Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 18 ஜூலை, 2019

தத்துவஞானிகளின் தந்தை!!


Image result for தத்துவஞானிகளின் தந்தை!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இன்று அறிவியல் ஞானத்தால் வளர்ச்சி அடைந்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒளிமயமான உலகம், ஒரு காலத்தில் அனைத்தும் இருந்தும் அறியாமை என்னும் இருட்டுக்குள் மூழ்கிக்கிடந்தது.

அந்த அறியாமை இருட்டை, கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து, கேள்வி என்ற ஒரு மந்திர சொல்லுக்கு புது முகவரி அமைத்தார் ஒரு சரித்திர நாயகன்.

அறிவை தெளிவாக்குகின்ற, வளர்க்கின்ற ஆதார சக்தியான தத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர்.

நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர்.

வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் கொண்டிருந்தவர். அவர்தான் தத்துவஞானி சாக்ரடீஸ்.

மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது.

வரலாற்றின் பல்வேறு காலக்கட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர்.

உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவர்தான் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ் கேள்விகளை கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியில் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தினார்.

சாக்ரடீஸின் ஆரம்ப கால வாழ்க்கை...!!

தனக்கு முன்னாள் இருந்த தத்துவஞானிகள் மரத்தையும், கல்லையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, மனிதனின் மனதை ஆராய்ந்தவர் சாக்ரடீஸ்.

மனிதன் யார்? எப்படி வந்தான்? மனிதனின் வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையில் என்னவாகிறான் போன்ற கேள்விகளை எழுப்பியவர் சாக்ரடீஸ்.

யார் இவர்?

சாக்ரடீஸ் ஏதென்ஸை சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராவார்.

சாக்ரடீஸ் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கிரேக்க நகரமான ஏதென்ஸ்-ல் பிறந்தார். இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. இவரது தந்தையார் ஒரு சிற்பி.

சாக்ரடீஸ் இளம் வயதிலேயே சிலைகளை வடிக்கக் கற்றார். இந்தப் பயிற்சிதான் பிற்காலத்தில் அவருக்கு அறிவை செதுக்க உதவியது. கேள்வி எனும் உளியால் தேவையற்ற பகுதிகளான மூட கருத்துக்களை செதுக்கி நீக்கினால், பகுத்தறிவு எனும் உண்மையின் சிலை உருவாகிவிடும் என்பதை சாக்ரடீஸ் நடைமுறை பயிற்சியிலேயே தெரிந்து கொண்டார்.

உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலக்கட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார்.

கேள்விகேட்கும் திறன் :

சாக்ரடீஸஷுக்கு கேள்விகளை கேட்பதில் மிகவும் ஆர்வம் அதிகம் இருந்தது. ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பார்.

எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீஸின் வழக்கமாகும்.

நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களை சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார்.

சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார். எதையும் வித்தியாசமாகவும் சிந்தித்தார். அவரது சிந்தனைகள் அந்த காலக்கட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸஷுக்கு இருந்தது.

சாக்ரடீஸ் ஒரு எளிய மனிதர்!!

சாக்ரடீஸ், தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது மற்றும் அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார்.

அப்போது அங்கே வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடிவிடும். என்ன தேடுகிறீர்கள்? என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனதில் விதைப்பார்.

மனிதன் யார்? எப்படி வந்தான்? மனிதனின் வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையில் என்னவாகிறான் போன்ற கேள்விகளை சாக்ரடீஸ் எழுப்பினார். ஏதென்ஸ் நகரத்தின் மூலை முடுக்குகளில், கோவில்களில், நாடக அரங்குகளில், விளையாட்டு திடல்களில், சந்தை, பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சாக்ரடீஸ் பேசிக்கொண்டே இருந்தார்.

'கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக்கூடாது. அறிவினால் சீர்தூக்கி பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும்" போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பிய சாக்ரடீஸ் ஏதென்ஸின் பெரியார்.

மற்றவர்கள் சாக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடமே திரும்ப கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சனையை மையமாக கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலை கேட்டு, அந்தப் பிரச்சனையை எழுப்பியவர்களே காரணத்தை புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.

இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர். மேலும், பிரச்சனையை புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர்.

சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களை சிந்திக்க வைத்தது. மேலும், செயல்களில் ஈடுபடவும் அவர்களை தூண்டியது.

அக்கால வழக்கப்படி அவர் தன் தாய் நாட்டுக்கு சேவை செய்ய போருக்கு செல்ல வேண்டியிருந்தது. ராணுவத்தில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தார். ஒரு சூழ்நிலையில் அவர் ராணுவப் பணியை விட்டு வெளியேற வேண்டி இருந்தது.

சாக்ரடீஸ் மிகவும் எளிமையானவர். ஒரே ஒரு ஆடையுடன், கால்களில் செருப்பின்றி பல இடங்களுக்கும் சுற்றித்திரிந்து அறிவை பரப்பினார். மக்கள் கூடும் இடங்களிலும், இளைஞர்கள் கூடும் இடங்களிலும் அவர் பேசினார்.

சாக்ரடீஸ் அடிக்கடி கடைவீதிக்கு வருவார். அங்குள்ள கடைகள் அனைத்தையும் பார்வையிடுவார். ஆனால் எதையும் அங்கு வாங்கியதில்லை.

ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர், 'எதையுமே நீங்கள் வாங்குவதில்லை, அப்படியிருக்க தினமும் ஏன் கடைவீதிக்கு வந்து அனைத்துக் கடைகளிலும் உள்ள பொருட்களை பார்வையிடுகிறீர்கள்" என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ், 'கடைவீதிக்கு அடிக்கடி நான் போக விரும்புவது உண்மைதான்! எத்தனை விதமான பொருட்கள் இல்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அறிவதற்காகத்தான்" என்று பதிலளித்தார்.

சாக்ரடீஸின் திருமண வாழ்க்கை :

போர் வீரராக, சிற்பியாக இருந்த சாக்ரடீஸூக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மெர்ட்ரான். இவர் அமைதி, பண்பு, அடக்கம் ஆகிய பண்புகளுக்கு உறைவிடமாக இருந்தார். இவருடன் வாழ்ந்த வாழ்க்கை சாக்ரடீஸூக்கு மகிழ்ச்சிகரமாகவே இருந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

மெர்ட்ரான் தனது கணவர் தெருக்களில் நின்று பேசுவதையும், மனம்போன போக்கில் போவதையும் கண்டு மனம் வருந்தவில்லை. மாறாக தனது கணவர் சிறந்த அறிவாளி என்று பெருமிதம் கொண்டார். ஒருநாள் எதிர்பாராத விதமாக மெர்ட்ரான் இயற்கை எய்தவே மகிழ்ச்சியும் சாக்ரடீஸை விட்டு பிரிந்தது.

இதனால் சாக்ரடீஸ் மனமுடைந்து போனார். தாயில்லா குழந்தைகளை பேணி காத்திட வேண்டி சாந்திப்பி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

சாந்திப்பி, மெர்ட்ரானின் எண்ணத்திற்கு நேர்மாறாக இருந்தார். தன் கணவரை மதிக்க தவறினாள். சாந்திப்பி, தனது கணவரின் கருத்துக்களையும், சொற்பொழிவுகளையும் வீண் வெட்டிப்பேச்சு என்று கடிந்து கொள்வாள். அதுமட்டுமல்லாமல் அவரது அறிவுரைகளையும், சொற்பொழிவுகளையும் கேட்போரை வீணர்கள் என்று ஏளனம் செய்தாள்.

சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக்கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. அதனால் பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார்.

ஆனால், அவர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். அதனால், கணவரை திட்டிக்கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

பொறுமை இழந்த அவரது மனைவி கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். பின் மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸின் தலையில் ஊற்றினார்.

அப்போது அவர், 'அடடா, என்ன ஆச்சரியம்... சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!" என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனைவியால் அவமானபட்ட நிலையிலும், சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

சாக்ரடீஸூக்கு மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அவரிடம் அனுசரித்து போக பழகிக் கொண்டார்.

சாக்ரடீஸ் மீதான குற்றச்சாட்டு!!

சாக்ரடீஸின் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களை கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார்.

சாக்ரடீஸ் இருக்குமிடங்களில் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது. கிரேக்க சமூகத்தில் கடைபிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்ததெல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.

இதுபோல் சாக்ரடீஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீஸூடன் சேர்ந்தார். பின்னாளில் இவரும் உலக புகழ்பெற்ற தத்துவஞானி ஆனார்.

சாக்ரடீஸின் அறிவுப்பூர்வ பேச்சால் புரட்சி வெடிக்கலாம் என அஞ்சினர் ஆட்சியாளர்கள். கிரேக்க இளைஞர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டு சாக்ரடீஸின்மீது சுமத்தப்பட்டது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞரும், லைகோன் என்ற மேடைப்பேச்சாளரும் சாக்ரடீஸின் மீது வழக்கு தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.

இளைஞர்களை தூண்டிவிடுவதாகவும், மத எதிர்ப்பை கிளப்பி விடுவதாகவும், தனக்கு பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸின் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்தனர்.

எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இளைஞர்களை கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களை தூற்றி, ஒரு புதுக்கடவுளை தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும், நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும், சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினர்.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டிற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. 'என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும் தான்".

நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தை தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை, மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை. நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன். எனக்கும், உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.

இதன் பின்னர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன. நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர்.

220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.

சாக்ரடீஸ், தாம் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும், தம் தாய் திருநாட்டிற்கு தமது செயல்களின் மூலம் நன்மையையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்கு தண்டணைக்கு பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

ஆனால், எனக்கு தண்டனை வழங்குவதாக நீதிமன்றம் முடிவு செய்தால், அது அபராத தொகையாக இருக்க வேண்டும் என்றும், அந்த அபராத தொகையை தமது நண்பர்கள் அரசுக்கு செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்த நீதிபதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால், அவர் அதற்கு மாறாக நீதிமன்றத்தில் தன் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே தந்தது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்பின் சாக்ரடீஸூக்கு மரண தண்டனை உறுதியானது. ஆனால் அப்போதுகூட அவர் கலங்கவில்லை.

'மரணத்தைப் பற்றி கவலைப்படாதே

நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை

அது என்னவென்று உனக்கு தெரியாது.

அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை

பிறகு ஏன் கவலை?".
என்று மரணம் பற்றிய ஓர் அழகான கருத்தை போதித்தார்.

டெல்பி என்ற இடத்தில் இருந்த ஏதென்ஸின் தெய்வம் டிலோஸஷுக்குத் திருவிழா நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. பூஜைக்குரிய புனிதப் பொருட்களுடன் ஏதென்ஸில் கிளம்பியிருந்த கப்பல் டெல்பி சென்று திரும்பி வர, ஒருமாத காலமாகும். நோன்புக் காலமான அந்நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கம் இல்லாததால் சாக்ரடீஸின் மரணம் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

சாக்ரடீஸ், ஒருமாத காலம் கை, கால்களில் கட்டப்பட்ட சங்கிலியுடன் சிறைச்சாலையில் நண்பர்களுடன் தர்க்கம் செய்தார். கப்பல் நாளை திரும்பி வரப்போகிறது என்பதை அறிந்த சாக்ரடீஸின் நண்பன் கிரிட்டோ, சிறையில் இருந்து தப்பிச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக சாக்ரடீஸிடம் கூறினார்.

அதற்கு சாக்ரடீஸ் 'நான் நீதியை நேசித்தவன். நேர்மையானவன் என்ற நற்பெயரோடு இறந்துவிடுகிறேன். எவரும் கவலைப்பட வேண்டாம்.

மரண தண்டனை நிறைவேற்றாமல் போனால்கூட இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இயற்கை மரணம் அடையப்போகும் நான், சிறையில் இருந்து தப்பிச் சென்று என் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொள்ள விரும்பவில்லை" என்று மறுத்துவிட்டார்.

மரண தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தது. சாக்ரடீஸின் கை, கால்களில் கட்டப்பட்ட சங்கிலிகள் விலக்கப்படுகின்றன. எப்போதும் விஷம் கொண்டுவருபவரின் கை அன்று நடுங்கியது. விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், 'இனி நான் செய்ய வேண்டியது என்ன?" எனக் கேட்டார். அதற்கு, 'கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும். குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்" என்றான் சிறைப்பணியாளன்.

அதன்பின் சாக்ரடீஸ் குளித்துவிட்டு வந்தார். சிறைக்காவலன் சொல்லியபடி, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் மிச்சமின்றி குடித்து முடித்தார். இதை கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.

சாக்ரடீஸ், 'பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?" என்று சிரித்தபடி கேட்டுவிட்டு, ஓரிடத்தில் நிற்காமல் அறை முழுக்க நடந்தார். கால்கள் சோர்ந்து போனப்பின் படுக்கையில் அமர்ந்து கால் நீட்டி படுத்தார். அவரின் கால்களை அழுத்திவிட்ட காவலன், 'நான் அழுத்துவது உங்களுக்கு தெரிகிறதா?" எனக் கேட்டான். 'இல்லை" என்றார் சாக்ரடீஸ். பிறகு காவலன் கால்கள் அழுத்துவதை நிறுத்திக்கொண்டான்.

சாக்ரடீஸின் மரணம் :

கால்களில் பரவிய விஷம், இதயத்திற்கு வருகிறது. சாக்ரடீஸஷுக்கு மூச்சடைப்பதுபோல் இருந்தது. அதன்பின் சில நிமிடங்களில் அவரின் உயிர் பிரிந்தது. சாக்ரடீஸ் இறக்கும்போது அவருடைய வயது 70.

அறிவின் திடத்தை உலகிற்கு நிரூபிப்பதற்காக ஒரு கோப்பை விஷத்தை, தேநீர் பருகுவதுபோல் நிதானமாகப்பருகித் தன்னையே பலியிட்டுக்கொண்டார் சாக்ரடீஸ்.

தம்மை 'அறிஞன்" என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்னும் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது. அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான் இன்றும் சாக்ரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்து கொண்டிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்ட சாக்ரடீஸ் தனது மரணத்தைப்பற்றி ஒரு கேள்விக்கூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சாக்ரடீஸின் இறுதி ஊர்வலத்தில் பேசிய அவரது மாணவரும், தத்துவமேதையுமான பிளாட்டோ, ஏதென்ஸ் நகர நண்பர்களே! ஒரு நல்லவரையும், மாபெரும் அறிஞரையும் வீண்பழி சுமத்தி கொன்றுவிட்ட ஏதென்ஸ் தீராத பழிச்சொல்லை ஏற்க போகிறது என்று கூறினார். அதேபோல் சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ்.

'உன்னையே நீ அறிவாய்" என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே! ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள் என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு விட்டுச்சென்றது. ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டதால் சாக்ரடீஸை ஆயிரத்தில் அல்ல ஆயிரம் கோடியில் ஒருவராக இன்றும் மதிக்கிறது உலகம்.

நமது வாழ்க்கையை முடக்கும் சில மூடநம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸை போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் அந்த வானம் என்ன! உலகமே வசப்படும்.

'நாம் எதை இழந்தாலும் தன்மானத்தை இழக்க இடம் தரக்கூடாது" என்று பேசியவர் சாக்ரடீஸ். எதை சொல்கிறோமோ அதன்படி நடக்க வேண்டும் என்பதற்கும், இறுதிவரை உண்மையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்கும் சான்றாக திகழ்ந்தவர் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸின் பொன்மொழிகள்!!

இசையை ரசிக்க தெரிந்தவர்கள், வாழ்க்கையையும் ரசிக்க தெரிந்தவர்களாகவே இருப்பர்.

நீங்கள் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் முதலில் நீங்கள் மற்றவர்களை நேசிக்க தொடங்குங்கள்.

நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது.

ஒவ்வொருவரும் தன்னுடைய கடமை எதுவென்று உணர்ந்து, அதை சிறந்த முறையில் செய்து கொண்டிருந்தால் சமுதாயம் வளர்ச்சி அடையும்.

குழந்தைகளை மனிதநேயம் உடையவர்களாக வளர்க்கும் கடமை பெற்றோருக்கு உண்டு. குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம்.

யார் தன்னுடைய வேலை அல்லது தொழிலை சரியாக செய்கின்றாரோ அவர் கடவுளுக்கு பிரியமானவர்.

தனக்கு நேரக்கூடிய துன்பத்தை மனதின் சமநிலையோடு பொறுத்துக் கொள்கிறவனே மனிதருள் உயர்ந்தவன்.

ஒரு செடி, வளர்வதற்கான முழு ஆற்றலுடன் இருக்கும்போது காற்றும், மழையும், கடுமையான வெப்பமும் அதை என்ன செய்துவிட முடியும்? துணிவும், அறிவும் கொண்ட உள்ளம் எந்த நிலையிலும் கலக்கமோ, குழப்பமோ அடையாது.

உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றப்படி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றப்படி, உன் வாழ்க்கை இருக்கும்.

எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக