இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும்
தங்களின் பிறப்பிற்கான அர்த்தத்தை நிலைநாட்டிவிட்டு செல்லவேண்டும் என்பார்கள்.
அந்த வகையில் தனது பிறப்பையும், செயலையும் அர்த்தமுள்ளதாக மாற்றியவர்தான் இவர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் என பலர் இருந்தாலும் அவர்களில் ஒருசிலரே நம்
மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர்.
அவர்களின் தனிச்சிறப்புகள் இன்று
வரையிலும் எவராலும் தொட்டுவிட முடியாத அளவில் இருக்கின்றன. அப்படிப்பட்ட அரசியல்
தலைவர்களுள் ஒருவரைப்பற்றிதான் நாம் இங்கு காண இருக்கிறோம்...
தமிழகத்தில் உணவின்மையால் மாணவர்களின்
கல்வி கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்காக முதன்முதலில் இலவச
மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின்
பொற்காலமாக விளங்கியது.
இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு
பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் 'கிங்மேக்கராக" விளங்கியவர் இவர்.
எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர்
பெற்றவர் இவர்.
என்றைக்கும் நான் ஏழைப்பங்காளன்தான்
என்பதை வாழ்நாளில் நிரூபித்துவிட்டு சென்ற உத்தமர் இவர்.
இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல
வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான்.
தன்னுடைய உழைப்பால், தொண்டால்,
படிப்படியாக உயர்ந்த இவர்,
பெருந்தலைவர்
தென்னாட்டு காந்தி
படிக்காத மேதை
கர்மவீரர்
கல்விக்கண் திறந்தவர்
கருப்பு காந்தி
என பல்வேறு சிறப்பு பெயர்களால்
அழைக்கப்படுகிறார்.
சாதிக்க நினைக்கும் இளைஞர்களின்
மனதில் முன்மாதிரியாக திகழ்பவர்
பெருந்தலைவர் காமராஜர்..!!
காமராஜரின் இளமைப் பருவம்!!
கு.காமராஜர் அவர்கள், 1903ஆம் ஆண்டு
ஜூலை மாதம் 15ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி-சிவகாமியம்மாவின் மகனாக பிறந்தார்.
'காமாட்சி" எனும் குலதெய்வத்தின்
பெயரே ஆரம்பத்தில் இவருக்கு சூட்டப்பட்டது. அவரின் தாய் செல்லமாக 'ராசா" என
அழைப்பதுண்டு. பிற்காலத்தில் இவ்விரு பெயர்களும் சேர்ந்தே 'காமராசர்" என்று
வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த பெயராக மாறியது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
காமராஜர் அவர்கள், ஆரம்பக்கல்வியை
தனது ஊரிலேயே தொடங்கி, 1908ஆம் ஆண்டில் 'ஏனாதி நாராயண வித்யா சாலையில்"
சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான
'சத்ரிய வித்யா சாலா பள்ளியில்" சேர்ந்தார்.
அவருக்கு ஆறு வயதிருக்கும்போது,
அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தை காப்பாற்ற
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு
தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
படிக்கும்போதே மிகவும் பொறுமையுடனும்,
விட்டுக்கொடுக்கும் மனதுடனும் விளங்கினார்.
காமராஜர் பயின்ற பள்ளியில்
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படுவதை
வழக்கமாக கொண்டிருந்தனர். பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள்
முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தை கைநிறைய
பெற்றுக்கொண்டனர். பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது
காமராஜருக்கு பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார்.
கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை
வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். 'எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு
செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கி வந்தது ஏன்?" என வீட்டில்
உள்ளவர்கள் அவரைக் கேட்டனர். அதற்கு காமராஜர் 'மற்ற மாணவர்களுடன் போட்டி
போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா
மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம்
வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு" என்று கூறினார். சிறுவயது
முதலே பகுத்தறியும் ஆற்றலையும் பெற்றிருந்தார் காமராஜர்.
விடுதலை போராட்டத்தில் காமராஜரின்
பங்கு :
பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலை
ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது
இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு
15 வயதானபோது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது.
டாக்டர் வரதராஜுலு நாயுடு,
கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின்
பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை
ஈடுபடுத்திக்கொண்டார். 'ஹோம் ரூல் இயக்கத்தின்" ஒரு அங்கமாக மாறிய அவர், பல
போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.
அதேசமயம் காந்தி விடுத்த ஒத்துழையாமை
இயக்க அழைப்பை ஏற்று 1920ஆம் ஆண்டில் தனது 16வது வயதில் காங்கிரஸ் கட்சியில்
முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சௌகர்யம், பதவி, வசதி
என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.
1930ஆம் ஆண்டில் வேதாரண்யத்தில் நடந்த
காந்தியடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்துக்கொண்டார். அதனால் அவருக்கு 2
ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டே, 'காந்தி இர்வின்
ஒப்பந்தத்தின்" அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
பின் விருதுநகர் வெடிகுண்டு வழக்கில்
கைதானார். அப்போது சேலம் டாக்டர் பெ.வரதராஜூலு நாயுடுவின் வழக்காடும் திறமையால்
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கிருக்கும் போதே விருதுநகர்
நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்கு பின் விடுதலை
ஆனதும் நேராக சென்று தன் பதவியை விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக்
கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய
கொள்கையாக இருந்தது.
மீண்டும் 1942ல் ஆகஸ்ட் புரட்சி
நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை
பெற்றார்.
மேலும், காமராஜர் அவர்கள்
'ஒத்துழையாமை இயக்கம்", 'வைக்கம் சத்தியாக்கிரகம்", 'நாக்பூர் கொடி
சத்தியாக்கிரகம்" போன்றவற்றில் பங்கேற்றார். சென்னையில், 'வாள்
சத்தியாக்கிரகத்தை" தொடங்கி, நீல் சிலை சத்தியாக்கிரகத்திற்கு தலைமை
தாங்கினார்.
மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக
நடந்த பல போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.
முதல்வராக பதவியேற்ற காமராஜர் :
காமராஜர், மிகச்சிறந்த பேச்சாளர் என
புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.
1936ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றபோது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா
விடுதலை அடைவதற்கு முன்பே, சத்தியமூர்த்தி இறந்துவிட்டார். ஆனால், காமராஜர்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்று
தேசியக்கொடியை ஏற்றினார்.
சத்தியமூர்த்தி அவர்களுடன் காமராஜர்
தமிழக முதல்வராக காமராஜர் :
1953ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த
குலக்கல்வி திட்டத்தால் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு
குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்பு குறைந்தது.
இதனால், ராஜாஜி பதவியிலிருந்து விலகி,
தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற
உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளை பெற்றதால், 1954ஆம்
ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி
ஏற்பதற்கு முன், சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவருடைய படத்திற்கு மாலை
அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியை தொடர்ந்தார்.
இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர்
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6
ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9
ஆண்டுகளுக்கு தலைச்சிறந்த தலைமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது
காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம்
என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு.
முதல்வராக காமராஜர் ஆற்றிய பணிகள் :
காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை
மிகவும் வித்தியாசமாகவும், வியக்கும்படியும் அமைத்தார்.
காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே
பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய
இருவரையும் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன
அறிவுரை என்ன தெரியுமா? 'பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக
இருந்தாலும் பரவாயில்லை. அதனை தீர்ப்பதற்கான வழிகளை தேடுங்கள். நீங்கள் ஏதாவது
செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்" என்பதுதான்.
பின்னர், தன்னுடைய முதல் பணியாக
ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000
பள்ளிகளை திறந்தார்.
காமராஜரின் நல்லாட்சியில்
கல்வித்துறையிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சியை கண்டது.
மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர்
செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு
பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி இருப்பதை உறுதி செய்தார்.
எழுத்தறிவின்மையை போக்க வேண்டும்
என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார்.
ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற
பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச சீருடையை
வழங்கினார். காமராஜரின் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.
பள்ளிகளிலும் உயர்கல்வி
நிலையங்களிலும் தமிழை முக்கிய மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்ப பாடப்
புத்தகங்களும் தமிழில் வெளிவர செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு
இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த
ஊக்குவிக்கப்பட்டதும் இவரது ஆட்சி காலத்தில்தான்.
மேலும், 17,000த்திற்கும் மேற்பட்ட
பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு 'இலவச மதிய உணவு
திட்டத்தினை" ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை
ஏற்படுத்தினார்.
இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக
கருதப்பட்ட இந்த திட்டம், உலகளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம்.
இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின்
எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது. பள்ளிகளில் வேலைநாட்கள்
180ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.
முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பங்கள் :
முதல்வராக கர்மவீரர் காமராஜர்
பதவியேற்ற முதல் ஆண்டு. அப்போது இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில்
வழங்கப்படும். இதற்காக தேர்வு செய்யப்பட்ட நூறு விண்ணப்பங்களை முதல்வர் மேஜையில்
வைத்தார் சீப் செகரட்டரி. அப்போது காமராஜர் கேட்டார் இது என்ன கோப்புகள் என்று?
அதற்கு சீப் செகரட்டரி, ஐயா! ஒவ்வொரு
ஆண்டிலும் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர்
கோட்டாவில் வழங்கப்படும். அதற்காக மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட நூறு
விண்ணப்பங்கள் இங்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இருபது விண்ணப்பங்களை நீங்கள்
பொறுமையாக தேர்வு செய்து தாருங்கள். இன்னும் இதற்கு கால அவகாசம் உள்ளது என்று
கூறினார் சீப் செகரட்டரி.
அதற்கு காமராஜர் அவ்வளவு நேரம்
எதற்கு? உடனே தருகிறேன் என்று விண்ணப்பங்களை பார்த்து இருபதை தேர்வு செய்து சீப்
செகரட்டரியின் கையில் கொடுத்தும் விடுகிறார். சீப் செகரட்டரிக்கு ஒரே ஆச்சரியம்.
முதல்வரை பார்த்து, எதை வைத்து உடனே விண்ணப்பங்களை தேர்வு செய்தீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு காமராஜர், 'பெற்றோர்
கையொப்பம்" என்ற இடத்தில் யாரெல்லாம் 'கைரேகை" வைத்திருக்கிறார்களோ
அவற்றைத்தான் தேர்ந்தெடுத்தேன். மேலும் முதல் தலைமுறையில் படிக்காதவர்களின் வீட்டு
பிள்ளைகள் அடுத்த தலைமுறையிலாவது படித்து முன்னேறட்டுமே என்று காமராஜர் சொன்னவுடன்
கண்கலங்கி நின்றாராம் சீப் செகரட்டரி.
காமராஜர் 'படித்துவிட்டு வேலை
கிடைக்காமல், ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர்
பள்ளிகளுக்கு (ஒரே ஒரு ஆசிரியர் வைத்து இயங்கும் பள்ளி) ஆசிரியர்களாக
நியமித்துவிட்டால் என்ன? 'அ" - 'ஆ", 'அம்மா, அப்பா, படம், பட்டம், மரம்,
மாடு"-ன்னு கற்றுத் தரப் பயிற்சி ஆசிரியர்தான் தேவையா?" என்று
வினவினார். அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு.நெ.து.சுந்தர வடிவேலு இந்த
திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு
வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு
பின்னர் அரசாங்கத்தின் செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த
திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.
இதன்பிறகு எல்லா கிராமங்களிலும்
இரவுப் பாடச்சாலைகள் தொடங்கப்பட்டன. முதியோர்கள் கல்வி கற்கலானார்கள்.
எழுத்துக்கள், எண்கள் எழுத படிக்க கற்றுக்கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் கல்வி
நிலை உயர்வடைந்தது.
காமராஜர் தொழில்துறையில் செய்த
சாதனைகள் :
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மேற்கொண்டு
படிக்க முடியாமல் போன காமராஜர், தான் கற்று தேராவிட்டாலும், தமிழ்நாட்டில்
கோடிக்கணக்கானோர் கல்வி கற்று வாழ்வில் முன்னேற எல்லா வகையிலும் பாடுபட்டார்.
அறிவு வளர்ச்சியை கவனத்தில் கொண்டு,
இந்தியாவிலேயே முதன்முதலாக பொதுநூலகச் சட்டத்தை ஏற்படுத்தி, நூலகங்களை அமைத்தார்.
இதனால் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மத்திய நூலகங்கள் உருவாகின.
காமராஜரை படிக்காத மேதை என்பார்கள்.
ஆனால், காமராஜர் உண்மையிலேயே ஒரு படித்த மேதை ஆவார். அவர் தனது கல்வி அறிவை
நாள்தோறும் வளர்த்துக்கொண்டார். ஆரம்ப காலங்களில் செய்தித்தாள்களை படித்து அரசியல்
நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம் காட்டி வந்தார்.
மகாகவி பாரதியாரின் கவிதைகளை அவர்
விரும்பி படித்தார். பிரயாணங்கள் செய்த போதெல்லாம் பாரதியாரின் கவிதைப் புத்தகத்தை
உடனெடுத்து செல்வார். மேலும், பல்வேறு தமிழ் நூல்களையும் படித்தார். ஆங்கிலமும்
கற்றுக்கொண்டார்.
அன்றாடம் ஆங்கிலச் செய்தித்தாள்களை
வரவழைத்து படித்தார். ஆங்கிலத்திலிருந்த நல்ல நூல்களையும் காமராஜர் வாங்கி
படிக்கலானார். தனது கல்வித்திறனை தானே வளர்த்துக்கொண்ட தலைவர் காமராஜர்.
தொழில்துறையின் வளர்ச்சிக்காக
காமராஜர் மேற்கொண்ட திட்டங்கள் :
காமராஜர் முதலமைச்சராக பதவிவகித்த
காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி,
தொழில் வளத்திற்கு முன்னுரிமையளித்தல் என பல திட்டங்களை நிறைவேற்றினார்.
காமராஜர் கல்வித்துறையில் மட்டுமல்லாமல்
தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை
ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் தொழில்துறைகளை வளர்ப்பதை
குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்த தொடங்கினார்.
நெய்வேலி நிலக்கரி திட்டம்
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
கல்பாக்கம் அணு மின்நிலையம்
ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை
கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
சேலம் இரும்பு உருக்கு ஆலை
பாரத மிகு மின் நிறுவனம்
ரயில் பெட்டி தொழிற்சாலை
நிலக்கரி புகைப்படச்சுருள் தொழிற்சாலை
என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன.
இதனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு கிடைத்தது. காமராஜரின் ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு
இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று
பாராட்டினார்.
காமராஜர் நீர்ப்பாசனத்துறையில் செய்த சாதனைகள்..!!
காமராஜர் கல்வித்துறை மற்றும்
தொழில்துறை மட்டுமல்லாமல் நீர்ப்பாசனத்துறையிலும் பல்வேறு திட்டங்களை கொண்டு
வந்தார்.
மேட்டூர் கால்வாய்த்திட்டம்
பவானி திட்டம்
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி
திட்டம்
மணிமுத்தாறு
அமராவதி
வைகை
சாத்தனூர்
கிருஷ்ணகிரி
ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களை
ஏற்படுத்தினார்.
காமராஜர் ஆட்சியின் இறுதியில்,
தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம்
இடத்தைப் பிடித்தது.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட
அணைகள் அனைத்தும் 60 ஆண்டுகளை கடந்தும் மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளித்து
வருகின்றன. இந்த அணைகள் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது.
காமராஜரின் இந்த நீர்ப்பாசன
திட்டங்களால் ஏராளமான மாவட்டங்கள் பாசன வசதி பெற்றன.
மூன்றாவது முறையாக முதலமைச்சர் :
காமராஜர் சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்
தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், காமராஜர் தனது பதவியை விட
தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதினார். இதனால் அவர்
'கே-ப்ளான்" எனப்படும் 'காமராஜர் திட்டத்தினை" கொண்டு வந்தார்.
இதன்பின் கட்சியின் மூத்த தலைவர்கள்
பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப் பணியாற்ற வலியுறுத்தினார்.
மேலும், அவர் முதலமைச்சர் பதவியை
துறந்து தான் பதவி ஆசை இல்லாதவர் என்பதை நிரூப்பித்து காட்டிய மாமேதை.
காமராஜர், 1963ஆம் ஆண்டு அக்டோபர்
9ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். காமராஜர்
திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல்,
லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜக்ஜீவன் ராம், எஸ்.கே.பட்டேல் போன்றோர்
பதவியை துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனால் கட்சியினரிடமும்,
தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும்
முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964ஆம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன்,
லால்பகதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார் காமராஜர்.
பிறகு, 1966ஆம் ஆண்டு லால்பகதூர்
சாஸ்திரியின் திடீர் மரணத்தை தழுவ, நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின்
அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.
அந்த இரண்டு தலைமைத்துவ
மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்"
என்று அழைத்தனர். தமிழ்நாட்டில் போற்றத்தக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது
கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே ஆர்வமாக இருந்தார்.
காமராஜரின் மறைவு :
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும்
சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்ப்பணித்துக்கொண்ட காமராஜர், 1975ஆம் ஆண்டு அக்டோபர்
2ஆம் தேதி தன்னுடைய 72வது வயதில் மறைந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின்
மிக உயரிய விருதான 'பாரத ரத்னா" விருது மத்திய அரசால் இவருக்கு
வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம்
செய்துகொள்ளாமலே வாழ்ந்தார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக
இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். தன் குடும்பம் என்பதற்காக
தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த
சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும்
150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு
மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?
பதவிக்குரிய தற்பெருமை எப்போதும்
அவரிடம் இருந்ததே இல்லை. எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க
முடியும். அதனால்தான் அவரை கர்மவீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும்
போற்றுகிறது தமிழகம்.
இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு
பிரதமர்களை உருவாக்கி, 'இந்தியாவின் கிங்மேக்கராக" திகழ்ந்த பெருந்தலைவர்
காமராஜர், 'பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும்", 'படிக்காத மேதையாகவும்",
'கல்வியின் நாயகனாகவும்", 'மனிதநேயத்தின் மறுஉருவமாகவும்" திகழ்ந்தார்.
சினிமாவில் நாம் பார்த்து
ஆச்சரியப்படும் ஹீரோக்களை போல இல்லாமல், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக
வாழ்ந்து காட்டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும்
கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக
இன்றும் விளங்குகிறார் காமராஜர்.
காமராஜரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!
அரசியலில் எதிர்க்கட்சியினர்
எதிரணியினர்தானே தவிர எதிரிகள் அல்ல என்று ஆரோக்கியமான அரசியல் நடத்தியவர்
காமராஜர்.
ஒருமுறை அமெரிக்க அதிபர் நிக்சன்
காமராஜரை சிந்திக்க விரும்பி அனுமதி கேட்டார். அதற்கு காமராஜர் அனுமதியும்
தரவில்லை, சந்திக்கவும் இல்லை. அதற்கான காரணத்தை காமராஜரிடம் கேட்டபோது, அறிஞர்
அண்ணா அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்க அதிபர் நிக்சனை சந்திக்க அனுமதி
தரவில்லை. நம் தமிழ்நாட்டு தமிழரை மதிக்காதவரை நான் ஏன் சந்திக்க வேண்டும் என்று
கூறினாராம் மறத்தமிழன்.
திரையரங்கத்திற்கான அனுமதி :
திருநெல்வேலியில் ரத்னா, பார்வதி
திரையரங்குகள் உள்ளது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கான அனுமதி எவ்வாறு
வழங்கப்பட்டது என்று நமக்கு தெரியுமா? இந்த இரண்டு திரையரங்கத்தின் உரிமையாளர்
முனைஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர் திரையரங்கத்தை கட்டிவிட்டு அதற்கான
அனுமதி பெற அப்போதைய முதல்வரான காமராஜரிடம் சென்றார்.
ஆனால், காமராஜரோ திரையரங்கத்திற்கான
அனுமதியை உடனே கொடுக்கவில்லை. நான் திரையரங்கிற்கு அனுமதி கொடுக்க வேண்டும்
என்றால் நீங்கள் இரண்டு பள்ளிக்கூடங்கள் கட்ட வேண்டும். அப்படி கட்டி வாருங்கள்
அப்போது நான் அனுமதி கொடுக்கிறேன் என்றார் காமராஜர்.
காமராஜர் சொன்னப்படியே முனைஞ்சிபட்டியில்
ஒரு பள்ளியையும், நாங்குநேரியில் ஒரு பள்ளியையும் கட்டி முடித்துவிட்டு
காமராஜரிடம் சென்றார் திரையரங்கத்தின் உரிமையாளர். அப்போது காமராஜர் அனுமதி
கொடுத்தது மட்டுமல்லாமல் நேரில் வந்து இந்த இரண்டு பள்ளிகளையும் திறந்தும்
வைத்தார்.
இன்று அந்த பள்ளிகளில் ஏராளமான
மாணவர்கள் படிக்கின்றார்கள். ஒரு கட்டிடத்திற்கு இவ்வளவு தொகை லஞ்சம் வேண்டும் என
கேட்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் காமராஜர் முற்றிலும் வித்தியாசமானவர் என்பதில்
இதிலிருந்து தெரிகிறது அல்லவா !!.
அணை கட்ட யோசனை :
காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க
தேனிக்கு சென்றார். அப்போதைய எம்.எல்.ஏ. என்.ஆர்.தியாகராஜன், முதல்வர்
காமராஜரிடம், 'ஆண்டிப்பட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர்
அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்" என்றார்.
யோசனையில் ஆழ்ந்த காமராஜர், 'கலெக்டர்
ஐயாவை கூப்பிடுங்கள்" என்றார். கலெக்டர் வந்தவுடன், 'இந்த பகுதியில் ஓடும்
முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து
அனுப்புங்கள்" என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.வோ, நாம்
திருட்டு பற்றி கூறுகிறோம், ஆனால் இவர் சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என
நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அதற்கு பதில் அளித்த காமராஜர், 'பொருட்களை
ஏன் அபகரிக்கின்றனர்? அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு
அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருட்களை அபகரிப்பது குறையும்" என்றார்.
கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே
செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்க
வாய்ப்புள்ளதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு
மேட்டுப் பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடனே
செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.
அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால்,
இன்று லட்சக்கணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.

காமராஜர் மீதான அபிமானம் :
காமராஜர் அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டி தலைவராக இருந்தபோது, குஜராத்தில் ஒரு கூட்டத்தில் பேச நேர்ந்தது.
காமராஜருக்கு ஆங்கிலம் கொஞ்சம் தெரியும். இந்தி சுத்தமாக தெரியாது. இந்தியை பிறர்
பேசும்போது புரிந்து கொள்வார். ஆனால் கூட்டத்தில் இந்தியில் அவரால் பேச முடியாது.
கூட்டம் அதிகமாக இருந்தது. யார்
பேசினாலும் காமராஜ்... காமராஜ்... என்று சத்தம் போட்டுக்கொண்டேயிருந்தனர்
கூட்டத்தில் உள்ளவர்கள். அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த நேரு, காமராஜரை பேச
அழைத்தார். எழுந்த பெருந்தலைவர் காமராஜர் மேடைக்கு போய் தமிழில் பேச ஆரம்பித்தார்.
சுற்றியிருந்த கூட்டத்தில் யாருக்கும் ஒரு வார்த்தைக்கூட புரியவில்லை. ஆனால்,
பெருந்தலைவர் காமராஜர் பேசப்பேச ஒவ்வொரு வரிக்கும் கை தட்டிய வண்ணம் இருந்தனர்
கூட்டத்தினர். இவ்வளவுக்கும் அவருடைய பேச்சை யாரும் மொழிப்பெயர்க்கவும் இல்லை.
அவர் பேசி முடித்ததும் கூட்டத்தினர்
அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அப்போது, அங்கிருந்த ஒரு பத்திரிக்கை
நிரூபர் ஒரு குஜராத்தியை பார்த்து, 'உங்களுக்கு புரியாத மொழியில் காமராஜர்
பேசினார். நீங்கள் ஏன் எழுந்து நின்று கை தட்டினீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த குஜராத்தி சொன்னார், 'ஒரு நல்லவர் பேசினார். எனவே பேசியது எங்களுக்கு
புரியாவிட்டாலும் அவர் நல்லதையே பேசியிருப்பார் என நாங்கள் நம்புகிறோம். அதனால்
தான் எழுந்து நின்று கை தட்டினோம்" என்றார்.
அவர் பேசினால் நல்லதைத்தான் பேசுவார்
என்ற நம்பிக்கை மக்களின் மனதில் வேரூன்றி இருந்தது.
காமராஜர், கண்ணதாசன் நட்பு :
காமராஜருக்கும், கண்ணதாசனுக்கும்
இருந்த உறவு அற்புதமானது. கண்ணதாசன், காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன்,
தந்தையாகப் பார்த்தேன், தெய்வமாகப் பார்த்தேன், அதன்பிறகுதான் தலைவனாகப்
பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர். காமராஜரைப் பற்றி வியந்து வியந்து பாடல்
எழுதியவர்.
கண்ணதாசன் அவர்கள் காமராஜரை பற்றி
குறிப்பிடும்போது ஆண்டிக்கு கூட கையில் திருவோடு இருக்கும். உனக்கு அது கூட
இல்லையே! என்று காமராஜரின் சொத்து மதிப்பை குறித்துப் பாடியுள்ளார்.
மதுவிலக்கு கொள்கையில் ஈடுபாடு கொண்ட
காமராஜர் தன் வாழ்நாள் முழுவதுமே மதுவுக்கு எதிரானவராகவே இருந்தார். மது
அருந்துபவர்கள் காங்கிரஸில் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை
இருந்ததால் தன் நண்பன் கண்ணதாசனை அழைத்து மதுவை விட்டுவிடும் படி வலியுறுத்தினார்.
கண்ணதாசா! இந்த மதுவை விட்டுவிடு.
இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன்
பல சமாதானங்களை சொல்லிப் பார்த்தார். ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை. அதன்பின்
யோசித்த கண்ணதாசன், சரி விட்டுறேன்... குடிக்கிறதை இல்லை. காங்கிரஸ் கட்சியை என்று
கூறிவிட்டு கிளம்பினார்.
கண்ணதாசனும் மதுவை விடமுடியாமல்
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியை விட்டுவிட்டார். கண்ணதாசன் அவர்கள் நண்பனாக
இருந்தாலும் தவறு செய்யும்போது தயங்காமல் தட்டிகேட்டவர் காமராஜர் மட்டுமே.
சென்னையை மீட்ட காமராஜர் :
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள்
அமைக்கப்பட்ட போது, சென்னை நகரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்று ஆந்திர மாநில
காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திர
மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகும் கூட ஆந்திர மாநில மக்களுக்கு சென்னை மீது ஒரு கண்
இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் 1948ஆம் ஆண்டு சென்னை
மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம்
என்பதை நிலைநாட்ட, ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தலில் வென்று சென்னையை ஆந்திராவுடன் இணைத்து விட வேண்டும் என்பது அவர்களது
நோக்கமாக இருந்தது.
அந்த சமயத்தில் காமராஜர், தமிழ்நாடு
காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். ஆந்திரா காங்கிரஸ்காரர்கள் திட்டமிட்டு
காய்களை நகர்த்துவதை அறிந்த காமராஜர், சென்னை மாநகராட்சி தேர்தலில் தமிழக
காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவித்தார். எல்லோரும்
காமராஜரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
காமராஜர் தன் அதிரடியை தொடங்கினார்.
தமிழ்நாடு எல்லைக்கமிட்டி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பு சார்பில்
'தமிழ்நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்" என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதோடு அந்த அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
தேர்தலில் தமிழ்நாடு எல்லைக்கமிட்டி
சார்பில் காமராஜர் நிறுத்திய வேட்பாளர்கள் அமோக வெற்றியை பெற்றனர். ஆந்திர
காங்கிரஸ்காரர்கள் படுதோல்வியை தழுவினார்கள். இதன்மூலம் சென்னை நகரை காமராஜர்
மீட்டு, தமிழ்நாட்டுடன் தக்கவைத்துக் கொண்டார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆந்திர
மாநில தலைவர்கள், சென்னை நகருக்கு உரிமை கொண்டாடுவதை கைவிட்டுவிட்டனர். இதன்மூலம்
காமராஜர் தமிழக-ஆந்திர காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்பட இருந்த சண்டைக்கு
முற்றுப்புள்ளி வைத்தார்.
இரண்டாவது சென்னை நகரம் கை நழுவி
செல்லாமல் பார்த்துக் கொண்டார்.
பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர்
உதிர்த்த வரிகள் :
பள்ளிக்கு படிக்க வரும்
மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த காமராஜர், அந்த
விழாவில் பேசியது :
கடைசி மனிதனுக்கும் கதி மோட்சம்
கிடைக்க வேண்டும் என்பதுதான் காந்திஜியின் கொள்கை.
கடையர்கள் எப்படிக்கடைத்தேறுவார்கள்?
கல்வி கற்றால் கடைத்தேறுவார்கள்.
படிக்கின்ற கல்வியால் அறிவும்
திறமையும் வளர்ந்தால், பிழைத்துக் கொள்வார்கள்;, மனிதர்கள் மாறுவார்கள்.
நம் நாட்டில் பெரும்பாலானோர்க்கு
எழுத்தறிவே கிடையாது.
ஊரில் பள்ளிக்கூடங்கள் இல்லாதபோது
எழுத்தறிவு எப்படி வரும்?
ஆகவே, நம்முடைய முதல் வேலை எல்லா
ஊர்களிலும் பள்ளிகளை திறப்பதுதான். அடுத்த பணி, அதை எல்லோருக்கும் கிடைக்கும்
வகையில் இலவசமாக்குதல்.
நிலம் ஈரமாக இருந்தால் தானே பயிரிட
முடியும்? காய்ந்து கிடந்தால் எப்படி பயிரிட முடியும்?
பிள்ளைகளின் வயிறு காய்ந்து
கிடக்கும்போது, பாடம் சொல்லிக் கொடுத்தால் பாடம் ஏறுமா?
நம் நாட்டில் ஏழைகள் தான் அதிகம்
என்பது எனக்குத்தெரியும்.
எனவே, பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்குப்
பள்ளிக்கூடத்திலேயே சோறு போடுவது நல்லது.
அன்னதானம் என்பது நமக்கு புதிய விஷயம்
அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு அன்னதானம் அளித்தோம். இப்பொழுது
பள்ளிக்கூடத்தை தேடி போய் அன்னதானம் செய்யச் சொல்கிறோம்.
அன்னதானம் செய்வதால் உயிர் காத்த
புண்ணியமும், படிப்புக் கொடுத்த புண்ணியமும் நமக்கு வந்து சேரும். இதை உணர்ந்து
இந்த பகுதியில் பல ஊர்க்காரர்கள் தாங்களே பகல் உணவுத்திட்டத்தை நடத்த முன்வந்து,
ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். மற்ற
வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர் ஊராகச்சென்று பகல்
உணவுத்திட்டத்திற்காக 'பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன்." இவ்வாறு
முதல்வர் காமராஜர் பேசினார்.
இதைக்கேட்டதும் கூட்டத்தில்
இருந்தவர்கள் உணர்ச்சிப்பிழம்பாக மாறிவிட்டனர். 'நீங்கள் ஏன் பிச்சை எடுக்க
வேண்டும்? நாங்கள் தேவையான உதவிகளைச் செய்கிறோம்" என்று குரல் கொடுத்தனர்.
பகல் உணவுத்திட்டத்தின் கீழ் முதல்
கட்டமாக 4,200 பள்ளிகளில் 1,20,000 மாணவர்களுக்குப் பகல் உணவு வழங்கப்பட்டது.
கிராமங்களில் இந்தப் பகல் உணவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படத் தொடங்கியதன்
மூலம் அனைத்து சாதிக்குழந்தைகளும் சமமாக ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிடும்
சூழ்நிலை தானாகவே உருவாயிற்று.
இந்த பகல் உணவுத்திட்டம் ஒரு
மௌனப்புரட்சியாக அமைந்தது. இதனை அனைத்துக்கட்சியினரும் பாராட்டினர்.
ஒத்துழைக்கவும் முன்வந்தனர். கல்வி, சாப்பாடு, சமத்துவம் என்ற மூன்றும் மதிய உணவு
எனும் ஒரே திட்டத்தால் சாத்தியமானது.
துரிதமாக செயல்பட்ட காமராஜர் :
காமராஜர் அவர்கள் மின்சாரம் வந்த
துவக்க காலக்கட்டத்தில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு கிராமத்திற்கு சென்றிருந்தார்.
திரளான மக்கள் கூட்டம். மக்கள் கூட்டத்தில் ஒரு வயதானவர் கையில் மனுவோடு
வந்திருந்தார் அவரிடம்,
காமராஜர் : வாங்கண்ணே! கையில
என்னண்ணே! என்றார்.
முதியவர் : ஐயா! எங்கூருக்கு கரண்டு
கம்பி போட்டு கரண்ட் பல்பு போடனும் ஐயா என்றார்.
உடனே முதல்வர் காமராஜர் மின்சார வாரிய
அதிகாரிகளை அழைத்தார். இங்கு ஏன் இன்னும் மின்கம்பம் அமைக்கப்படவில்லை எனக்
கேட்டார்.
அதிகாரியும் ஐயா! மின் கம்பம் (அன்றைய
காலக்கட்டத்தில் தேக்கு மரமே மின் கம்பமாக பயன்படுத்தப்பட்டது) இல்லாததனால்
தாமதத்திற்கு காரணம் என்று சொன்னார்.
சுற்றும் முற்றும் பார்த்தார் காமராஜர்...
மீண்டும் அதிகாரியை அழைத்து மின்
கம்பம் இல்லை என்பதற்காக காத்திருக்க வேண்டாம். இந்த பக்கத்தில் உயரமாக இருக்கும்
இந்த பனைமரத்தில் ஒரு கம்பியை குறுக்கே கட்டி உடனே பல்பை மாட்டுங்கள் என்று
உத்தரவிட்டார்.
இன்று, நாளை என்று எந்த வேலையையும்
தள்ளிப்போடாமல், உடனுக்குடனே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர் கர்மவீரர் காமராஜர்
மட்டுமே.
மக்களின் தேவைகளையும்...
வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றுவதில் காமராஜருக்கு நிகர் காமராஜர் மட்டுமே...!!
காமராஜர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?
ஒருமுறை இங்கிலாந்து ராணி
'எலிசபத்" சென்னைக்கு வந்திருந்தார். அப்போது முதல்வரான பெருந்தலைவர்
காமராஜர் எலிசபத் ராணியை வரவேற்றார். அப்போது ராணி சிரித்துக்கொண்டே காமராஜர்
அவர்களை பார்த்து 'நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?" என்று கேட்டார்.
அதற்கு காமராஜர் புன்னகையோடு 'இங்கு எந்தனையோ பெண்கள் திருமண செய்ய வசதி இல்லாமல்
இருக்கிறார்கள், அந்த சகோதரிகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், பின்பு
பார்க்கலாம்" என்று சொன்னாராம்...!!
தமிழ்நாட்டிற்கு மின்சார வசதி
கிடைக்கப்பெற்ற காலத்தில், மின்சார வசதியை மக்களுக்கு அளிப்பதற்காக மின்மாற்றிகள் வாங்க
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவில் அவை அப்போது தயாரிக்கப்படவில்லை. போலந்து
நாட்டில் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தவுடன், அதிகாரிகளை அந்நாட்டிற்கு
அனுப்பினார் தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் காமராஜர்.
50 மின்மாற்றிகள் வாங்கத் திட்டம்
வகுத்தனர். அதற்குண்டான பணத்தை மட்டும்தான்; கொண்டு சென்றார்கள். 50
மின்மாற்றிகளுக்கு ஆர்டர் கொடுத்தபோது மின்மாற்றி நிறுவனம், தமிழ்நாட்டின்
அதிகாரிகளிடம், எங்களிடம் மின்மாற்றி வாங்குபவர்களுக்கு கமிஷன் தருவது வழக்கம்.
நீங்கள் 50 வாங்குவதால் இதற்கு நாங்கள் கமிஷனாக ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாகவும்,
அந்த தொகையும் எவ்வளவு என்று சொல்லியிருக்கிறார்கள்.
உடனடியாக அதிகாரிகள் அங்கிருந்து
தொலைபேசி வாயிலாக முதல்வர் காமராஜரிடம் தொடர்பு கொண்டு, 'ஐயா இவ்வளவு
மின்மாற்றிகள் வாங்குவதால் அவற்றை வாங்கும் நமக்கு கமிஷன் தருவேன் என்கிறார்கள்,
அந்தப் பணத்தை நாங்கள் என்ன செய்வது?" என்று கேட்டனர்.
அதைக்கேட்ட காமராஜர், அடடே...!!
அப்படியா, நல்லது. அந்த தொகைக்கு கூடுதலாக 20 மின்மாற்றிகளை வாங்கி வாருங்கள். நம்
மாநிலத்தில் இன்னும் பல பேர் பயனடைவார்களே" என்று உத்தரவிட்டாராம்.
அதன்படி 70 மின்மாற்றிகள்
வாங்கப்பட்டன. அந்த அதிகாரிகளும், காமராஜரும் நினைத்திருந்தால் அந்த கமிஷன் பணத்தை
வெளிநாட்டு வங்கிகளில் தங்களின் பெயரில் போட்டு வைத்திருக்க முடியும். மக்கள்
வரிப்பணத்தின் மீது காமராஜரும், அவரது அதிகாரிகளும் கொண்டிருந்த நன்மதிப்புக்கு
இதைவிட வேறு என்ன? சான்று இருக்க முடியும்.
நட்பை போற்றிய காமராஜர்!!
ஒருநாள் காமராஜரின் நண்பர் ஒருவர்
பெருந்தலைவரை காண முதல்வர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் மிகச் சாதாரணமானவராக
இருந்தார். வேட்டிச் சட்டை அணிந்திருந்தார், கையில் ஒரு மஞ்சள் பை வைத்திருந்தார்.
அவரை கண்டதும் காமராஜர் அழைத்து, அருகில் அமரவைத்து 'என்ன ரெட்டியாரே" என்று
நலம் விசாரித்தார்.
ஏதாவது முக்கிய சேதியா! இல்ல சும்மா
என்னை பார்க்க வந்தீரா... என்று கேட்டார். வந்தவரும் தயங்கி, தயங்கி ஏதோ சொல்ல
வந்தார்;. பரவாயில்ல சொல்லுங்க... ரெட்டியாரே என்று மீண்டும் கேட்டார்
பெருந்தலைவர்.
ஒன்றுமில்லை... என் மகனுக்கு கல்யாணம்
அதான். இதுக்கு ஏன் ரெட்டியாரே தயங்கணும். நல்ல விஷயம்தான என்று தட்டிக்கொடுத்து,
நான் என்ன பண்ணணும்? என்றார் காமராஜர்.
கல்யாணத்துக்கு நீங்க வரணும்... நீங்கதான்
தலைமை தாங்கணும்... ஊரெல்லாம் சொல்லிட்டேன். பத்திரிக்கை கொடுத்துட்டு உங்ககிட்ட
சொல்லதான் நேர்ல வந்தேன் என்று தயங்கியவர், நீங்க வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை
இருக்கு, அதனால அப்படி முடிவெடுத்துட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க... என்று
ரெட்டியார் இழுக்க காமராஜருக்கு பட்டென்று கோபம் வந்துவிட்டது. முகம்
இறுகிப்போனது. எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி
மத்தவங்ககிட்ட சொன்னீங்க... என்று கடுமையாக பேசினார்;.
அப்போது ரெட்டியாருக்கு கண்கள்
கலங்கியது... தப்பா நினைச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம்
இருக்கு. அதுக்கு பக்கத்துலதான் என் ஊர் இருக்கு. அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா
கட்டாயம் வருவீங்கன்னு நினைச்சுட்டேன் என்றார்.
பெருந்தலைவர் கோபத்துடன், உங்க வீட்டு
கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம், அதுவா என் வேலை, வேற வேலை இல்லையா? போங்க,
வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க என்று பட்டென்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.
முகத்தில் அடித்ததைபோல் ஆனது
ரெட்டியாருக்கு. நடந்ததை வெளியில் சொல்லவில்லை. முதல்வர் வரமாட்டார் என்று எப்படி
சொல்வது? பேசாமல் கல்யாணத்தை வீட்டிலேயே எளிமையாக நடத்தலாம் என்ற முடிவிற்கு
வந்துவிட்டார். அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும்.
திருமணத்தன்று காமராஜர் வரமாட்டார்
என்பது ஜனங்களுக்கு புரிந்தது. வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள். என்னமோ
நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க, என் வீட்டுக்
கல்யாணத்துக்கு வருவார்னு பெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு... இப்ப என்னாச்சு...
என்ற ஏளனப் பேச்சு கூடியது...
மனம் உடைந்துபோன ரெட்டியார் உடல்
கூனிப்போனார். அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். அவரால் வெளியில்
தலைகாட்ட முடியவில்லை.
காமராஜரும் நானும் பல வருஷம் ஒன்னா
சிறையில் இருந்த நண்பர்கள் என்று ஊரில் நட்புக்கதையை சொன்னவராயிற்றே.
திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார் என்று நம்பியவர் ஆயிற்றே... அழுதபடி
படுத்துக்கிடந்தார்.
மனம் உடைந்துபோன ரெட்டியார்
செய்வதறியாது நிலைகுலைந்து போனார். கல்யாணவீடே வெறிச்சோடியானது. சற்று நேரத்திற்கு
பிறகு ஒரு கார் வந்தது. காரிலிருந்து இறங்கியவர் முதல்வர் காமராஜர் வரப்போகிறார்
என்ற செய்தியைச் சொன்னார். ரெட்டியாருக்கு நம்பிக்கையில்லை. நம்பிக்கையற்று
அறைக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார்.
சில நிமிடங்களில் அடுத்த கார் வந்தது.
அதிலிருந்து முதல்வர்... பெருந்தலைவரே! வந்து இறங்கினார். இரண்டு மூன்று பெரிய
கேரீயரில் சாப்பாட்டோடு. ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம்
கூட்டம் கூடிவிட்டது.
ரெட்டியார் முதல்வரை
கட்டித்தழுவிக்கொண்டார். குலுங்கி குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம்
சொன்னார் காமராஜர். உங்க கஷ்டம் எனக்கு தெரியும் ரெட்டியாரே. சுதந்திர போராட்டம்,
ஜெயில்னு எல்லாத்தையும் இழந்தது எனக்கு தெரியும்.
அதான் பையனுக்கு கல்யாணம்னு
சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம வரமுடியாதுன்னு சொன்னேன். நான் வர்றதா
சொல்லியிருந்தா... நீர் இருக்கிற கஷ்டத்துல கடன் வாங்குவீர்... முதல்வர் வர்றார்னு
ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்.
அதான் அப்படி சொன்னேன்... என்னை
மன்னிச்சுடுப்பா. உன் வீட்டு கல்யாணத்துக்கு வர்றாம எங்க போவன் என்று
ஆரத்தழுவினார் பெருந்தலைவர். கண்ணீர் ஆனந்தக்கண்ணீரான நேரம் அது...
பிறகு வாசலிலேயே பாய்விரித்து
எடுத்துவந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி ரெட்டியாரின் குடும்பத்தாரோடு
தானும் உட்கார்ந்து சாப்பிட்டார். இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு
கொடுத்துவிடக்கூடாது என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்,
ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை.
நட்பை போற்றியவர் காமராஜர். நிலை
மாறினால் குணம் மாறலாம் என்று மாறிப்போன மனிதர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு
மாமனிதனை மறுபடியும் நம்மால் காண முடியுமா....?
காவலரை பாராட்டிய காமராஜர் :
காமராஜர் முதல்முறையாக முதல்வர்
பொறுப்பேற்ற பின்னர் அனைவரிடமிருந்தும் விடைப்பெற்று வெளியே வந்து ஒரு காரில்
ஏறினார். திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து 'சைரன்" என்ற
மிகுவொலி எழுந்தது.
புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார்
காமராஜர். முன்னால் வண்டியிலிருந்த காவல்துறை அதிகாரியை அழைத்தார். 'அது என்னையா
சத்தம்?" என்று கேட்டார் காமராஜர். 'ஐயா, இது முதலமைச்சர் செல்லும்போது
போக்குவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி.
முன்னால் முதல்வர்கள் காலத்திலிருந்து
பின்பற்றி வரும் சம்பிரதாயம் என்றார் காவல்துறை அதிகாரி. 'இதோ பாருங்க... இதுக்கு
முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்... எனக்கு இதெல்லாம்
வேண்டாம்னேன். சத்தம் போடாம போங்க" என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி -
நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்த காவலர்
காமராஜர் சென்ற வண்டியை நிறுத்தி, பின் போக்குவரத்தை சரிசெய்து காமராஜரின் வண்டியை
செல்ல அனுமதியளித்தார்.
அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை
மேலதிகாரிகளின் முகத்தில் அளவுக்கு அதிகமான கோபத்துடன் முகம் சிவந்திருந்தது.
ஆனால், காமராஜரோ அந்த நடுத்தெரு காவலரின் கடமையாற்றலை கண்டு உள்ளம் பூரித்தார்.
காவலரை தாண்டி காமராஜரின் கார்
செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடுநடுங்கி போனார் அந்த காவலர்.
முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே என்று பதறிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின்
சினத்திற்கு ஆளாகிவிட்டோமே என கலங்கினார்.
அன்று மாலை காமராஜர் வீடு
திரும்பியபோது முகத்தில் கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட
காவலரை தட்டிக்கொடுத்த காமராஜர், அவரது கடமை உணர்வை பாராட்டினார். அப்போதுதான்
காவலரின் உள்ளம் அமைதியடைந்தது.
காமராஜர் முதலமைச்சராக இருந்தவரை
அவருக்கு பாதுகாப்பாக சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை
தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னை பாவித்துக் கொண்டார் நமது
பெருந்தலைவர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக