இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வானம்பட்டி, அது ஒரு சின்;னக் கிராமம். படிப்பறிவு பெரிய அளவில் இல்லை. ஆனாலும் பள்ளிக்கூடம் இல்லாமலில்லை. ஊரின் மையப் பகுதியில் ஒரு அரசுப் பள்ளி இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரையில் இருந்த அந்த பள்ளிக்கு ஐந்து ஆசிரியர்கள். வகுப்புக்கு ஏழெட்டு மாணவர்கள் தான் வருவார்கள். பல மாணவர்கள் வீட்டிலும், காட்டிலும் பெற்றோருடன் வேலைக்கு சென்று விடுவார்கள்.
பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக ஆசிரியர்களும் பெரிதாக ஒன்றும் வருத்தப்பட மாட்டார்கள்.
காலையில் ஒன்பது மணிக்கு பள்ளி திறக்கப்படும். ஐந்தாம் வகுப்பு மணிக்குட்டி தான் மானிட்டர். வந்தவுடன் காலையில் முதல் மணி அடித்து விடுவான். அதற்காகவே முதல் மாணவனாக வந்துவிடுவான். மணி அடிக்கும் போது அவனுக்கு இருக்கும் பெருமிதம்... அப்பப்பா சொல்ல முடியாது. பின்னே இருக்காதா என்ன… இவன் மணிச் சத்தத்துக்கு பள்ளிக்கூடம் மட்டுமா இயங்குது, பால் பண்ணைக்கு பால்கறக்க மாடு பத்திக் கொண்டு போகிறவர்களும் இவன் மணி அடித்தப் பிறகுதானே மணி ஒன்பது ஆகிவிட்டது என்று தெரிந்துகொள்வார்கள். ஆசிரியர்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். டவுன் பள்ளிகூட மாணவர்கள் இதை டீச்சர்ஸ் மீட்டிங் என்று சொல்வார்கள்.
கூடிப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்கள் அவரவர் வகுப்புக்குள் நுழைந்தார்கள். நான்காம் வகுப்புக்குள் நுழைந்தார் ஆசிரியர் அருமைநாயகம். அதுவரை சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் அமைதியாக அவரவர் இடத்தில் வரிசையாக அமர்ந்து விட்டார்கள் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
ஆசிரியர் அருமைநாயகம் நாற்காலியை மேசைக்குப் பக்கத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார். நாற்காலியில் உட்கார்ந்தவர் ஒரு கையை மேசையில் வைத்துக் கொண்டு மறுகையால் தலையை லேசாக சொரிந்தவாறே மாணவர்களை நோட்டமிட்டார். மாணவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவர்கள் வழக்கம் போல் ஜாலியாகத்தான் இருந்தார்கள். சாப்பிடும்போது மீன் முள் தொண்டையில் மாட்டிக்கிட்டவன் கழுத்தைத் திருப்பாமல் கண்ணை மட்டும் உருட்டுவது போல் உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தார் ஆசிரியர். மாணவர்கள் ஒவ்வொருவராக ஆசிரியருக்கு அருகில் வந்தார்கள். மேசையைச் சுற்றி நின்றார்கள்.
கார்த்திக் கேட்டான், சார் என்ன சார் அமைதியா இருக்கிய, பெரிய சார் திட்டிப்புட்டாரோ என்றான். ஆசிரியர் அருமைநாயகம் கார்த்திக் பக்கம் கண்னை திருப்பினார். சார் இன்னைக்கு எங்க வீட்டில சோளச் சோறு, உங்க வீட்டில என்ன சோறு என்று ராமு கேட்டதும் ஆசிரியருக்கு லேசாக சிரிப்பு வந்து விட்டது. கொஞ்சம் கட்டையாக குண்டாக இருப்பாள் லட்சுமி. அவள் என்ன சொன்னாலும் வகுப்பே சிரிக்கத்தான் செய்யும்.
சார்… சார்… சார்….
என்ன லட்சுமி என்றார் ஆசிரியர். சார் இந்த ஊதா கலர் கட்டம் போட்ட சட்டை உங்களுக்கு சூப்பரா இருக்காம் சரசு சொன்னாள்.
அப்படியா சரசு, இது போன வருசம் தீபாவளிக்கு எடுத்தது.
சரி அது இருக்கட்டும், ஒரு போட்டி இருக்கு, பேச்சுப்போட்டி. அந்தப் போட்டிக்கு யார பேசச் சொல்லலாம்னுதான் யோசிச்சிக்கிட்டிருக்கேன், என்று ஆசிரியர் அருமைநாயகம் சொன்னார்.
உடனே கார்த்திக், பேச்சுப்போட்டியா? அது எப்படி சார் பேச்சுப்போட்டி... என்று இழுத்தான் வியப்பாக.
உள்ளங்கை மேல் நோக்கி இருக்க, கார்த்திக்கை நோக்கி நீட்டியவாறு ராமு சொன்னான். டேய் பொங்கல் விளையாட்டுப் போட்டியில ஓடியாந்து முதல்ல கோட்டைத் தொடுகிறவனுக்கு பரிசு தருவாங்கல்லாட, அது போல யாரு சத்தமா பேசுறாங்களோ அவங்களுக்குப் பரிசு. அப்படித்தான சார்.
ஆமா சத்தமா பேசணும். ஒவ்வொருத்தராத்தான் பேசணும். அதுவும் மைக்கில தான் பேசணும். அதுல யாரு திக்காம பேசுறாங்களோ அவங்களுக்குத்தான் பரிசு.
டேய் பாருங்கடா நம்மளப் போயி மைக்கில பேசணும் பேசணும்ங்கிறாரு சாரு. லட்சுமிக்கு சிரிப்பு அடக்க முடியல.
உங்களால பேச முடியும். அதுக்கு நான் நோட்டுத்தாளில் இரண்டு பக்கத்துக்கு எழுதித் தருவேன். அத நீங்க எல்லாரும் மனப்பாடம் பண்ண வேண்டும். உங்கள்ள யாரு நல்ல பேசுறாங்களோ அவங்கள டவுன் பள்ளிக் கூடத்துல நடக்கிற போட்டிக்கு கூட்டிட்டுப் போவேன்.
டவுன் பள்ளிக்கூடத்துலயா? நான் வரலப்பா… நம்மளால முடியாது. லட்சுமி வாய்தான் சும்மா இருக்காதே முந்திரிக் கொட்டை மாதிரி முந்தி முந்தி பேசுவாள்.
இதுவரை இந்த மாதிரி போட்டியையோ, கலை நிகழ்ச்சியையோ கண்டிராத இந்தக் குழந்தைகளுக்கு இது வியப்பாகத்தான் இருந்தது. ஆனால் கல்வி அதிகாரி, யூனியன் அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் 26 பள்ளிகளும் கலந்து கொள்ள வேண்டும் என ஆணை பிறப்பித்தப் பிறகு கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
ஆசிரியர் அருமைநாயகம் இரண்டு பக்க அளவில் உள்ள உரையை மாணவர்களுக்கு கரும்பலகையில் எழுதிப்போட்டார். எல்லோரும் முதலில் இதை உங்கள் நோட்டுகளில் எழுதி கொள்ளுங்கள், என்றதும் வகுப்பே அமைதியானது.
ஆசிரியர் எழுதிப் போட்டதை மாணவர்கள் தங்களது நோட்டுகளில் எழுதிக் கொண்டார்கள். ஆசிரியர் அருமைநாயகம் அருமையாக சொல்லிக் கொடுத்தார். ஆனால் பயத்தில் மாணவர்கள் பொருள் புரியாமல் படித்துக் கொண்டிருந்தார்கள்.
பேச்சுப்போட்டிக்கான தயாரிப்பு தொடங்கி ஒரு வாரம் ஆகி விட்டது. கார்த்திக் கொஞ்சம் திக்கிச் திக்கி சொன்னான். தனக்குத் தானே சொல்லிப் பார்த்துக் கொண்டான். அவனால் சிறிதளவு சொல்ல முடிந்தது. அவனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. மற்ற மாணவர்களிடம் திக்கித் திக்கி பேசிக் காட்டினான். எல்லோரும் கை தட்டி பாராட்டினார்கள். ஏனென்றால் மற்ற யாருக்கும் ஒரு வரியை கூட பேச முடியவில்லை. இப்போதுதான் கார்த்திக்கை பயம் கவ்வ ஆரம்பித்தது. யாருக்குமே பேச தெரியவில்லையென்றால் நம்மைத்தானே பேச டவுனுக்கு அழைத்துச் செல்வார்கள். தன்னால் மனப்பாடமாக கொஞ்சம் படிக்க முடிகிறதே என்று சந்தோசமடைந்த கார்த்திக் இப்போது பீதியில் எனக்கும் பேசத் தெரியலியே, எனக்கும் பேசத் தெரியலியே என்றான். ஆசிரியர் அருமைநாயகம் ஒவ்வொருவராக அழைத்து பேசச் சொன்னார். யாருமே சரியா பேசவில்லை என்று சொல்வதை விட யாருமே பேசவி;ல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காhத்;திக்கும் தனது பங்குக்கு உளறினான். அவன் வேண்டுமென்றே உளறுவது ஆசிரியருக்குத் தெரிந்து விட்டது. அதனால் கார்த்திக்கை அருகில் வரச் செய்து அவனுக்கு உற்சாகம் ஊட்டி நீதான் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறாய். தைரியமாக இரு, இன்னும் நன்றாக படி. போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது என்று அவனை உற்சாகமூட்டி படிக்க வைத்தார்.
கார்த்திக் மட்டுமா இந்த போட்டிக்கு புதியவன் அந்த ஆசிரியரும் தான். ஆசிரியர் மட்டுமா புதியவர் இந்த பள்ளிக்கூடமே பேச்சுப்போட்டிக்கு புதியது தான். வழக்கமான உற்சாகத்தை இழந்திருந்தான் கார்த்திக். அவனுக்குள் ஒரு விதமான பீதி தொற்றிக் கொண்டிருந்தது.
அந்த நாள் வந்தது. ஆசிரியர் அருமைநாயகம் கார்த்திக்கை அழைத்துக் கொண்டு டவுன் பெரிய பள்ளிக்கூடத்திற்கு செல்ல தயாராக இருந்தார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை டவுனுக்கு வழியனுப்ப ஒன்று கூடினர். வாழ்த்துக் கூறினர். வாழ்த்துக் கூறியவர்களுக்கே தெரியும் பரிசு ஏதும் கிடைக்காது என்று, மேலும் அவமானப்படப் போகிறது நம் பள்ளி என்பதும் அவர்களுக்கே தெரியும்.
ஆசிரியர் அருமைநாயகம் கார்த்திக்கை தனது மொபட்டில் ஏற்றிக் கொண்டு விடை பெற்றார். ஆசிரியரின் மொபட்டில் பின்னால் உட்கார்ந்து பயணிப்பதற்காக பெருமிதப்பட்டுக் கொண்டான். ஆனாலும் அவனுக்குள் இனம்புரியாத பயம் தொற்றிக் கொண்டிருந்தது.
டவுன் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அங்கு அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் காலில் ஷீ, கழுத்தில் டை மற்றும் அடையாள அட்டை தொங்கவிட்டிருந்தனர். மற்ற பள்ளிகளில் இருந்து பேச்சுப்போட்டிக்கு வந்திருந்த மாணவ-மாணவியர் மிடுக்குடனும், வனப்புடனும், மேக்கப்புடனும் வந்திருந்தனர். அத்தனையையும் பார்த்த கார்த்திக் ஆசிரியரை ஏறிட்டுப் பார்த்தான். அவர் பிற பள்ளி ஆசிரியர்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி ஒதுங்கினாலும், அவர்களாகவே வந்து ஹலோ அருமைநாயகம் சார் எப்படி இருக்கீங்க. ஒங்க ஸ்கூலும் காம்படிசன்ல்ல கலந்துக்கிறதா என்று கேட்க தவறவில்லை.
கல்வி அதிகாரி, கல்வித்துறை தமிழ்நாடு என்ற வாசகம் பொருந்திய வாகனத்தில் வந்து இறங்கினார். அவரைப் பார்த்ததும் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் போட்டி நடக்கும் அரங்கத்திற்குள் வந்து அமர்ந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் போட்டி ஆரம்பித்தது. முதலில் ஒரு மாணவனை பேச அழைத்தனர். ஏற்ற இறக்கத்தோடு வீராவேசமாகப் பேசினான் அந்த மாணவன். கார்த்திக் உற்றுக் கவனித்தான். அந்த மாணவன் பேசியது வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமாபடத்தில் சிவாஜி பேசியதை நினைக்கும்படி செய்தது.
கார்த்திக்குக்கு லேசாக வியர்த்தது. அதுமட்டுமல்ல டவுசர் நனைய ஆரம்பித்தது. வயிற்றைக் கலக்கியது பயத்தில். மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் பேசி முடித்ததும் அனைவரும் கரகோசம் எழுப்பிப் பாராட்டினர்.
கார்த்திக் நைசாக எழுந்து அரங்கை விட்டு வெளியே சென்றான். ஒரு கையில் டவுசரை பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு வெளியே சென்றான். பள்ளியின் சுற்றுச் சுவருக்கு அருகில் சென்று டவுசரை இறக்கிவிட்டப்படி குத்தவைத்து இருக்கும் முன்னாடியே, வயிற்றைக் கலக்கி தண்ணியாக போனது. வயிற்றைப் புரட்டியது. பக்கத்தில் இருந்த அடிபம்புக்கு அருகில் தேங்கி நின்ற தண்ணீரில் கால் கழுவிக் கொண்டு பள்ளி வளாகத்திற்குள் மீண்டும் நுழைந்தான். ஆனாலும் போட்டி நடக்கும் அரங்கிற்குள் நுழைய பயந்து, அங்கே விளையாட்டு மைதானத்தின் ஓரமாக நின்றிருந்த வேப்பம் மரங்களுக்கிடையே சென்றான். ஒரு பெரிய மரத்தின் பின்பு ஒளிந்து கொண்டான். திடீரென ஆசிரியர் அருமைநாயகம் மாணவன் கார்த்திக் அரங்கில் மாணவர்களுடன் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டார். அவசர அவசரமாக வெளியே வந்தார். அரங்கிற்கு வெளியே விளையாட்டு மைதானத்தை நோட்டமிட்டார். கார்த்திக், கார்த்திக் எங்கேடா இருக்க… சத்தம் கேட்டது. ஆசிரியர் தன்னை அழைக்கும் சத்தம், காதில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றுவது போல் இருந்தது.
ஆசிரியர் அருமைநாயகத்துக்கு பயம் வந்துவிட்டது. பையன் பயந்து போய் திசை தெரியாமல் எங்கோ போய் விட்டானோ, பதற்றத்தோடு தேடினார். ஆசிரியரின் சத்தம் வரும் எதிர்பக்கமாக மரத்தடியில் சுற்றி வந்தான் கார்த்திக்.
சுற்றிச் சுற்றிப்பார்த்த ஆசிரியர் திடீர் என்று அமைதியானார். மெல்ல சத்தம் இல்லாமல் கார்த்திக் ஒளிந்து கொண்டிருந்த மரத்தை நோக்கி நடந்தார்.
பாவம் கார்த்திக் தன்னுடைய நிழல் தன்னை காட்டிக் கொடுத்துவிடும் என்பதை அறியவில்லை. ஆசிரியரின் கையில் மாட்டிக் கொண்டான்.
டேய் கார்த்திக், ஏன்டா பயந்திட்டியா? வாடா போவோம். நான் சொல்லிக் கொடுத்ததை மட்டும் பேசிடு நான் உனக்கு டவுன்ல பெரிய ஹோட்டல்ல பிரியாணி வாங்கித் தருகிறேன். ஆசிரியர் கெஞ்சினார். அவனுக்குத் தைரியம் கொடுத்துக் கொண்டே போட்டி நடக்கும் அரங்கை நோக்கி நடந்தனர்.
இருவரும் அரங்கிற்குள் நுழைந்தனர். தனது அருகில் கார்த்திக்கை வைத்துக் கொண்டார். அப்போது பேசி கொண்டிருந்த மாணவி தனது பேச்சை முடித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கினாள்.
அடுத்ததாக வானம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர் கார்த்திக் என்று போட்டி நடத்தும் ஆசிரியர் கூறியதும், அருமைநாயகம் ஆசிரியருக்குத்தான் வயிற்றை கலக்கியிருக்கும். அப்படித்தான் அவர் முகத்தில் தெரிந்தது. இருப்பினும் அவற்றை மறைத்துக் கொண்டு அவனைக் கையில் பிடித்துக் கொண்டு மேடையை நோக்கி வந்தார். கார்த்திக்கின் முகத்தில் போட்டிருந்த ஸேன்டல் பவுடர் வியர்வையில் மினுங்கியது. மேடையில் ஏறி மைக் முன் நின்றான். அவிழ்ந்து விழ தயாராக இருந்த டவுசரை ஒரு கையில் பிடித்துக் கொண்டான்.
கார்த்திக் பேச ஆரம்பித்தான். மைக்கைப் பார்த்தோ, முன்னே இருக்கும் பார்வையாளர்களைப் பார்த்தோ பேசவில்லை. தனது ஆசிரியர் அருமைநாயகத்தை மட்டுமே பார்த்தான்.
ஆசிரியர் அருமைநாயகம் கார்த்திக்கை பார்த்து வாய் அசைப்பதும், கையசைப்பதுமாக இருந்தது மற்ற ஆசிரியர்களை வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டது. ஆனால் அந்த ஆசிரியர்கள் சிரிப்பது எதுவும் ஆசிரியர் அருமைநாயகத்தின் காதில் விழவில்லை. கல்வி அதிகாரியும் மேடையில் இருந்தவாறே கார்த்திக்கையும் அவனது ஆசிரியர் அருமைநாயகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கார்த்திக் பேசிக் கொண்டிருந்தான். டவுசரில் பித்தான் இல்லாததனால் அவ்வப்போது டவுசருடன் போராடிக் கொண்டிருந்தான். ஒரு கையில் டவுசரை பிடித்துக் கொண்டு பேசினான். அப்போது ஆசிரியரின் கையசைவைப் பார்த்தவாறே இப்படி பேசினான். சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை சுதந்திரம். பல வீரர்களின் இன்னுயிரைக் குடித்தது. காந்தியடிகளின் எளிமை, மக்களை கவர்ந்தது. திக்கித்திணறி பேச்சை முடித்தான்.
ஆசிரியர் அருமைநாயகத்திற்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்ததைப் போல உற்சாகத்தோடு கார்த்திக்கை அள்ளி அணைத்து தூக்கிக் கொண்டு தனது இருக்கையை நோக்கி நடந்து சென்றார். எல்லோரும் அவர்கள் இருவரையும் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.
கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக