Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 31 ஆகஸ்ட், 2019

சகுனமும் அது பார்த்த வேலையும் !

 Image result for சகுனம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



அலுவலகத்தில் அரைகுறை தூக்கத்தில் இருந்து விழித்த மேனேஜர் அலுவலர்களைப் பார்த்து, அமைதி, அமைதி, ஒழுங்கா வேலை செய்யுங்க, என்ன தேவையில்லாம கூடிக் கூடிக் பேசிக்கிட்டு இருக்கீங்க என்று அனிச்சையாக பேசுவதைப் போல, சிங்கார சென்னையில் அதிகாலை, பரபரப்பாக மக்கள் பேருந்தைப் பிடித்து பணித் தளத்திற்கு விரையும் நேரம். ஐயோ மணி ஏழு ஆகுது இன்னும் பஸ்ஸைக் காணலியே.

இரு சக்கர வாகனங்களில் வேகமாக போகிறவர்களைப் பார்த்து, பேருந்துக்காக காத்து நிற்பவர்களின் வழக்கமான வசனம். குடி முழுகியா போகுது. ஏன் இந்த அவசரம். கொஞ்சம் மெதுவாத்தான் போனா என்ன?

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அவசரம். ஒருத்தருக்கு வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் போய் விட வேண்டும் என்ற அவசரம். சிலருக்கு இன்னைக்கு இன்டர்வியூக்கு போற கம்பெனிலாவது வேலை கிடைக்க வேண்டும் என்ற கவலை. சிலருக்கு நமக்கு எவன் வேலைக் கொடுப்பான் என்ற சந்தேகம்.

சிலர் நண்பர்களிடம் சொல்வார்கள் நல்ல பையனா இருந்தா நம்ம கம்பெனிக்கு வேலைக்கு சேர்த்து விடுங்க. வேலைக்கு ஆளே கிடைக்கிறதில்ல. ஆனால் நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து விட்டால் வாழ்க்கைப் பாதையே மாறி விடும். அந்தஸ்தும் உயர்ந்து விடும்.

புளியங்காய் காய்த்து கிடக்கிற புளியம் மரத்தில, ஒரே எறியில புளியங்காய் விழுந்து விட்டதென்றால், ம்ம்ம்... என்குறி எப்போதுமே தப்பினதில்லை என்பதும், பல தடவை எறிந்தும் புளியங்காய் விழவில்லையென்றால், சீச்சீ... புளியங்காய் ரொம்ப புளிக்கும் என்று சொல்வதும் இயல்பு தானே.

ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் ஒன்றாக ஒரே ரூமில் தங்கி கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி வேலை தேடுவது பேசன் மட்டுமல்ல எளிதான இயல்பான காரியமாகவும் இருக்கிறது.

சென்னை வடபழனியில், கன்னிமாரியம்மன் கோவில் தெருவில், நான்கு பேர் சேர்ந்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து வேலை தேடி வந்தார்கள். அதில் மூன்று பேருக்கு நான்கைந்து மாதங்களில் வேலை கிடைத்து விட்டது. நம்மாளு சுந்தரத்திற்கு மட்டும்தான் இன்னும் வேலை கிடைக்கவில்லை ஆனாலும் சாப்பாட்டிற்கு பஞ்சம் இல்லை.

சுந்தரத்தை காலையில் எழுப்பி விடுவதற்கு மூன்று பேருக்கும் பயம் உண்டு. ஏன்னா சுந்தரம் காலையில எழுந்து முதலில் யார் முகத்தில் முழிக்கிறானோ அன்றைக்கு அவன் தான் சானம் வரட்டி எறிகின்ற குட்டிச்சுவர்.

காலைல உன் முகத்தில விழிச்சதுனாலத்தான் எனக்கு இன்டர்வியூல வேலை கிடைக்கல என்பான். அதற்கு பயந்து போய் யாரும் அவனை எழுப்புறதில்லை.

காலையில எழுந்திருக்கிறதிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை சகுனம் பார்த்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்வான். சில நாட்களில் காலை சாப்பாடே மதியம் தான் சாப்பிடுவான் என்றால் பாருங்களேன்.

ஆனால் இன்றைக்கு ஒரு விசேஷமான நாள். பெரிய கம்பெனில் இன்டர்வியூ, நல்ல சம்பளம், நிரந்தர வேலை. இந்த இன்டர்வியூவில மட்டும் இவன் தேறி விட்டால், அதை நினைக்கையிலேயே சுந்தரத்திற்கு பயந்து வியர்த்து கொட்டிவிடும்.

ஆனால் அவன் இன்டர்வியூவிற்கு இரவில் தயார் செய்ததால் நல்ல தூக்கம். இன்னும் எழுந்திருக்கவில்லை. அவனை எழுப்பிவிடுவதற்கோ அவர்களுக்கு பயம். ஏன்னா இன்றைக்கு முக்கியமான இன்டர்வியூ. அதனால நண்பர்களில் ஒருவன் தனது செல்போனில் ரிங்டோனில் சேவல் கூவுவதைப் போல உள்ள ரிங்டோனை ஒலிக்கச் செய்தான். சேவல் கூவும் சத்தம் கேட்டு சுந்தரம் ஐயோ நேரம் ஆகிடுதே என்று பதறி போய் எழுந்தான். பதறிய வேகத்தில் சகுனத்தை மறந்து சுற்றும் முற்றும் பார்த்தான். அதற்குள்ளாக மற்ற மூன்று நண்பர்களும் ஆளுக்கு ஒரு மூலையாக போய் ஒழிந்து கொண்டார்கள். ஏனென்றால் தன் முகத்தில் முதன் முதலாக முழித்து தன்னைக் குறை கூறி விடக்கூடாது என்பதற்காக. இந்த மூன்று பேரில் ஒருத்தன் சேருக்குப் பின்னாடியும், ஒருத்தன் கதவிற்குப் பின்னாடியும், ஒருத்தன் கட்டிலுக்கு கீழேயும் சென்று தங்களை அவசர அவசரமாக ஒழிந்துக் கொண்டார்கள். இந்த அமளியில் எங்கோ நின்ற பூனை பயந்து போய் ஓடிய வேகத்தில் சுந்தரத்தின் மேல் விழுந்து, உயிர் பிழைத்தால் போதும் என்று எங்கோ ஓடி மறைந்து விட்டது.

சாதாரண சகுனத்திற்கே சங்கடப்படும் சுந்தரம், பூனை மேல விழுந்து ஓடினால் எப்படி வருந்தியிருப்பான். அவ்வளவுதான் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.

சுந்தரத்தை பொறுத்தவரையில் பூனை இன்றைய நாளைக் கவிழ்த்துப் போட்டிருந்தாலும், நண்பர்கள் மூன்று பேரையும் தலை நிமிர வைத்துவிட்டதல்லவா. ஏனென்றால் நண்பர்கள் முகத்துல விழித்ததுதான் காரணம் என்று பழி போட முடியாதே.

மூவரும் பயம் தெளிந்து வெளியில் வந்தார்கள். அதில் ஒருவன் குமரேசன், டேய் சுந்தரம் சீக்கிரமாக எழுந்து குளித்து விட்டு இன்டர்வியூவிற்கு கிளம்பு. நீ போக வேண்டிய இடம் அடையாறு. நீ சீக்கிரமா கிளம்பி போனத்தான் பத்து மணி இன்டர்வியூவுக்கு போக முடியும், என்று அவசரப்படுத்தினான்.

தாலி கட்டப் போகிற புதுமாப்பிள்ளை மாதிரி சுந்தரமும் வேக வேகமாகக் கிளம்பித் தன்னை அலங்கரித்துக் கொண்டான். ஆனாலும் இடை இடையே, தன் மேல் விழுந்து ஓடிய பூனை நினைவுக்கு வர, கல்யாண மேடையில் பெண்ணின் தகப்பனார், மாப்பிள்ளையைப் பற்றி யாரோ கூறிய தவறான செய்தியைப் பற்றி நினைத்து தவிப்பது போல்; தவித்தான்.

இருந்தாலும் நேரம் குறைவாகத்தான் இருக்கிறது. பேருந்தைப் பிடித்து அடையாறு செல்ல வேண்டும். அதற்குள் பேருந்து ஆர்காடு ரோடு ட்ராபிக்கிலயும், மௌண்ட் ரோடு ட்ராபிக்கிலயும் ஊர்ந்து செல்ல நேர்ந்தால் சிக்கல்தான் என்பதையும் மனதில் ஓட விட்டுக் கொண்டான்.

குமரேசன் சொன்னான், டேய் சுந்தரம் சும்மா ரேமான்ஸ் மாடல் மாதிரி இருக்கேடா. இந்த வேலை கண்டிப்பாக உனக்குக் கிடைக்கும்.

ஆதரவாக இருந்தது. இந்த ஆதரவிலே வீட்டை விட்டு வெளியே கிளம்பினான். வாசலில் காலை வைத்தவாறு தலையை மட்டும் வெளியே நீட்டி தெருவில் இருபுறமும் பார்த்தான். பார்த்த வேகத்தில் தலையில் கைவைத்தவாறு வீட்டிற்குள் திரும்பியவன் சொன்னான், டேய் எனக்கு வேலையே கிடைக்காதா!

என்னடா சுந்தரம் ! என்ன ஆச்சு? என்றான் குமரேசன்.

என்ன ஆச்சா ! வெளியே போய் பாரு. நாலு வீடு தாண்டி ஐந்தாவது வீட்டுக்கிளவி, வெள்ளைச் சேலைக்காரி, பக்கத்து வீட்டுக்காரியோடு பேசிக்கிட்டு இருக்கிறாள். அறிவு வேண்டாம் இவள்களுக்கு, காலையில வேலைக்கு போகிறவனும், வேலைத் தேடிப் போகிறவனும் வருவானுகளே. வெள்ளைச் சேலையக் கட்டிக்கிட்டு அபசகுனமா தெருவில நிக்கக் கூடாது என்கிற அறிவு வேண்டாம் என்று திட்டியவாறே பிளாஸ்டிக் நாற்காலியில் பொத்தென்று விழுந்தான்.

டேய் சுந்தரம், சகுனம் பார்க்காதே என்று சொன்னாலும் நீ கேட்க மாட்ட, ஆனாலும் உனக்கு நேரமாகிவிட்டது. முதலில் நீ இன்டர்வியூ அட்டர்ன் பன்ன கிளம்பு என்றான், நண்பர்களில் ஒருவன் அக்கறையாக.

எத்தனை அறிவுரைகள் சொன்னாலும் எதையும் காதில் வாங்கி கொள்ளாத சுந்தரம் பத்து நிமிடம் கழித்து மீண்டும் வெளியே வந்தான். ஆனாலும் மிகவும் சுவாரஸ்;யமாக பேசிக் கொண்டிருந்த அந்த வெள்ளைச் சேலை கட்டிருந்த வயதான பெண்மணி இன்னும் பேசிக் கொண்டிருந்தாள். சின்ன மாற்றம் இரண்டு பேராக நின்றிருந்தவர்களுடன் மூன்றாவது ஒரு பெண்மணியும் சேர்ந்து கொண்டாள். அவ்வளவுதான் சுந்தரத்திற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. எலி பொந்துக்குள் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி பார்த்து விட்டு ஆபத்தென்று அறிந்து மீண்டும் தலையை உள்ளே இழுத்துக் கொள்வது போல சுந்தரம் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.

நண்பர்கள் நான்கு பேரும் ஐந்தாறு மாதமாக இந்த தெருவில் வசிப்பதால், இங்குள்ளவர்களுக்கு இவர்கள் மிகவும் பரிச்சய மாணவர்கள். அதற்குமேல் யாரை பற்றியும் யாரும் அறிந்து கொள்ள விரும்பாதவர்கள்தான் சென்னை வாசிகள்.

ஏழு மணிக்கு கிளம்பினால்தான் அடையாறு போக சரியாக இருக்கும் என்ற நிலையில் மணி ஏழரை ஆகியும் இன்னும் சுந்தரம் சகுனம் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து குமரேசனுக்கு கோபம் வந்தது. டேய் லாட்டரியில பணம் கிடைக்குமா, கிடைக்காதான்னு நினைக்கிறவன் குறைந்தபட்சம் ஒரு லாட்டரி சீட்டாவது வாங்கியிருக்க வேண்டமா? போ...போ... முதல்ல போய் இன்டர்வியூ அட்டர்ன் பன்னு, என்று தள்ளாத குறையா தள்ளி வெளியே அனுப்பினான்.

நடப்பது நடக்கட்டும். இதற்கு மேல் இன்னமும் தாமதிக்க முடியாது என்ற பட்சத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு வேகமாக நடக்கலானான் சுந்தரம். இவன் யாரை பார்க்கக் கூடாது, யார் முகத்தில் முழித்து போகக் கூடாது என்று நினைத்தானோ, அந்த வெள்ளை சேலை கட்டிய பெண்மணி எதர்ச்சையாக திரும்ப, இருவர் விழிகளும் கால் நொடி காலம் நேருக்கு நேர் சந்தித்து விட்டன. அவ்வளவுதான் சுந்தரத்திற்கு பதற்றமாக இருந்ததுடன், அவனது கால்கள் ஆடத்தொடங்கி தான் என்ன செய்வதறியாது திகைத்து நின்றான்.

நீங்கள் முணுமுணுப்பதன் அர்த்தம் எனக்கு புரிகிறது. இன்னும் எத்தனை சகுனங்கள் இருக்கிறதோ? பேருந்து நிறுத்தம், பேருந்தில் ஏறுவது, இறங்குவது, கம்பெனியில் நுழைவது, இன்டர்வியூவிற்காக அலுவலக வாயிலில் காத்திருக்கும் போது, அலுவலகத்தில் இன்டர்வியூவிற்காக நுழையும் போது, அலுவலக அறையின் வாசல் வாஸ்து…. இதையெல்லாம் கடந்து சுந்தரம் இன்டர்வியூ வரைக்கும் வந்திருக்கிறான் என்றால் வேலை செய்வதில் ஆர்வம் என்பதா, பணம் இல்லாமல் வாழ முடியாது என்பதா, போராட்டம் தான் வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மன போராட்டம் என்பதா !

வாசலில் நிற்கும் பியூன் ஒவ்வொரு வராக பெயர் சொல்லி அழைக்கும் போது அவர்கள் தங்களையும், தங்கள் உடை, ஷீ, டை ஆகியவற்றைச் சரிசெய்து கொண்டு உள்ளே நுழைவதை எத்தனை இன்டர்வியூவில் பார்த்திருக்கிறான்.

நீதிமன்றத்தில் சாட்சிகளின் பெயரை மூன்று முறை உச்சரிக்கும் கோர்ட் குமஸ்தா போல தெரிந்தான் பியூன், சுந்தரத்திற்கு. சுதாரித்துக் கொண்டவன் தானாய் திறக்கும் அலுவலக கதவின் இயக்கம் கூட இங்கு முறைப்படுத்தப் பட்டிருந்தது வியப்பைத் தந்தது.

எத்தனை இன்டர்வியூ அட்டர்ன் செய்திருந்தாலும் இந்த இன்டர்வியூ சிறு பதற்றத்தைத் தான் தந்தது சுந்தரத்திற்கு.

மேலாண்மை இயக்குநர், இன்டர்வியூவிற்கு வருபவர்களின் ஒவ்வொரு செயலையும், ஏன் அசைவையும் பார்ப்பார்கள்.

சுந்தரத்தை பார்த்து கையசைத்து எதிரில் இருக்கும் நாற்காலியில் இருக்குமாறு சைகை காட்டினார், இயக்குநர்.

நாற்காலியின் நுனியில் உட்கார்ந்த சுந்தரம் இயக்குநரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தந்து கொண்டிருந்தான். மேலாண்மை இயக்குநரின் முகத்தை பார்க்கும் போது தெரிந்துவிட்டது, சுந்தரத்திற்கு. தனது பதில் திருப்திகரமாக இல்லை என்பது.

சுந்தரத்தின் இன்டர்வியூவின் இடையில் உள்ளே வந்தவரிடம், அம்மா ஒரு நிமிடம் இருங்கள் என்றதும் அவர், சுந்தரத்திற்குப் பின்னால் அவரையொட்டி போடப்பட்டிருந்த நீண்ட சோபாவில் அமர்ந்து அதில் இருந்த ஆங்கில நாளிதழில் தலைப்பு செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சுந்தரத்துடன் இன்டர்வியூவை முடித்துக் கொண்டு மேலாண்மை இயக்குநர் சொன்னார், நீங்கள் ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. உங்கள் பதிலில் தெளிவு இல்லை, உறுதி இல்லை. காரணம் உங்களுக்கு மன உறுதியில்லை. நீங்கள் இன்னும் உங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு இந்தப் பணியை கொடுக்க முடியாததற்கு வருந்துகிறேன்! என்று கூறிக் கொண்டே சுந்தரத்தின் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை கொடுத்தார்.

சான்றிதழ் கோப்பைக் கையில் வாங்கிக் கொண்டு சோகமுடன் எழுந்து திரும்பியவனின் எதிரில் அந்த வெள்ளை சேலை கட்டிய பெண்மணி சோபாவில் அமர்ந்திருந்தாள். ஏதேச்சையாக நிமிர்ந்தவரின் கண்ணில் சுந்தரம் பட, தம்பி நீங்க வடபழனி கன்னிமாரியம்மன் கோயில் தெருவில் தான இருக்கீங்க.

ஆமாங்க…..தயக்கத்துடன்

காலையில எதையோ மறந்து வச்சிட்டு வந்துட்டீங்களோ. வீட்டுக்குள் இருந்து வெளியே வந்ததும், வீட்டுக்குள் போறதுமா இருந்தீங்களே அதான் கேட்டேன். அம்மா உங்களுக்கு தெரியுமா இவங்கள...

ஆமாப்பா, நம்ம வீட்டுக்கு நாலு வீடு தாண்டிதான் நாலஞ்சி பசங்களோட தங்கியிருக்காங்க, இல்லையாப்பா...

ஆ... ஆமாங்க,

சரி நாளையில இருந்து கம்பெனிக்கு வேலைக்கு வந்திருங்க என்றார் அந்தப்பெண்மணி.

மேலாண்மை இயக்குநர், அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சே பேசாமல், மலர்ந்த முகத்துடன் டைப்பிஸ்டைப் பார்த்தார்.

பார்வையைப் புரிந்து கொண்ட டைப்பிஸ்ட் சுந்தரத்தின் கையில் இருந்த சான்றிதழ் அடங்கிய ஃபைலை வாங்கி அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டர் அடிக்கத் தொடங்கி விட்டார்.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக