத் தொடர்ந்து சென்று பூங்கோயிலமர்ந்த பெருமானை நிலமிசைப் பல முறை
விழுந்திறைஞ்சினார். புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றிக் கண்களில் அன்பு நீர்
பொழியத் திருமும்மணிக்கோவையென்னுஞ் செஞ்நூல் மாலை புனைந்தேத்தினார். தாம் பாடிய
செந்தமிழ் நூலைத் தம் தோழராகிய சுந்தரர் திருமுன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்.
ஆரூரிடங்கொண்ட இறைவரும் சேரவேந்தர் பாடிய தெய்வப் பாமலையை விரும்பி ஏற்றுக்
கொண்டருளினார். பின்பு சுந்தரர் சேரமான் பெருமாளை அழைத்துக் கொண்டு நங்கை பரவையார்
திருமாளிகைக்குச் சென்றார். பரவையார், திருவிளக்கு நிறைகுடம் முதலிய மங்கலப்
பொருட்களுடன் சேரமான் பெருமானை வரவேற்று வணங்கிச் சேரர் பெருமானிற்கும்
சிவனடியார்களுக்கும் உடன் வந்த பரிசனங்களிற்கும் தக்கவகையால் திருவமுது அமைத்து
அன்புடன் உபசரித்தார். ஆண்டநம்பியும் சேரமான் பெருமாளும் உடனிருந்து திருவமுது
செய்தருளினார். இவ்வாறு சேரமான் பெருமாளும் நம்பியாரூரரும் திருவாரூரில்
தங்கியிருக்கும் பொழுது பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய திருத்தலங்களை
வழிபட வேண்டும் என்ற எண்ணம் சுந்தரர்க்கு உண்டாயிற்று. அவர்தம் விருப்பத்தினைச்
சேரமான் பெருமாளுக்குத் தெரிவித்தார். வன்றொண்டரைப் பிரியாத பெருமானாகிய சேரமான்
பெருமாள் தமக்குத் திருமுகப் பாசுரம் அனுப்பியருளிய திருவாலவாய்ப் பெருமானைப்
போற்றவேண்டுமெனும் பேரார்வத்தால் தாமும் அவருடன் செல்லத் துணிந்தார். ஒத்த உள்ள
உடையார் இருவர் அடியர் புடைசூழத் திருமறைக்காடு முதலிய தலங்களை வணங்கித் தென்தமிழ்ப்
பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்தார்கள். அப்போது நாடாள் வேந்தனாகிய
பாண்டியனும், பாண்டிய மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனும் எதிர்
சென்று இவ்விருபெருமக்களையும் வரவேற்றுத் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு
அழைத்துச் சென்றனர். நம்பியாரூரருடன் திருவாலவாய்ப் பெருமானைக் கண்டு மகிழ்ந்த
சேரமான் பெருமாள், ‘அடியேனையும் ஒரு பொருளாக எண்ணித் திருமுகம் அருளிய பேரருளின்
எல்லையை அறிந்திலேன்’ என எண்ணி உரை தடுமாறிக் கண்ணீரரும்ப ஆலவாய் கடவுளைப் பரவிப்
போற்றினார். பாண்டியன் இவ்விரு பெருமக்களையும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று
உபசரித்துப் போற்றினான்.
இங்கனம் சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ்
வேந்தர் மூவரும் நம்பியாரூராகிய சுந்தரரும் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவிப்
பாண்டி நாட்டுத் தலங்களைப் பணிந்து இன்புற்றனர். சேரமான் பெருமாளும், சுந்தரரும்,
பாண்டியர் சோழராகிய இருபெருவேந்தர்களிடத்தும் விடைபெற்றுத் திருவாரூரரை அடைந்தனர்.
சேரமான் பெருமாள் அங்குச் சில நாள் தங்கியிருந்து தம் தோழராகிய நம்பியாரூரைத்
தங்கள் நாட்டில் எழுந்தருள வேண்டுமென்று பலமுறையும் வேண்டிக் கொண்டனர்.
அவ்வேண்டுகோளுக்கிணங்கிய சுந்தரர், பரவையாரது இசைவு பெற்றுச் சேரவேந்தருடன்
புறப்பட்டார். இருவரும் வழியிலுள்ள தலங்களை வணங்கிப் போற்றி மலைநாட்டவர்
எதிர்கொள்ளக் கொடுங்கோளூரை அடைந்தார். சேரமான் பெருமாள் தம் ஆருயிர்த் தோழராகிய
நம்பியாரூரரை அரியணையில் அமரச் செய்து, தம் தேவிமார்கள் பொற்குடத்தில் நன்னீர் ஏந்தி
நிற்க நம்பியாரூரருடைய திருவடிகளை விளக்கி மலர் தூவி வழிபட்டார். அவருடன்
உடனிருந்து அமுதருந்தி உபசரித்தார். செண்டாடுந் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப்
பெருவிழாவும் பாடல் ஆடல் இன்னியங்கள் முதலாக பலவகை வாத்தியங்கள் விளையாடல்களும்
நிகழ்ச் செய்து தம் தோழரை மகிழ்வித்து அளவளாவி மகிழ்வாராயினர்.
இங்கனம் நண்பர் இருவரும் அளவளாவி
மகிழும் நாட்களில் நம்பியாரூரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வணங்க
வேண்டுமென்ற நினைவு தோன்றியது. அந்நினைவு மீதூரப் பெற்ற சுந்தரர், 'பொன்னும்
மெய்ப்பொருளுந் தந்து போகமும் திருவும் புணர்த்தருளும் ஆரூர்ப் பெருமானை மறத்தலும்
ஆமே' எனப் பாடித் தமது ஆற்றாமையை தம் தோழராகிய சேரமானுக்கு உணர்த்தி விடைபெற
முயன்றார். சுந்தரரின் உளக்குறிப்பறிந்த சேரமான் பெருமாள், ‘இன்று உமது
பிரிவாற்றேன் என் செய்வேன்’ என்றுரைத்து மிகவும் வருந்தினார். நம்பியாரூரர் தம்
தோழரை நோக்கி ‘இந்நாட்டில் உளவாம் இடர்நீங்கப் பகைநீக்கி அரசாளுதல் உமது கடன்’ என
அறிவுறுத்தினார். அதனைக் கேட்ட வேந்தர் பெருமான் ‘இவ்வுலக ஆட்சியும் வானுலக
ஆட்சியுமாக அமைந்து எனக்கு இன்பஞ் செய்வன உம்முடைய திருவடித் தாரைகளே.
திருவாரூர்க்கு எழுந்தருள வெண்ணிய உமது மனவிருப்பத்தை நீக்கவும் அஞ்சுகின்றேன்’
என்றார். ‘என்னுயிர்க்கு இன்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை வன்னெஞ்சக் கள்வனேன்
மறந்திரேன். நீவிர் வணங்கினார் வன்றொண்டரை வணங்கி தம்முடைய திருமாளிகையிலுள்ள
பெரும் பொருள்களைப் பொதி செய்து ஆட்களின் மேல் ஏற்றுவித்து நெடுந்தூரஞ்சென்று
வழியனுப்பினார். சுந்தரரும் தம்தோழரைத் தழுவி விடைபெற்றுத் திருவாரூரை அடைந்தார்.
சேரமான் பெருமாள் தம் தோழராகிய நம்பியாரூரரை மறவாத சிந்தையுடன்
கொடுங்களூரிலிருந்து மலைநாட்டை ஆட்சி புரிந்திருந்தார்.
நெடுநாட்களின் பின் சுந்தரர் மீண்டும்
கொடுங்களூருக்கு வந்து தம் தோழராகிய சேரமான் பெருமாளுடன் பல நாட்கள் அளவளாவி
மகிழ்ந்திருந்தார். ஒருநாள் சேரமான் பெருமாள் திருமஞ்சனச்சாலையில் நீராடிக்
கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலையடைந்து அஞ்சைக்களத்து
இறைவனை வழிபட்டுத் ‘தலைக்குத் தலைமாலை’ என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப்
பாடிப் போற்றி நின்றார். அந்நிலையில் அவரது பாசத்தளையை அகற்றிப் பேரருள் புரிய
விரும்பிய சிவபெருமான், சுந்தரரை அழைத்து வருமாறு திருக்கயிலாயத்தில் இருந்து
வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி அருளினார். வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத்
திருக்கோயில் வாயிலையடைந்த தேவர்கள் நம்பியாரூரரைப் பணிந்து நின்று ‘தாங்கள் இவ்
வெள்ளையானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு உடன் புறப்பட்டு வருதல்
வேண்டுமென்பது இறைவரது அருளிப்பாடு’ என விண்ணப்பஞ் செய்தார்கள். இந்நிலையில்
நம்பியாரூரர் செய்வதொன்றும் அறியாது தம் உயிர்த்தோழராகிய சேரமான் பெருமாளைத் தம்
மனதிற் சிந்தித்துக் கொண்டு வெள்ளையானையின் மீது ஏறிச் செல்வாராயினார்.
இவ்வாறு தம் உயிர்த்தோழராகிய சுந்தரர்
தம்மை நினைத்துச் செல்லும் பேரன்பின் திறத்தைத் திருவாற்றலால் விரைந்துணர்ந்த
கழற்றறிவாராகிய சேர வேந்தர், பக்கத்தில் நின்ற குதிரையின் மீது ஏறித்
திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு விரைந்து சென்றார். வெள்ளை யானையின் மீதமர்ந்து
விண்ணிற் செல்லும் தம் தோழரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே மந்திரவைந்தெழுத்தினை
உபதேசித்தார். அவ்வளவில் குதிரை வானமீதெழுந்து வன்றோண்டர் ஏறிச்செல்லும்
வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே சென்றது. அப்பொழுது சேரமான் பெருமாளைப்
பின்தொடர்ந்து சென்ற படைவீரர்கள், குதிரை மீது செல்லும் தம் வேந்தர் பெருமானைக்
கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரையிற் கண்டு பின் காணப்பெறாது வருத்தமுற்றார்கள்.
தம் வேந்தர் பெருமானைத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்ற மனத்திட்பமுடையராய்
உடைவாளினால் தம் உடம்பை வெட்டிவீழ்த்தி வீர யாக்கையைப் பெற்று விசும்பின்
மீதெழுந்து தம் அரசர் பெருமானைச் சேவித்து சென்றனர். சேரமான் பெருமாளும்
சுந்தரரும் திருக்கையிலாயத்தின் தெற்கு வாயிலை அணுகிக் குதிரையிலிருந்தும்
யானையிலிருந்தும் இறங்கி வாயில்கள் பலவற்றையுங் கடந்து திருவணுக்கன் திருவாயிலை
அடைந்தார்கள். சேரமான் பெருமாள் உள்ளே புக அனுமதியின்றி வாயிலில் தடைப்பட்டு
நின்றார். அவருடைய தோழராகிய சுந்தரர் உள்ளே போய்ச் சிவபெருமான் திருவடிமுன்னர்
பணிந்தெழுந்தார். ‘கங்கை முடிக்கணிந்த கடவுளே! தங்கள் திருவடிகளை இறைஞ்சுதற்
பொருட்டுச் சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்த
நிற்கின்றார்’ என விண்ணப்பஞ் செய்தார். சிவபெருமான், பெரிய தேவராகிய நந்தியை
அழைத்துச் ‘சேரமானைக் கொணர்க’ எனத் திருவாய்மலர்ந்தருளினார். அவரும் அவ்வாறே
சென்று அழைத்து வந்தார்.
சேரமான் பெருமாள் இறைவன் திருமுன்பு
பணிந்து போற்றி நின்றார். இறைவன் புன்முறுவல் செய்து சேரமானை நோக்கி, ‘இங்கு நாம்
அழையாதிருக்க நீ வந்தது எது கருதி’ என வினவியருளினார். அதுகேட்ட சேரவேந்தர்
இறைவனைப் பணிந்து “செஞ்சடைக் கடவுளே! அடியேன் இங்கு தெரிவித்தருளும் வேண்டுகோள்
ஒன்றுள்ளது. எனது பாசத்தளையை அகற்றுதற் பொருட்டு வன்றொண்டரது தோழமையை அருளிய
பெருமானே!. மறைகளாலும் முனிவர்களாலும் அளவிடுதற்கரிய பெரியோனாகிய உன்னைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ் நூல் ஒன்றைப் பாடி
வந்துள்ளேன். இத்தமிழ் நூலைத் தேவரீர் திருச்செவி சாத்தியருளல் வேண்டும் என்பதே
எனது வேண்டுகோளாகும்’ என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவபெருமான், ‘சேரனே
அவ்வுலாவைச் சொல்லுக’ எனப் பணித்தருளினார். சேரமான் பெருமாள்நாயனாரும் தாம் பாடிய
திருக்கைலாய ஞான உலாவைக் கயிலைப் பெருமான் திருமுன்னர் எடுத்துரைத்து
அரங்கேற்றினார். சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக்கொண்ட
இறைவன், அவரை நோக்கி சேரனே நம்பியாரூரனாகிய ஆலால சுந்தரனுடன் கூடி நீவிர்
இருவீரும் நம் சிவகணத்தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக’ எனத் திருவருள்
செய்ய, சேரமான்பெருமாள் சிவகணத் தலைவராகவும் கயிலையில் திருத்தொண்டு
புரிந்திருப்பாராயினர். இதுவே சேரமான் பெருமாள் அல்லது கழறிற்றறிவார் நாயனார் அவர்களின்
வாழ்க்கை வரலாறு.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக