இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும், தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர்.
அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர்...
கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவர். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவர்.
தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளை படித்தாலோ அல்லது வீரம் பற்றி பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிர்த்தவர்.
வியாபார நோக்கில் இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் இவர்.
வீர வசனம் என்றாலே இன்றளவுக்கும் நம் மனதில் உடனே ஞாபகத்திற்கு வருவது இவர் கூறிய
'வரி, வட்டி, கிஸ்தி...
யாரை கேட்கிறாய் வரி...
எதற்கு கேட்கிறாய் வரி...
வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...
உனக்கேன் கட்ட வேண்டும் வரி...
எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?
ஏற்றம் இறைத்தாயா?
அல்லது
கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா?"
என்கிற வசனம் தான். அந்த அளவிற்கு 200 ஆண்டுகளை தாண்டியும் அவரது வீரம் தமிழ் மண்ணில் மறையாமல் உள்ளது.
தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்தவர்.
வீரபாண்டிய கட்டபொம்மன்!!
விஜயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு ஆந்திராவிலிருந்து குடிப்பெயர்ந்து வந்தவர்கள்தான் கட்டபொம்மனின் முன்னோர்கள். அப்பொழுது, 'வீரபாண்டியபுரம்" (இப்போதுள்ள ஒட்டப்பிடாரம்) என்ற ஊரை ஜெகவீர பாண்டியன் (நாயக்கர் வம்சம்) ஆட்சி செய்து வந்தார்.
அவருடைய அரசவையில் 'பொம்மு" என்ற கெட்டி பொம்மு அமைச்சராக பணியாற்றினார். இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர்.
தெலுங்கில் 'கெட்டி பொம்மு" என்று சொல்லுக்கு வீரம் மிகுந்தவர் என்று பொருள். இந்த கெட்டி பொம்மு எனும் சொல்லே நாளடைவில் 'கட்டபொம்மு" என்ற சொல்லாக மாறியது. தமிழகத்தில் இந்த சொல்லை 'கட்டபொம்மன்" என்று அழைத்தனர்.
ஜெகவீர பாண்டியனின் இறப்பிற்கு பிறகு கட்டபொம்மு அரச பதவியை ஏற்றார். இவர் மக்களால் 'ஆதி கட்டபொம்மன்" என்று அழைக்கப்பட்டார். பொம்மு மரபில் இவர்தான் முதல் கட்டபொம்மன்.
இந்த பொம்மு வம்சத்தாரில் வந்தவர்களே திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன், திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3ஆம் தேதி, 1760ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். இவரது இயற்பெயர் 'வீரபாண்டியன்" என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.
இவர் 'வீரபாண்டியன்" என்றும், 'கட்டபொம்மன்" என்றும், 'வீரபாண்டிய கட்டபொம்மன்" என்றும், 'கட்டபொம்ம நாயக்கர்" என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தொடர்ந்து நாயக்கர் வம்சத்தில் அரசாண்டு வருவதால் 'பொம்மு நாயக்கர்" என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். இவருக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.
இவர் அரச குடும்பம் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார். பிறகு தனது தந்தையின் மேல் வைத்த பாசம் மற்றும் ஈர்ப்பின் பேரில் தனது இளம் வயதில் தந்தைக்கு உதவியாக இருந்தார். இவர் வாலிப வயதினை அடைந்ததும் வீரசக்கம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாகும்வரை புத்திர பாக்கியம் அமையவில்லை. இவரது சந்ததி இவருடன் முடிந்துவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறுதல்!!
வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30வது வயதில் 1790ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி, 47வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவருக்கு இரு சகோதரர்கள் இருந்தும் அரியணை ஏறினார். இதற்கு காரணம், இவர் பெற்ற நன்மதிப்பும், இவரது வீரமும்தான்.
வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை பொறுப்பை ஏற்ற அதேசமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது.
இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாக கலெக்டர்களை நியமித்தனர்.
இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவரை எதிரிகளாக்கும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
எல்லை பிரச்சனை காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோர்களுக்கும், எட்டயபுர மன்னர்களுக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது. இவர்களின் இந்த பிரிவினையை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் எட்டப்பரை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
எட்டப்பன் கலை, கூத்து ஆகியவற்றின்மீது நாட்டம் உள்ளவர். வீரபாண்டிய கட்டபொம்மன் இதற்கு நேர்மாறாக போர்க்குணம் கொண்டவர். எட்டப்பன் குடும்பத்தினர் ஆங்கிலேயருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார். நெருக்கத்தின் காரணமாக பல சலுகைகளை பெற்றுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனால் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். ஆனால், போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார்.
இதன் காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் மீது மேலும் கோபத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை கைது செய்ய திட்டமிட்டு வந்தனர்.
ஜாக்சன் துரையும், வீரபாண்டிய கட்டபொம்மனும்...!!
இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் ஆங்கிலேயர்களால் கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜாக்சன் தன்னை வந்து சந்திக்குமாறு வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வௌ;வேறு இடங்களுக்கு வரச் சொல்லி கட்டபொம்மனை அலைக்கழித்து வந்தார்.
23 நாட்கள் கழித்து இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்சன் சந்தித்தார். இருவரும் சந்தித்தபோது, வரி செலுத்துமாறு ஜாக்சன் துரை, வீரபாண்டியனிடம் வலியுறுத்தினார்.
அப்போது ஜாக்சன் துரை கட்டபொம்மனை பிடிக்க முற்படுகிறான். கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் சண்டையிட்டு பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.
பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த போர்...!!
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடமும் புகழாய் பரவி, அவர்கள் மனதிலும் வீரத்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்கு பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார்.
ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாக கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799ஆம் ஆண்டில், பீரங்கிக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்கு கட்டபொம்மனாக இருந்தது. கட்டபொம்மனுக்கும், பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இதன் காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மனை தீர்த்துக்கட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் முடிவு செய்தனர். 1799ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது.
போருக்கு ஆயத்தமாகாமல் இருந்தப்போதிலும் கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக போர் நடைபெற்றது. இதில் பலர் இறந்தனர். ஆனால், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து வெளியேறி புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் எட்டப்ப நாயக்கரிடம் சரணடைந்தார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து பிரிட்டிஷ் அதிகாரிகள், அவரை இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது பானர்மென் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட உத்தவிட்டார்.
தூக்கு மேடை ஏறிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனதிலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, 'இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்" என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.
அக்டோபர் 16ஆம் தேதி, 1799ஆம் ஆண்டு கயத்தாறில் உள்ள ஒரு புளிய மரத்தில் தனது 39வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
இதனை அனைத்துப் பாளையக்காரர்களும் பார்த்து கண்ணீர் வடித்தனர். இரண்டு மணிநேரம் வீரபாண்டிய கட்டபொம்மனின் உடல் தூக்குக் கயிற்றில் தொங்கியது.
தற்போது அந்த இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகுகாலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக