இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருமூலர் அல்லது திருமூல நாயனார்
சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண்
சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர்
வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க்
கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல்
திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை
பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
திருமூல சித்தர் என்பவர் வேறு
திருமூலர் என்பவர் வேறு:-
திருமூலர் பெயரில் 12-க்கும் மேற்பட்ட
நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இவர் திருமூலர் அல்ல.
திருமூல சித்தர். வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை.
திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில்
கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச்
சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.
திருமூலர் வரலாறு:-
திருக்கையிலாயத்தில் சிவபெருமானது
திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற
மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப் பெற்ற
சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால்
அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும்
பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார்.
செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாத் கோவில், அவிமுத்தம் (காசி), விந்தமலை,
திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப்
பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப் பெருமானை இறைஞ்சிப் போற்றி,
அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார்.
பின்னர்த் திருவதிகையை அடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன்
அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய
பெரும்பற்றப் புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும் படி ஐந்தொழில்
திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை
களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே
பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டு
களித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.
தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த
சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை
அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து
அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார்.
திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு
நீங்காதொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறையிறைவரை
வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது
காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்று தொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த
ஆயனாகிய மூலன் என்பவன் விஷம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர்
நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.
மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த
துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் 'இப்பசுக்கள் உற்ற
துயரத்தினை நீக்குதல் வேண்டும்' என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. 'இந்த
இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா' எனத் திருவுளத்தெண்ணிய
தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் மறைத்து வைத்து
விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது
உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். இடையன்
மூலன் திருமூலனாய் எழுந்த மாத்திரத்தில் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி
அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே
வாலெடுத்து துள்ளிக் கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன.
திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று
நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று
காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக்
குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.
சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது
வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை
அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார்.
பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில்
தனியே நிற்பாராயினர்.
அந்நிலையில், மூலனுடைய மானமிகு
மனையறக் கிழத்தியாகிய நங்கை, 'என் கணவர் பொழுது சென்ற பின்னரும் வரத் தாழ்ந்தனரே
அவர்க்கு என்ன நேர்ந்ததோ' என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு சென்று,
சிவயோகியார் நின்ற இடத்தையடைந்தாள். தன் கணவது உடம்பிற் தோன்றிய உள்ளுணர்வு
மாற்றத்தைக் கண்டு 'இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்' என்று எண்ணி
அவரைத் தளர்வின்றி இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத்
தொடுவதற்கு நெருங்கினாள். திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத்
தீண்டவொண்ணாதவாறு தடுத்து நிறுத்தினார். தன் கணவனையன்றி மக்கள் முதலிய நெருங்கிய
சுற்றத்தார் ஒருவருமின்றித் தனியாளாகிய அவள், அவரது தொடர்பற்ற நிலைகண்டு அஞ்சி மனங்
கலங்கினாள். 'உமது அன்புடைய மனைவியாகிய எளியோனை வெறுத்து நீங்குதலாகிய இதனால்
எனக்கு எத்தகைய பெருந் துன்பத்தைச் செய்து விட்டீர்' என்று கூறிப்புலம்பி
வாட்டமுற்றாள். அந்நிலையில் நிறைதவச் செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி 'நீ
எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை' எனக் கூறிவிட்டு,
அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்கியிருந்தற்கென அமைந்துள்ள பொதுமடத்திற் புகுந்து
சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.
தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட
மூலன் மனைவி, அது பற்றி யாரிடத்தும் சொல்லாமலும், தவ நிலையினராகிய அவர் பால்
அணையாமலும் அன்றிரவு முழுவதும் உறங்காதவராய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும்
தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள். அதுகேட்ட சான்றோர்,
திருமூலரை அணுகி அவரது நிலைமையை நாடி, 'இது பித்தினால் விளைந்த மயக்கமன்று' பேய்
பிடித்தல் முதலாகப் பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக்
கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய
கருத்து உடையவராய் இவர் அமைந்துள்ளார். இந்நிலைமை யாவராலும் அளந்தற்கரியதாம்' எனத்
தெளிந்தனர். "இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர்
திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல
முற்றுணர்வுடையவராக விளங்குகின்றார். ஆகவே முன்னை நிலைப்படி உங்கள் சுற்றத்
தொடர்பாகிய வாழ்வில் ஈடுபடுவார் அல்லர்' என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள்.
அதுகேட்ட அவள், 'அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளைத்
தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
சாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக
நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள்
வந்த வழியே சென்று தம் உடலைப் பாதுகாப்பாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார்.
அங்கு அதனைக் காணாதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து
தெளிந்தார். பிறைமுடிக்கண்ணிப் பெருமானாகிய இறைவன், உயிர்களிடம் வைத்த
பெருங்கருணையாலே அருளிய சிவாகமங்களின் அரும் பொருள்களை இந்நிலவுலகில் திருமூலரது
வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்றிறத்தால் சிவயோகியாரது
முந்தைய உடம்பினை மறைப்பித்தருளினார். இம்மெய்மையினைத் திருமூலர் தமது
முற்றுணர்வினால் தெளியவுணர்ந்தார். அந்நிலையில் தம்மைப் பின் தொடர்ந்து வந்த
ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதை அவர்கட்கு விளங்க
அறிவுறுத்தருளினார்; அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு நீங்கிய பின் சிவபெருமான்
திருவடிகளைச் சிந்தித்து அவ்விட்டத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை
அடைந்தார். அத் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி
அத் திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரச மரத்தின் கீழ்த் தேவாசனத்தில்
ஈசனை நினைத்து யோகத்தில் அமர்ந்து இறைவனோடு ஒன்றாகக் கலந்து நின்றார்.
இங்கனம் சிவயோக நிலையில்
அமர்ந்திருந்த திருமூலநாயனார் ஊனோடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம்
துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும்
நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் நல்ல
திருமந்திரமாலையாகிய நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான்
ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே
என்னும் திருப்பாடலைத் தொடங்கி
ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக
நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார்.எல்லாம் வல்ல
பரம்பொருள் அன்பே உருவானவர் என்பதை தம் பாடல் மூலம் விளக்குகிறார். அப்பாடல் பின்
வருமாறு
அன்பும் சிவமும் இரண்டென்பர்
அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
இவ்வாராக தமிழ் மூவாயிரமாகிய
திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை
அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்பப்
பெருவாழ்வினைப் பெற்று இனிதிருந்தார்.
”குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை
முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர
விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற
அங்கணனே”
என்று திருமூலர் வரலாற்றை
நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.
திருமூல நாயனார் குருபூசை: ஐப்பசி
மாதத்தில் வரும் அசுவினி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அதே போல திருமூலர் நூல்கள் பல உள்ளன.
அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் பின்வருமாறு:-
1. திருமூலர் காவியம் 8000
2. சிற்பநூல் 1000
3. சோதிடம் 300
4. மாந்திரீகம் 600
5. வைத்தியச் சுருக்கம் 200
6. சூக்கும ஞானம் 100
7. சல்லியம் 1000
8. பெருங்காவியம் 1500
9. யோக ஞானம் 16
10. காவியம் 1000
11. தீட்சை விதி 100
12. ஆறாதாரம் 64
13. கருங்கிடை 600
14. கோர்வை விதி 16
15. பச்சை நூல் 24
16. விதி நூல் 24
17. தீட்சை விதி 18
18. திருமந்திரம் 3000
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக