Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

சிறுவனும் அவனது ஆசையும் !

 Image result for சிறுவனும் அவனது ஆசையும் !
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வீட்டுக்கு வெளியே பெஞ்ச், சேர் போடப்பட்டிருந்தது. அன்னப்பன் அமைதியாக ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். வாயில் துண்டை கவ்வியவாறு துக்கத்தை அடக்கிக் கொண்டிருந்தான். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பத்து வயது மகன் அப்பா மாரிச்சாமி அருகில் அமர்ந்திருக்க, அவன் முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் ஐந்து வயது சிறுவன். 

அவன் பார்ப்பதைச் சட்டை செய்யாமல் அப்பாவின் மடியில் ஒரு கையை வைத்தவாறு அப்பாவோடு பேசிக் கொண்டிருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏலே! ஏய் கதிரு, உன்னை அனாதையாக்கிட்டுப் போய்ட்டாளேடா உங்க அம்மா என்று ஒரு உறவுக்காரப் பெண் கதிரின் தலையைத்த தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டு அழுதவள், குடிசை வீட்டுக்குள்ளே குனிந்து நுழைந்து கதிரின் தாயருக்கருகில் அழுது கொண்டிருந்தவர்ளோடு சேர்ந்து அழ ஆரம்பித்தாள்.

ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருத்தி சொன்னாள். ஏய்! வள்ளியம்மா, எம் பையன் கதிரு படிச்சி ஒரு அதிகாரியா வருவான், அவன் மூளை அப்படி என்று பெருமையா பீத்துவியே. இப்படி உன் மகனை குடிகார புருசன்கிட்ட அம்போன்னு விட்டுட்டு போய்ட்டயே! காலையில கூட பள்ளிக்கூடத்துக்கு கதிரு போரப்ப அவனை முன்னால விட்டு பின்னால ரசிச்சிக்கிட்டு இருந்தியே!.. பள்ளிகூடத்துக்குப் போன புள்ள திரும்பி வர்றதுக்குள்ள, இப்பிடி போய்ச் சேர்ந்திட்டியே.

ஏண்டி வள்ளியம்மா, உன் புருசன் இப்படி ராவும் பகலும் குடிச்சிக்கிட்டு ஒரு வேலைக்கும் போகம இருக்கானேன்னதுக்கு, ஏத்தா! அவரு அடுத்த மாசத்திலிருந்து குடிய விட்டுருவாறு, கோயிலுக்கு முடியெடுக்க நேந்திருக்கேம்ன்னு சொன்னியே, இப்படி திடுதிப்புன்னு போய்ட்டியே, என்று சொல்லிக் கொண்டே சேலையின் முந்தானையில் மூக்கைச் சிந்திக் கொண்டாள்.

ஒத்தப்புள்ள கதிருன்னு அந்தப்புள்ளக் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தியே, இனிமே யாரு கொடுப்பா.

நோய்க்கும் பாரு, பேய்க்கும் பாரும்பாங்க. என்ன நோய் வந்ததோ. இப்படி உங்க ரெண்டு பேரையும் அனாதையா விட்டுட்டுப் போய்ட்டா என்ற பெரியவர், கதிரின் அப்;பா கையை பிடித்து ஆறுதல் கூற முனைந்தார்.

சடங்கெல்லாம் முடிந்தது. ஊர் வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டாள் வள்ளியம்மா. நாலைந்து நாள் மது குடிக்காமல் இருந்தவன், கதிரை மட்டும் வீட்டில் தனியே விட்டுவிட்டு மதுக்கடைக்கு போய்விட்டான் மாரிச்சாமி.

சில நாட்கள் கழிந்தன. கதிருக்கு சாப்பாடு பெரும் பிரச்சனையாகிவிட்டது. மாரிச்சாமிக்கோ மது குடிப்பது, குடிக்க பணம் கிடைப்பது பெரும் பிரச்சனையாகிவிட்டது. முன்பெல்லாம் வள்ளியம்மா விவசாய கூலி வேலைக்கு போய், கிடைத்த கூலியை அங்கங்க ஓலை இடுக்குக்குள்ளே செருகி செருகி வைத்திருப்பாள். அவற்றைத் தேடித், திருடி மது குடித்து வாழ்க்கை நடத்திய மாரிச்சாமிக்கு, பாலைவனத்தில் உணவுக்கு அலையும் பருந்து போல திசையறியாது திணர ஆரம்பித்தான்.

விசேஷங்கள் முடிந்து பள்ளிக்குச் சென்றான், கதிர். மாணவர்கள் அவனை பரிதாபமாகப் பார்ப்பது மட்டுமல்ல அவனுக்கு உதவுவதிலும் முந்திக் கொண்டனர். கதிரும் மாணவ நண்பர்களோடு ஓடியாடி விளையாடினான். மதிய உணவு இடைவேளையின் போது சத்துணவு முட்டையுடன் வாங்கி சாப்பிட்டான். சில நண்பர்களுக்கு அவர்களது தாய் சாப்பாடு கொண்டு வந்து ஊட்டி விடுவதும், அவர்களுக்கு பண்டம் கொடுத்து சாப்பிட வைப்பதையும் பார்க்கும் போது அவனுக்கு சில நிமிடங்கள் ஏதேதோ செய்தது, என்றாலும் சிறுவன் தானே, நீடிப்பதில்லை. ஆனால் அடிமனதில் பதிந்து விட்டது. தனது அம்மா இருந்திருந்தால் தனக்கும் இவ்வாறு உணவு ஊட்டி விடுவார்களே என்று, மனதில் ஏற்பட்ட ஏக்கம் பெரும் தாக்கமாக மாறியது.

மாரிச்சாமி மீண்டும் பழையபடி குடிக்க ஆரம்பித்தார். ஆனால் குடிப்பதற்கு போதிய பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மனைவி இருக்கும் வரை மாரிச்சாமிக்கு குடிப்பதற்கு பணம் தட்டுபாடு இல்லை.

ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தது. மாரிச்சாமி தனது மகனை அரை மணி நேர பிரயாணத்திற்கு அப்பால் உள்ள ஒரு நகரில் மோட்டார் பைக் மெக்கானிக் சாப்பில் வேலைக்கு சேர்க்க பயணமானான். ஒரு பிக் சாப்பரில் கதிருக்கு இரண்டு மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு, கதிரை அழைத்துச் சென்றார் மாரிச்சாமி.

பிரேம் டூ வீலர் மெக்கானிக் சாப் என்று போர்டு தொங்கிய கடைக்கு மகனை அழைத்துச் சென்றார். பலி கொடுக்கப் போகும் முன்பு ஆட்டைக் குளிப்பாட்டி பொட்டு வைத்து, மாலை அணிவித்து இழுத்துச் செல்லப்படுவதைப் போல் கதிர் இழுத்துச் செல்லப்பட்டான் என்பது வெளிச்சம்.

ஒரு மோட்டார் பைக்கிற்கு பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தார் மெக்கானிக் பிரேம். மாரிச்சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு வந்த கதிரை பார்த்தான் மெக்கானிக் பிரேம். என்ன அண்ணாச்சி கடைக்கு ஒரு பையனைக் கூட்டி வருகிறேன்னு சொன்னீங்க, சின்னப் பையனைக் கூடக் கூட்டி வந்திருக்கீங்க என்று கேட்டார் பிரேம். என்னது சின்ன பையனா...? பார்க்கதான் சின்னப் பையன். வேலையில கடும் சுட்டி. நீங்க இவனை வேலைக்கு வச்சிப் பாருங்க, நீங்களே அசந்திடுவீங்க. சரி! எப்படி இருந்தாலென்ன எனக்கு கடைக்குன்னு ஒரு பையன் தேவை. அது சரி அண்ணாச்சி, வாரத்துக்கு ஒரு முறை தான் சம்பளத்துக்கு கடைக்கு வர வேண்டும். அப்பப்ப கடைக்கு வந்து சம்பளம், காசுன்னு கேட்டா பையன வேலைக்கு வச்சிக்க மாட்டேன். அதுபோக பையனுக்கு சாப்பாடு கொடுப்பேன். நைட்ல கடையிலே தூங்கிக் கொள்ள வேண்டும்.

இருவர் பேசுவதையும் மாறிமாறிக் கேட்டுக்கொண்டிருந்தான் கதிர். அவனுக்கு மனதில் திக்திக் என்று அடித்துக் கொண்டிருந்தது. பாவம் அவனால் எதுவும் பேச முடியாது. டேய் ஒழுங்கா வேலை செய்வியா என்று கேட்டார் பிரேம், கதிரைப் பார்த்து, முடியாது என்ற சொல்ல முடியும். செய்வேன் என்று ஈனக்குரலில் பதிலளித்தான் கதிர். குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் இருந்தது.

டேய் கதிரு அப்பா ஊருக்கு போரேன்டா. நீ இந்த அண்ணாச்சி சொல்ற வேலையக் கவனமா செய்யனும், சரியாடா.

அப்பா என்னைய இங்க தனியா விட்டுட்டுப் போறீங்களா? நான் இனிப் பள்ளிகூடத்துக்குப் போகக் கூடாதா? என்று ஏங்கினான் கதிர்.

நீ படிச்சி என்ன டாக்டராகவா போற, இல்ல கலக்டர் ஆகப் போறியா. எப்படியும் கூலி வேலைதான் பார்க்கனும். அதுக்கு இப்பவே உழைக்க ஆரம்பிச்சிட்டா லாபம் தானே. அப்பா நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்ககூடவே இருக்கேன்பா. எனக்குப் பயமா இருக்கு.

பிரேம் ஒரு பைக் உரிமையாளரிடம், அவரது பைக்கை வேலை முடித்துக் கொடுத்து, ஓட்டிப் பார்க்கச் சொன்னார்.

பிரேம் அண்ணாச்சி உங்ககிட்ட வண்டி வேலை பார்த்தாலே, அந்த வண்டி சும்மா ரதமா இருக்கு அண்ணாச்சி. கூலி எவ்வளவுன்னு சொல்லுங்க. கேட்ட கூலியை வாங்கிக் கொண்டார் பிரேம்.

அப்புறம் அண்ணாச்சி பையன் என்ன சொல்றான், என்றார் மாரிச்சாமியைப் பார்த்து. அவன் நிக்றேன் என்று சொல்லிவிட்டான். கொஞ்சம் அட்வான்ஸ் பணம் கொடுத்தீங்கன்னா, நான் கிளம்பிடுவேன்.

அட்வான்ஸ்ஸா ஐநூறு ரூபா தர்றேன். அதோட நிறுத்திக்கிடனும், இடையில இடையில வந்து காசு பணம்ன்னு கேக்கக் கூடாது. வார வாரம் சனிக்கிழமை வந்து சம்பளம் ஐநூறு ரூபா வந்து வாங்கிக்கிடனும், சரியா.

பிரேம் தம்பி நீங்க சொன்னா சரி. நான் என்ன மாத்தியாப் பேச போறேன் என்று பிரேமிடம் இருந்து ரூபாயை பெற்றுக் கொண்டார், மாரிச்சாமி.

கையில் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினார் மாரிச்சாமி. அப்பா பணத்தை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டு போவதை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

கண்ணில் ஏக்கப் பார்வை. மனம் திக்திக் என்று அடித்துக் கொண்டது. ஓ...வென்று கத்திக் கொண்டே ஓடி விடலாம் போலிருந்தது கதிருக்கு. செழிப்பாக வளர ஆரம்பித்த பயிர் நீரின்றி கதிர் வரும் முன்னே வாடி வதங்கி இலை சாய்ந்து நிற்பது போல தலை சாய்ந்து நின்றான் கதிர்.

உன் பெயர் என்னப்பா என்று கேட்ட பிரேமைப் பார்த்து க...கதிரு என்றான். குரல் கூட மாறவில்லைக் குழந்தைத் தனமாக இருந்தான்.

ஒர்க் ஷாப்புக்கு இப்படிப் பையன் தேவைப்பட்டான். ஒர்க் ஷாப்பில் வேலை செய்கிற இளம் வயது மணி மற்றும் சுரேஷ்க்கு பணிவிடை செய்ய வேண்டும். அதாவது அவர்கள் வண்டியில் ரிப்பேர் சரி செய்து கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு தேவையான டூல்ஸ் எடுத்து கொடுக்க வேண்டும். சரிசெய்யப்பட்ட வண்டிகளை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். வருகிற கஸ்டமர்கள் சொல்கிற எடுபிடி வேலைகள், அதாவது டீ, சிகரெட் வாங்கி வந்து கொடுக்க வேண்டும்.

முதல் நாள் என்பதால் கதிருக்கு வேலை எதுவும் கொடுக்கவில்லை. மணி மற்றும் சுரேஷ் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

ஒரு வாரம் ஆகிவிட்டது. கதிரின் அப்பா காலையில் பத்து மணிக்கே சம்பளம் வாங்க வருகிறார். அப்பா வருவதைப் பார்த்ததும் ஓடிப் போய் இடுப்பைக் கட்டிக் கொண்டான். என்னப்பா கதிரு முதலாளி சொல்ற வேலையைக் கவனமா செய்யனும், செய்தியா. செய்தேம்பா, அப்பா... அப்பா நான் இன்னைக்கு உங்க கூட வீட்டுக்கு வந்துட்டு நாளைக்கு இங்க வரட்டுமா. ஆசையா இருக்குப்பா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கனும் போல இருக்கு.

மடிச்சி கட்டியிருந்த அழுக்கு வேட்டிய இறக்கி விட்டவாறே பிரேமைப் பார்த்து வணக்கம் சொன்னார் மாரிச்சாமி. முதலாளி நீங்க சொல்ற வேலையைப் பையன் சரியா செய்றானா என்று சொல்லிக் கொண்டே பார்வையும், கையும் சம்பளம் பணத்திற்கு தவித்து ஐந்து நூறு ரூபாய் தாள்களை எடுத்து மாரிச்சாமி கையில் கொடுத்து, போய்ட்டு வாங்க என்று அனுப்பிவிட்டார்.

டேய் கதிரு, நம்ம முதலாளி தங்கமானவரு. சொல்ற வேலையைச் சரியா செய்து நல்ல பேரு வாங்கனும் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்த தெருவில் தான் டாஸ்மாக் மதுபானக் கடை.

நாட்கள் நகர்ந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் பள்ளிகூடம் செல்லும் மாணவர்கள் பிரேம் ஒர்க் ஷாப் வழியாகத் தான் செல்ல வேண்டும். கதிர் என்ன வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதையும், தன்னுடைய அம்மா அல்லது அப்பா கையைப் பிடித்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே இருப்பான். தோளில் புத்தகப் பையைச் சுமந்து கொண்டு அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு போகிற மாணவனைப் பார்க்கும் போது, தானே தனது அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு போவது போல கற்பனை செய்து கொள்வான். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே கதிருக்கு தெரிவதில்லை.

டேய் கதிரு! அந்த பத்துக்குப் பதினொன்று ஸ்பேனரை எடு என்ற முதலாளி பிரேமின் வார்த்தை கதிரின் காதில் விழவில்லை. அவனது பார்வை, கவனம் முழுவதும் ரோட்டில் பெற்றோருடன் பள்ளிக்கு நடந்து செல்கிறவர்கள் மீது பதிந்திருந்தது.

டேய் கதிரு...டேய்! என்று அதட்டினார் முதலாளி பிரேம். கதிர் திரும்பவில்லை. அவன் தனது கற்பனையில், அப்பாவுடன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு யூனிபார்ம், சூ, டை கட்டிக் கொண்டு போய் கொண்டிருந்தான்.

பொறுமை இழந்த முதலாளி பிரேம் கையில் இருந்த மற்றொரு ஸ்பேனரை விட்டு எறிந்தார். கதிரின் மேல் விழுந்த ஸ்பேனர் அவன் மண்டையை பதம் பார்த்தது. பின் மண்டையில் ரத்தம் பீரிட்டு அடிக்க அம்மா! என்று அலறி கீழே விழுந்தான்.

பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்த மணி ஓடிப் போய் கதிரை தூக்கி உட்காரவைத்து, ரத்தம் வரும் இடத்தில் தனது கைக்குட்டையால் அழுத்திப் பிடித்துக் கொண்டான். உதவிக்கு சுரேஷிம் ஓடி வந்தான்.

லேசான பதற்றம் இருந்தாலும் பிரேம், கூப்பிட கூப்பிட உனக்கு காதே கேட்காதாடா, என்று அதட்டினார். சரி சரி... மணி, கிளினிக்ல போய் மருந்து வச்சி கூட்டிக்கிட்டு வா, என்று மணியையும் கதிரையும் அனுப்பி வைத்து விட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சாப்பிட கிளம்பிவிட்டார். ஒர்க் ஷாப்பில் நடந்ததை தனது மனைவியிடம் சொன்னார்.

ஏண்டா கதிரு. முதலாளி உன்னைக் கூப்பிட்டது உனக்கு கேட்கவில்லையா எனக் கேட்டான் மணி.

ஆமாண்னே, எனக்கு கேக்கலண்ணே.நான்....நான்....

ரோட்ல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாயா. கடையில வேலை பார்க்கும் போது ரோட்ல வேடிக்கை பார்க்க கூடாது. தொழில கத்துகனும். சரியா.

மணியின் பேச்சு ஆறுதலாக இருந்தது. அப்பாவை நினைத்தால் தான் பயமாக இருந்தது. இரண்டு நாள் கழிந்தது. அப்பா சம்பளம் வாங்க நாளை மறுநாள் வருவார். ஒரு பக்கம் அப்பாவை பார்க்க ஆவல். மறுபக்கம் பயம். என்ன செய்வாரோ. அடிப்பாரோ? அணைப்பாரோ? கலக்கமாவே இருந்தான் கதிரு.

வழக்கமாக வருகிற நாளைக்கு ஒரு நாள் முந்தியே வந்துவிட்டார், மாரிச்சாமி. அன்று வெள்ளிக்கிழமை.

அப்பாவைப் பார்த்ததும் அப்பா என்றான், கதிரு.

என்னடா இது தலையில கட்டுப் போட்டிருக்கு. கீழ விழுந்திட்டியா... கவனமா இருக்கக் கூடாதா, வீணா செலவு இழுத்து வச்சிட்டீயே முதலாளிக்கு, என்று அதட்டினார் மாரிச்சாமி.

தகப்பனும் மகனும் பேசிக் கொண்டிருப்பதை மணியும், சுரேஷீம் கவனித்துக் கொண்டிருந்தனர். பிரேம் ஒரு வண்டியை ரிப்பேர் செய்வது போல் மிகவும் கவனமாக கதிரையும், மாரிச்சாமியையும் காதைத் தீட்டிக்கொண்டு கவனித்தார்.

கெஞ்சலான குரலில் கேட்டான் கதிரு, அப்பா எனக்கு படிக்க ஆசையா இருக்குப்பா. என்னையப் படிக்க வைக்கிறீங்களா. பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டு வந்து நான் வேலை செய்து சம்பாதிக்கிறேன்.

நீ படிச்சி கிழிச்சது போதும். பேசாம உண்டான வேலையைப் பாரு. இனிமே இப்படிக் கீழே விழுந்து மண்டைய உடைச்சிக்கிட்டு முதலாளிக்கு செலவு இழுத்து வச்சே.... என்று விரலைன் காட்டி எச்சரித்தார்.

அப்பா இனிமே நான் கவனமா இருப்பேன்ப்பா. இனிமே கீழே விழ மாட்டேன். ஒரு நாள் மட்டும் எனக்கு ஷீ, யூனிபார்ம், டை மாட்டி என் கையைப் பிடிச்சி அந்த ஸ்கூல் வரைக்கும் என்னைக் கூட்டிட்டுப் போய்ட்டு, கூட்டிட்டு வாங்கப்பா, என்று ஏக்கமாக கேட்டான் கதிரு.

கதிரும், மாரிச்சாமியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிரேம், மணி மற்றும்; சுரேஷ் வேலை செய்வதைப் போல.

கதிரின் பேச்சு மாரிச்சாமிக்கு சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. பிரேமை நெருங்கி வந்தார், மாரிச்சாமி.

என்ன அண்ணாச்சி! நல்லா இருக்கீங்களா, என்ற பிரேம் ஐநூறு ரூபாயை எடுத்து மாரிச்சாமியிடம் நீ;ட்ட, பவ்யமாகப் பெற்றுக்கொண்டு கிளம்பினான்.

தலையில் கட்டுப் போட்டிருந்த இடத்தில் அந்த வெள்ளைத் துணியில் சிவப்பாக ரத்த கசிவு இருந்தது.

மணி, நான் வீட்டுக்கு போறேன். நீங்க மூனு பேரும் வேலையை முடிச்சிட்டு சாப்பிட்டு விட்டு தூங்குங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் பிரேம்.

மணிக்கு தூக்கமே வரவில்லை. கதிரும், அவன் அப்பா மாரிச்சாமியும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு என்னமோ செய்தது. திரும்பிப் பார்த்தான் கதிர் சாந்தமாக தூங்கிக் கொண்டிருந்தான்.

இன்று திங்கள் கிழமை. காலை நேரம். கடை திறந்து வேலை துவங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போய் விட கையில் பிடித்துக் கொண்டும், வாகனங்களில் ஏற்றிக்கொண்டும் போய்க் கொண்டிருந்தனர்.

கதிர் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் வேலையில் கவனத்துடனும் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் மணி.

இன்று முதலாளி வந்தவுடன் கேட்டு விட வேண்டும். இதனால் என்ன விளைவு வந்நதாலும் ஏற்றுக் கொள்வது என முடிவெடுத்தான் மணி.

முதலாளி பிரேமும் வந்துவிட்டார். கடைக்கு நுழைந்தவர், சாப்பிட்டீங்களாப்பா என்று கேட்டார்.

முதலாளி உங்ககிட்ட ஒன்னு பேசனும் என்று இழுத்ததான் மணி. என்ன மணி சொல்லு, எதாவது பணம் அவசரமா தேவைப்படுதா. வீட்டுக்கு பணம் அனுப்பி வைக்கணுமா என்றார்.

இல்ல முதலாளி! அதைவிட முக்கியமா ஒரு விஷயம் பேசனும், கொஞ்சம் தனியா என்று ஒதுங்கினான் மணி. முதலாளியும் நெற்றி புருவத்தை சுருக்கியவாறு மணியின் அருகில் சென்றார்.

முதலாளி இது எனக்கு சரியா, தப்பான்னு தெரியல. ஆனா எனக்குத் தோணுது. சும்மா சொல்லு மணி. என்ன செய்யனும் தயங்காம கேளு.

முதலாளி, கடைப் பையன் கதிரை நான் படிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க அனுமதிச்சா....

என் வண்டியில பின்னால கட்டி வச்சிருக்கிற அந்த அட்டை பாக்ச அவுத்து இங்க கொண்டு வா! என்று மணியிடம் வேலை ஏவினார், பிரேம்.

மணி அட்டைப் பாக்சை அவுத்துக் கொண்டு வந்து இறக்கி வைத்தான் கடையில்.

முதலாளி சொல்லவும் பெட்டியை திறந்தான். முதலாளி என்று பிரேமமைப் பார்த்தான் மணி. பிரேம் சொன்னார், இந்த ஸ்கூல் பேக், ஷீ, யூனிபார்ம், டை எல்லாமே நம்ம கதிருக்குத்தான். இங்க இருந்தே அவன் டெய்லி ஸ்கூலுக்குப் போய் படிக்கப் போறான்.

ஆட்டோவில் வந்து இறங்கிய பிரேமின் மனைவி, என்னங்க வாங்க நம்ம பையன் படிக்கிற ஸ்கூல்லே போய் சேர்த்துட்டு வருவோம், கதிரை.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக