Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 ஜூன், 2019

ரூசோ

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com


 
 
 
 
 
உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா முனையே  கூர்மையாக செயல்பட்டிருக்கிறது. வரலாற்றில் வலிமையான பேனா முனையால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வாழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. அப்படி வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யம்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் மன்னன் லூயியின் ஆட்சி. வரலாற்றில் முதல் புரட்சி என்று வருணிக்கப்படும் 'பிரெஞ்சு புரட்சி'யின் மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட இருவரில் ஒருவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்த வரலாற்று நாயகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

வாழும்போது வறுமையுடன் போராடிய அவர் மறைந்தபோது ஒரு சராசரி மனிதனாக கருதப்பட்டு சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டார். ஆனால் பதினாறு ஆண்டுகள் கழித்து அவருக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கவே புதைக்கப்பட்ட அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் அலங்கரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து வர புகழ்பெற்ற Pantheon-அரங்கில்  மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. உலக வரலாற்றில் இப்படிபட்ட மரியாதையை பெற்றவர் அவர் ஒருவர்தான் அவர் பெயர் ரூசோ. 1712-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28-ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் (Geneva) ஐசக் ரூசோ, சுசேன் பெர்னார்ட் ரூசோ தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் ரூசோ. பிறந்த ஒருவாரத்திற்குள் அவரது தாயார் காலமானார். எனவே தந்தையின் கண்காணிப்பில்தான் வளர்ந்தார் ரூசோ.

தந்தை கடிகாரம் பழுது பார்க்கும் வேலையில் இருந்தார். குடும்பம் ஏழ்மையில் வாடியது. தந்தைக்கு தலைசிறந்த தத்துவ நூல்களைப் படிப்பதில் பெரும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் ரூசோவுக்கும் பரவியது. குடும்ப ஏழ்மை காரணமாக அவர் முறையாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை. ரூசோவுக்கு ஏழு வயது நிரம்பும் முன்னே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுத்தார் தந்தை. அந்த சிறிய வயதிலேயே கிரேக்க காவியங்களையும், ரோமின் வரலாற்றையும் மகனுக்கு படித்துக் காட்டுவார் தந்தை. அதனால் பலவித நூல்களை படிக்கும் ஆர்வம் ரூசோவுக்கு இளம்வயதிலேயே ஏற்பட்டது. பதினான்காம் வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வேலைக்கு சேர்ந்தார் ரூசோ. நீதிமன்ற தீர்ப்புகளை நகல் எடுப்பது அவரது பணி. அந்த வழக்கறிஞர் தன்னை நடத்திய விதம் பிடிக்காமல் போகவே வேலையை விட்டு வெளியேறினார்.    

வறுமை காரணமாக ஏதாவது வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை எனவே ஒரு சிற்பியிடம் வேலைக்கு சேர்ந்தார். அந்த சிற்பி ரூசோவை அடிமைபோல் நடத்தியதாலும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் காட்டுமிராண்டித்தனமாக தண்டித்ததாலும் அந்த வேலையை விட்டும் அவர் வெளியேறினார். 'ஒருவனை சார்ந்து வாழ்வதைவிட சாவதே மேல்' என்ற எண்ணம் அவரிடம் தோன்றியது. இருந்தாலும் வறுமை விரட்டியதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பல்வேறு வேலைகளை செய்தார். என்னதான் பிரச்சினை வந்தாலும் அவர் நூல்கள் வாசிப்பதை கைவிட்டதில்லை. எப்போதும் ஏதாவது நூலை படித்துக்கொண்டே இருப்பார். அவர் மனிதர்களோடு பேசியதைவிட புத்தகங்களோடு பேசியதுதான் அதிகம். ஒருமுறை கடையில் ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தார் ரூசோ. அதை எப்படியாவது வாங்கி வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஆனால் கையில் பணம் இல்லை என்ன செய்தார் தெரியுமா? தனது உடைகளை விற்று அந்த புத்தகத்தை வாங்கினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு சாப்பாடு இல்லை இருந்தும் புத்தகத்தை படித்து முடிப்பத்திலேயே அவர் கவனம் செலுத்தினார். 

இப்படி புத்தகங்களை படித்துப் படித்து தன் அறிவை பெருக்கிக்கொண்ட ரூசோ தமது முப்பதாவது வயதில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இத்தாலி, பாரிஸ் என்று இரண்டு இடங்களிலும் சில ஆண்டுகளை கழித்தார். அங்கும் எந்த வேலையிலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. சுயசிந்தனையும், தன்மான உணர்வும் கொண்ட ரூசோவினால் எவரிடமும் அடங்கிப் பணியாற்ற முடியவில்லை. இடையில் நாடகம் கவிதை என நிறைய எழுதினார். ஒருமுறை பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்று 'அறிவியல் வளர்ச்சி மனிதனின் ஒழுக்கத்தை உயர்த்தியிருக்கிறதா' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. தமது எண்ணங்களை அழகாகவும், தெளிவாகவும் எழுதி அந்த போட்டிக்கு அனுப்பினார் ரூசோ. அந்த போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பாரிசிலேயே பல ஆண்டுகள் தங்கி பல நூல்களை எழுதி வெளியிட்டார்.  

ரூசோ எழுதிய மிகச்சிறந்த தத்துவ நூல் 'The Social Contract' எனப்படும் சமுதாய ஒப்பந்தம். "மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் ஆனால் எங்கும் அடிமை சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான்" என்ற புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்கும் அந்த நூல் 1762-ஆம் ஆண்டு வெளியானது. அரசன் என்பவன் மக்களின் நலனுக்காக மக்களோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பயனாய் உருவானவன். மக்களின் உரிமைகளை காப்பாற்றுகிற வரையில்தான் அவன் அரசன். அவ்விதிகளை அரசன் மீறும்போது மக்களும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த விதிகளை மீறலாம் என்பதுதான் அந்த நூலில் அவர் கூறியிருந்த கருத்து. அதன்பிறகு அவர் எழுதிய 'Emile' எனும் நூல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. குழந்தைகளுக்கு கல்வி கற்கும் முறை பற்றி எடுத்துரைத்தது அந்த நூல்.

ரூசோவின் வெற்றிகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் அந்த இரண்டு நூல்களுமே சமயத்திற்கு எதிரானது என்ற பிரச்சாரத்தை தொடங்கினர். பிரான்சும், ஜெனிவாவும் அந்த நூல்களை தடை செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் அவரது எதிர்ப்புப்போக்கை வெறுத்ததால் பாரிஸ் நீதிமன்றத்திற்கு முன் அவரது நூலை தீயிட்டுக் கொளுத்தியது. ரூசோ கிளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று அஞ்சி அவரை பிரான்சுக்குள் நுழையக்கூடாது என்றும் ஆணை பிறப்பித்தது. பின்னர் தாம் எழுதிய 'Perpetual peace' என்ற நூலில் ஐரோப்பிய நாடுகளுக்கென கூட்டுசங்கம் ஒன்று உருவாக வேண்டும். ஒவ்வொரு நாடும் போரை வெறுக்க வேண்டும். ஏதாவது ஒரு நாடு அவ்வாறு செய்யத்தவறினால் மற்ற நாடுகள் அதனை புறக்கணிக்க வேண்டும். அதோடு ஐரோப்பிய படைகள் அந்த நாட்டை நசுக்க வேண்டும். என்ற கருத்துகளை கூறியிருந்தார் ரூசோ. அந்த கருத்துதான் பல ஆண்டுகள் கழித்து ஐக்கியநாட்டு சபை உருவாக காரணமாக இருந்திருக்கும் என சில வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.    

ரூசோவின் சிந்தனைகள் படித்தவர்கள், இளையர்கள், தொழிலாளிகள் என எல்லாத்தரப்பினரிடமும் செல்வாக்கு பெற்றது. தன் எழுத்தாலும் சொல்லாலும் மக்களை சிந்திக்கத் தூண்டியவர் அவர். அப்போது பிரான்சின் சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலை மிக மோசமாக இருந்தது. எங்குப்பார்த்தாலும் ஊழலும், அதிருப்தியும், அதிகார துஷ்பிரயோகமும்தான் நிலவின. அரசன் மிகப்பெரிய சர்வாதிகாரி என்று கருதப்பட்ட அந்தக்காலக்கட்டத்தில் மக்களின் நலன் காப்பதை அரசன் மீறும்போது மக்களும் கட்டுப்பாட்டை மீறலாம் என்ற புரட்சிக்கருத்தை வெளியிட்டார் ரூசோ. அதனால்தான் 1789-ஆம் ஆண்டு மக்கள் ஒன்று கூடி அரசனுக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை செய்தனர். அந்த பிரெஞ்சு புரட்சியில் மன்னன் லூயியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு பிறகு உலகில் ஏற்பட்ட ரஷ்ய புரட்சி, இந்திய விடுதலை போராட்டம் போன்றவற்றுக்கும் ரூசோவின் சிந்தனைகள் உதவியிருக்கின்றன.     

அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிக்கு வித்திட்ட ரூசோ 1778-ஆம் ஆண்டு ஜுலை 2-ஆம் நாள் தமது 66-ஆவது வயதில் காலமானார். அவர் இறந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரெஞ்சு புரட்சி வெடித்தது. ரூசோ இல்லாதிருந்தால் பிரெஞ்சு புரட்சியே ஏற்பட்டிருக்காது என்று மாவீரன் நெப்போலியன் கூறியிருக்கிறார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை வறுமையில் கழித்தும் வளமான சிந்தனைகளை உலகுக்கு தந்தார் ரூசோ. முறையாக பள்ளிக்கு செல்லாவிட்டாலும் அவரால் உலகம் போற்றும் சிந்தனைகளை தர முடிந்தது. ஒரு தேசத்தையே வீறுகொண்டு எழச்செய்ய முடிந்தது. அதற்கு காரணம் அவரிடம் இருந்த சிந்தனைத்தெளிவும் அடிமைத்தனம் என்பதே இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணமும்தான். ரூசோவைப்போன்று நல்ல எண்ணங்களையும், தெளிவான சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ளும் எவராலும் புரட்சிகளை உருவாக்க முடியும் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக