இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ராமு என்பவர் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர்
ஆவார். அவருடைய நிறுவனத்தில் கார்த்தி என்ற நண்பரும் பணிபுரிந்து வந்தார்.
தொழிலில் வெற்றியடைந்ததால் ஒரு உல்லாச பயணமாக கப்பலில் அவருடைய நண்பர்களுக்கும்,
பணிபுரிபவர்களுக்கும் ராமு விருந்து வைத்தார். கடலில் சென்ற போது புயலினால்
அக்கப்பல் கடலில் மூழ்கியது. அக்கப்பலில் பயணித்த ராமுவும், கார்த்தியும் மட்டுமே
உயிர் தப்பி கடலில் நீந்தி வந்து அருகிலிருந்த ஒரு சிறிய தீவிற்கு வந்தடைந்தனர்.
அப்போது அவர்கள் என்ன செய்வதென்று
அறியாமல் திகைத்திருந்தனர். முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வதென்று முடிவு
செய்தனர். அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது என பார்ப்போம்
என்று, இருவரும் முடிவு செய்து தனித்தனியாக கரைகளில் தங்கினார்கள்.
முதலில் இருவரும் உணவுக்காகப்
பிரார்த்தனை செய்யலாம் என்று எண்ணி பிரார்த்தனை செய்தனர். அவர்களின்
பிரார்த்தனைப்படி ராமு இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. பசி தீர
பழங்களை உண்டார். மேலும், அவர் தான் உடுத்திக்கொள்ள துணிகளும், தனக்கு அருகில்
மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் வேண்டினார்.
பின், அவர் வேண்டுதல் படியே அந்த
தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதிலிருந்து ஒரு அழகிய இளம் பெண்
மட்டும் உடைந்த கப்பல் பலகையின் உதவியுடன் அத்தீவிற்கு வந்தாள். அவளையே தெய்வ
சாட்சியாக திருமணம் செய்து கொண்டார் ராமு. ஆனால், அந்த தீவில் இருக்கும்
கார்த்தியோ பசியால் வாடி, தனிமையில் இருந்தார்.
ராமு செய்த வேண்டுதல் படி நல்ல
உணவுகள், துணிகள் எல்லாம் அவர் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை
ஒதுங்கின. கரைக்கு ஒதுங்கி வந்த பழங்கள், உணவுகளுடன் ராமுவும், அந்தப் பெண்ணும்
ஒரு வாரத்தைக் கடத்தினர். இறுதியாக ராமு, தன் சொந்த இடத்திற்கு போவதற்காக
கடவுளிடம் வேண்டினார். அதேபோல் படகு ஒன்று அடுத்த நாளே கரை ஒதுங்கியது.
ராமு தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு
மிகுந்த மகிழ்ச்சியில், துரதிர்ஷ்டம் மிக்க தன் நண்பன் கார்த்தியை அழைக்காமல் தன்
புது மனைவியுடன் அப்படகில் ஏறி அந்த தீவை விட்டுச் செல்ல தயாரானார். எல்லாம்
கிடைத்த ராமு, கடவுளின் ஆசிர்வாதம் கூட கார்த்திக்கு கிடைக்கவில்லை, ஒரு சிறு
பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்கவில்லை. அவனை அழைத்துச் செல்ல
கடவுளுக்கே விருப்பமில்லை என்று நினைத்தார். அவர்கள் தீவிலிருந்து புறப்படும்
சமயத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கியது.
ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில்
விட்டு செல்கிறாய்..? என்று அந்த குரல் கேட்டது. அதற்கு ராமு, நான் கடவுளிடம்
பிரார்த்தனை செய்தேன். அவர் என்னை ஆசிர்வதித்து, இது எல்லாம் எனக்கு மட்டுமே
கிடைக்கச் செய்தார். அந்த குரல் அவனிடம் மறுபடியும், மகனே நீ நினைப்பது தவறு. நான்
தான் கடவுள்.
உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பர்
பிரார்த்தனையில் ஒன்றே ஒன்று மட்டும்தான் கேட்டார். நான் அந்த ஒரு பிரார்த்தனையை
தான் நிறைவேற்றி வைத்தேன். அதுமட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு
ஆசிர்வாதமும், பலனும் கிடைத்து இருக்காது என்றார். உன் நண்பன் வேண்டியது,
வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவர், அவர் கஷ்டமே அறியாதவர். ஆகவே,
என் பிரார்த்தனையெல்லாம் அவர் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள். அது போதும்.
நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல. ஆகவே எனக்கென்று
கேட்க எதுவும் இல்லை என வேண்டினான் என்று கடவுள் கூறினார். அதைக்கேட்ட ராமு, மனம்
திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினார்.
நீதி:
நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது. உறவையும், நட்பையும் மதிக்க கற்றுக்கொள்வோம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக