இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கையில் பையுடன் களைப்பான முகத்துடன்
வீட்டிற்குள் நுழைந்தார், ஆசிரியர் முத்தானந்தம். கைப்பையை மனைவி பாக்கியத்தாயிடம்
கொடுத்து மேசையின் மேல் வைக்கச் சொல்லிவிட்டுக் காலையும், முகத்தையும் கழுவிக்
கொண்டிருந்தார். என்னங்க! பட்டா கிடைத்துவிட்டதா! ஆர்வத்துடன் கேட்டாள் மனைவி
பாக்கியத்தாய். வாயில், அலம்பிக் கொண்டிருந்த நீரை கொப்பளித்துவிட்டு சொன்னார்,
என்னடி, பட்டா என்ன பெட்டிக் கடையில் விக்கிற வெத்திலை பாக்குன்னு நினைச்சியா!
கேட்ட உடனே தருவதற்கு. அதுல எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா. கொடியில் கிடந்த
துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு ஹாலில் கிடந்த சேரில் போய் அமர்ந்து
கொண்டார்.
அப்போ, பட்டா இன்றைக்கும் தரலியா?
ஆர்வம் குன்றி வெறுமையாகக் கேட்டாள் பாக்கியத்தாய்.
நகரின் மையப் பகுதியில் நாலு சென்ட்
நிலம். ஆசிரியர் முத்தானந்தம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பணியில் இருந்து
ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தில் அந்த இடத்தை வாங்கிப் போட்டார். அந்த இடத்தைக்
கொடுத்தவர் பெயரிலே பட்டா இன்னமும் மாறாமல் இருக்கிறது. அதை தனது பெயருக்கு
மாற்றினால் தான் இல்லையென்றால் பின்னால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
மகள் வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறாள். மகனும் வேலையினிமித்தம்
குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறான்.
தனது வாழ்நாள் சம்பாத்தியமே அந்த நாலு
சென்ட் இடம் தான். அதையும் பரிகொடுத்துவிட்டால் என்ன செய்வது. இந்தக் காலத்தில்
யாரை நம்ப முடியும். பணத்துக்காக எதையும் செய்யிற காலமாச்சே. ஆசிரியர்
முத்தானந்தத்திற்கு தூக்கம் கண்ணாம்மூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
லஞ்சம் கொடுக்காம எந்த வேலையும்
நடக்கமாட்டேங்குது. வி.ஏ.ஓ வுக்கு பணம் கொடுத்தாச்சி. மூனுமாசமா அல்லாடிக்கிட்டு
கிடந்த பேப்பரு, பணம் கொடுத்தப் பிறகுதான் வி.ஏ.ஒ கையிலிருந்து தாலுகா
ஆபிசுக்குள்ள போயிருக்கு. இனிமே பட்டா பிரிவு அலுவலருக்கு பணம் கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு தான் தாசில்தாருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சம் கொடுக்காமல்
காரியம் சாதிக்கிறவனை இந்த உலகம் என்ன சொல்கிறது. கஞ்சப்பய என்றும், ஓசியிலே
காரியம் சாதிக்க பார்க்கிறான் என்று ஏளனம் அல்லவா சொல்கிறது. நாட்டு முறை
தெரியாதவன் விவரம் கெட்டவன் என்றும் வசை பாடுகிறது. லஞ்சம் கொடுப்பதற்கு மனமும்
இல்லை, போதிய பணமும் இல்லை. பணம் கொடுக்காவிட்டால் அலைய விடுவது மட்டுமல்ல மட்டமாக
பேசியும், அரட்டை செய்வதும், சேச்சே என்ன உலகமடா இது. புரண்டு படுத்தார்
முத்தானந்தம். அருகில் மனைவி பாக்கியத்தாய் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
காலையில் பத்துமணி டவுண் பஸ் பிடித்து
டவுணுக்கு போய் தாலுகா ஆபிஸில் பட்டாவை வாங்கி வர திட்டமிட்டபடி பஸ்ஸில் கூட்டம்
அதிகம். மூச்சி திணறியது. மூச்சி விட்டு மூச்சி இழுப்பது போல ஒவ்வொரு பேருந்து
நிறுத்தத்திலும் பஸ் நின்று சிலரை வெளியேற்றிவிட்டு சிலரை உள்வாங்கிக கொண்டு, பெரு
மூச்சி விடுவது போல் கரும்புகையை கக்கிக் கொண்டு பஸ் நகர்ந்தது. சினிமாவில்
குத்துப் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் நாயகியைப் போல பஸ் அலுங்கி குலுங்கி
தாலூகா ஆபீஸ் ஸ்டாப்பில் நின்றது. பஸ்ஸை விட்டு இறங்கியவர் எதிரே இருந்த தாலூகா
ஆபிஸைப் பார்த்தார். பலர் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தனர். அருகில்
இருந்த பாய் கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்து விட்டு தாலூகா ஆபீஸ் நோக்கி
நடந்தார்.
தாலுகா ஆபிஸ் சோம்பல் முறித்து
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பட்டாப் பிரிவு அலுவலரிடம் சென்ற
முத்தானந்தம் 'வணக்கம் ஐயா" என்று கும்பிட்டார். ஆசிரியர் இல்லையா. பதிலுக்கு
வணக்கம் சார் என்று அலுவலர் லேசாகத் தலையை அசைத்துவிட்டு குனிந்து எழுதிக்
கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து சார் இன்றைக்கு
நீங்கள் பட்டா வாங்கிக் கொள்ளலாம். பட்டா ரெடியாகிவிட்டது. நான் சொன்னது ஞாபகம்
இருக்குதல்லா என்றார் பட்டா பிரிவு அலுவலர்.
தாசில்தார் அவருடைய அறையில் இருந்து
கொண்டு கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்ப்பவர்கள் கொஞ்ச வயசா
தெரியுது, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி டைரக்டா அப்பாண்ட்மென்ட் ஆகியிருப்பார்
போல, என்று சிலர் எண்ணிக்கொண்டார்கள். சிலரோ இந்த வயசிலேயே தாசில்தாரா வரனும்ன்னா
எவ்வளவு லஞ்சம் கொடுத்து வந்தாரோ தெரியல என்று பேசிக்கொண்டார்கள்.
சார் இங்கே நில்லுங்க, தாசில்தார்
கையெழுத்துக்காக நான் இந்தப் பட்டாவை தாசில்தார் மேசையில வச்சிட்டு வாரேன். அவர்
என்ன கேட்கிறாறோ அதக் கொடுத்தவுடனே பட்டாவில கையெழுத்துப் போட்டு தந்துருவாரு.
ரொம்ப தங்கமான மனுசன். ரொம்பநேரம்லாம் காக்க வைக்க மாட்டார், என்று சொல்லிக்
கொண்டே தாசில்தார் அறைக்குள் சென்றார் பட்டா பிரிவு அலுவலர்.
ஒவ்வொரு கோப்பாக பார்த்து
கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். ஆசிரியர் முத்தானந்தத்தின் பட்டாவைப்
பார்வையிட்டார். பட்டா என்றால் பணம் கொட்டும். தனது கை பேசியை எடுத்து பட்டா
பிரிவு அலுவலருக்கு அழைப்பு விடுத்தார். தாசில்தார் அறையில் இருந்து கொண்டே
கண்ணாடி வழியாகப் பார்த்தால் அலுவலர்களைப் பார்க்கலாம். அவ்வாறு பார்த்துக் கொண்டே
பட்டாப் பிரிவு அலுவலரிடம் கை பேசியில் சொன்னார், பட்டாவுக்கு ரூபாய் ஐயாயிரம்
வாங்கித் தாருங்கள் என்றார். சரிய்யா என்றவர் ஆசிரியர் முத்தானந்தத்திடம் விவரம்
சொன்னார். சார் பட்டாவுக்கு ரூபாய் ஐயாயிரம் தாசில்தார் கேட்கிறார் தாருங்கள்,
உடனே கொடுத்து பட்டாவை வாங்கி வருகிறேன். என்றவர், கைபேசியை கட் பண்ணாமல் மேல்
சட்டைப் பையில் போட்டுக் கொண்டு பேசினார்.
ஐயா என்னிடம் ஐயாயிரம் ரூபாய் இல்லை.
நானே ஓய்வு பெற்ற ஆசிரியர். ஓய்வூதியம் எனக்கும், எனது மனைவிக்கும் மருத்துவ
செலவுக்கே போதாத நிலை இருக்கிறது. அதனால் என்னிடம் இருக்கிற ஆயிரம் ரூபாயைத்
தருகிறேன். எப்படியாவது தாசில்தாரிடம் பேசி பட்டாவை வாங்கித் தாருங்கள் என்று கெஞ்சலாகக்
கேட்டார், ஆசிரியர் முத்தானந்தம். கை பேசியைக் கட் பண்ணாமல் காதில் வைத்திருந்த
தாசில்தாருக்கு இவர்கள் உரையாடல் தெளிவாகக் கேட்டது. மீண்டும் பட்டா அலுவலருக்கு
போனில் அழைப்பு விடுத்து அந்த ஆசிரியரை எனது அறைக்கு அனுப்பி வையுங்கள் என்று
சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தார்.
சார், உங்களை தாசில்தார்
கூப்பிடுகிறார். அவரது அறைக்குச் செல்லுங்கள் என்றார் பட்டா அலுவலர்.
ஆசிரியர் முத்தானந்தம் பவ்யமாக
தாசில்தார் அறைக்குள் நுழைந்து வணக்கம் ஐயா என்று தாசில்தாரை இரு கைகளாலும்
வணங்கினார்.
எதிரில் கிடந்த நாற்காலியைக் காட்டி
சார் இப்படி உட்காருங்கள் என்று எழுந்து வணங்கி அமர்ந்தார் தாசில்தார்.
ஆசிரியர் என்பதால் இந்த மரியாதையா,
அல்லது லஞ்சப் பணத்திற்காக இந்த மரியாதையா என யோசித்துக் கொண்டே நாற்காலியின்
நுனியில் அமர்ந்து தாசில்தாரைப் பார்த்தார்.
சார் நல்லா இருக்கீங்களா, என்னைத்
தெரிகிறதா சார். நான் தான் நாகராஜன் உங்களிடம் நான்காம் வகுப்பு படித்தேன்.
அப்படிய்யாய்யா, படிக்கும் போது
பார்த்தது முகம் மாறிடிச்சு. ரொம்ப சந்தோசமய்யா. உங்க அப்பா பேரு? அப்பா பேரு
சுந்தரம். அம்மா பேர சொன்னா உங்களுக்கு தெரியும் சார். அம்மா பேரு நாகவள்ளி.
ஓ... நாகவள்ளியோட மகனா நீங்க எனக்கு
நல்லா ஞபாகம் இருக்குய்யா. உதவியாளரை அழைத்து ஒரு காபி கொண்டு வருமாறு கூறிக்
கொண்டிருக்கும் போதே தாசில்தார் ஃபோன் ஒலித்தது. சார் நீங்க காபி சாப்பிடுங்க
என்று சொல்லிவிட்டு போனை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
காபியில் ஆவி நிழலாடி மேலே எழும்பி
மறைவது போல் ஆசிரியரின் மனதில் பழைய நினைவுகள் ஆவியாக எழுந்து எழுந்து மறைந்தது.
ஆசிரியர் முத்தானந்தம் என்றால்
கண்டிப்புக்குப் பேர் போனவர் என்ற பெயர் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக
வந்தாலும் சரி, வீட்டுபாடம் எழுதவில்லை என்றாலும் சரி, பிராஜக்ட் எழுதவில்லை
என்றாலும் சரி, தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது. தவறுக்கு தக்கவாறு (ஃபைன்)
அபராதம் விதிப்பது தான் அவர் வழங்கும் தண்டனை என்று மாணவர்களும், மற்ற
ஆசிரியர்களும் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். அதனால் அவர் வகுப்பில் மாணவர்கள்
தவறு செய்யப் பயப்படுவார்கள்.
ஒரு நாள் நாகராஜன் வீட்டு பாடம் எழுதி
வரவில்லை என்பதற்காக அவனுக்கு பத்து ரூபாய் அபராதம் விதித்தார், ஆசிரியர்
முத்தானந்தம். அபராதத் தொகையைக் கட்டிய பிறகு தான் வகுப்பில் நுழைய முடியும்.
வசதியுள்ள வீட்டுப் பிள்ளைகள் எளிதில் அபராதத் தொகையைக் கட்டிவிட்டு கௌவரமாக
இருப்பார்கள். முடியாத குழந்தைகளுக்கு அவமானமாக இருக்கும். வீட்டில் போய்
பெற்றோரிடம் கேட்கும் போது குழந்தைகளை அடிப்பார்கள்.
அதற்கு பயந்து சில மாணவர்கள்
பருத்திக் காட்டில் பருத்தியைத் திருடி அவற்றை சில்லரைக் கடைகளில் விற்று அபராதம்
செலுத்துவார்கள். அவ்வாறு பருத்திக் காட்டில் பருத்தி திருடும் போது பருத்திக்
தோட்டக்காரரிடம் அகப்பட்டு அல்லல்படுவதும் உண்டு. நாகராஜன் அம்மா நாகவள்ளியிடம்
விபரம் சொன்னான். வீட்டுபாடம் எழுதாமல் போனதற்கு பத்து ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டதைச் சொல்லி பணம் கேட்டான். நாகவள்ளியோ நாலு வீடுகளில் பத்துப்
பாத்திரம் கழுவும் வேலையைச் செய்து, அங்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து
குடும்பம் நடத்தி வருபவள். கேட்டவுடன் பணம் கொடுக்கும் நிலையில் அவள் இல்லை.
அதனால் நாகராஜன் இரண்டு நாட்கள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருந்தான்.
தான் வேலை செய்யும் வீட்டில் பணம்
வாங்கி பத்து ரூபாயை நாகராஜனிடம் கொடுத்து மூன்றாவது நாள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு
நிம்மதி அடைந்தாள். ஏனென்றால் என்னைப் போல என் பிள்ளையும் படிப்பறிவு இல்லாமல்
கூலி வேலை செய்யும் நிலை வரக்கூடாது என்று எண்ணினாள்.
மூன்றாவது நாள் பள்ளிக்குச் சென்ற
நாகராஜன் அபராதத் தொகை பத்து ரூபாயை ஆசிரியர் முத்தானந்தத்திடம் செலுத்தினாhன்.
ஆசிரியாரோ ஏன் இரண்டு நாட்கள் வரவில்லை. அதனால் இரண்டு நாள் பள்ளிக்கு வராத
காரணத்தால் இருபது ரூபாய் அபராதம் விதித்து, ரூபாயை கொண்டு வந்து கொடுத்துவிட்டு
வகுப்பறைக்குச் செல் என்று கூறி வீட்டுக்கு அனுப்பினார். வீட்டுக்கு அழுதுக்
கொண்டே போனான். புத்தகப் பையை வீட்டுக்குள் வைத்துவிட்டு, கூரைவீட்டில் கிடந்த
கோரைப் பாயில் அழுதுக் கொண்டே படுத்தவன் தூங்கிவிட்டான்.
வேலைக்குப் போன நாகவள்ளி வேலையை
முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தாள். மகன் இரண்டு நாள்
கழித்து பள்ளிக்கூடம் போனவன் வீட்டுக்கு வருகிற நேரம். பிள்ளை பசியோடு வருவான்
என்று எண்ணிக் கொண்டு வழியில் கடையில் ஒரு முறுக்கு வாங்கி மடியில் வைத்துக்
கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்தவள், என்னடா
நாகராஜ் வந்தவுடனே படுத்துட்ட, களைப்பா இருக்கா, என்று கூறி எழுப்பினாள்.
அழுது கொண்டே படுத்ததினால் நாகராஜ்
முகம் வீங்கிப் போய் இருந்தது. வீட்டில் சாப்பிட ஏதும் இல்லாததால் வயிறு ஓட்டிப்
போய் இருந்தது. நாகவள்ளி விபரம் கேட்டாள். என்னடா பசிக்குதா. மதியானம்
பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிட்டியா என்று பரிவோடு கேட்டாள். ஆனால் நாகராஜன்
இல்லம்மா. நான் காலையிலே பள்ளிக்கூடத்தில இருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன், என்று
நடந்ததை கூறினான். நாகவள்ளிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. குடிகாரக் கணவனுக்கு
தெரிந்தால் அவன் நாகவள்ளியையும், நாகராஜனையும் அடிச்சி நொறுக்குவதற்கு வேறு காரணம்
தேவையில்லை. மடியில் வைத்திருந்த முருக்கை எடுத்து நாகராஜனிடம் சாப்பிடக்
கொடுத்தாள். ஏம்மா நான் நாளைக்கு பள்ளிக்கூடம் போகலாம்மா! இருபது ரூபாய் பணம் வச்சிருக்கியாம்மா
ஏக்கமாகக் கேட்டான்.
நான் வேலை பார்க்கிற வீட்டில ஏற்கனவே
வாங்கின கடனுக்கு சம்பளத்தில கழிச்சிட்டு சாப்பாட்டுக்கு மட்டும் கூலி தருவதனால
காசே கையில நிக்கமாட்டேங்குதுடா. அப்போ இனி நான் பள்ளிக்கூடத்துக்குப் போக
முடியாதாம்மா. நான் படிச்சி வேiலைக்கு போயி உனக்கு புதுச் சேலை வாங்கித் தர
முடியாதாம்மா. நீ இன்னும் அந்த வீட்டில தான் பத்துப் பாத்திரம் தேய்க்கிற வேலை
செய்யனுமாம்மா?
பிள்ளையை அணைத்துக் கொண்டாள்
நாகவள்ளி. இல்லடா நீ நாளைக்கே பள்ளிக்கூடம் போக அம்மா ஏற்பாடு செய்றேன்டா.
பால் இல்லாத காப்பி போட்டு மகனுக்கு
கொடுத்தாள். தானும் குடித்து விட்டு வீட்டில் இருந்த வெண்கலச் செம்பை கையில்
எடுத்துக் கொண்டு அடுத்த தெருவில் இருந்த சொர்ணாக்கா வீட்டிற்கு வேகமாக நடந்தாள்.
வெற்றிலையை வாய் நிறையப் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தார் சொர்ணாக்கா. அருகில்
இருந்த வெண்கல கிண்ணத்தில் வெற்றிலை எச்சிலைத் துப்பிக் கொண்டு, என்ன நாகவள்ளி
இந்தப் பக்கம் என்று வினவினாள்.
அக்கா கொஞ்சம் பணத்துக்கு அவசரம்,
அதனால இந்த வெண்கலச் செம்பை வைத்துக் கொண்டு ஒரு ஐம்பது ரூபாய் தாருங்க. நான்
அடுத்த வாரம் பணத்தைக் கொடுத்திட்டு செம்பை வாங்கிக் கொள்கிறேன் என்று செம்பை
நீட்டினாள் நாகவள்ளி.
அப்படி என்னடி உனக்கு அவசரம்.
செம்பைக் கையில் வாங்கிய சொர்ணம், இந்த சொம்புக்கா ஐம்பது ரூபாய் கேக்கிற. இதுக்கு
முப்பது ரூபாய் வேண்டுமென்றால் தருகிறேன், என்று முப்பது ரூபாயை நீட்டினாள்
சொர்ணம்.
சரிக்கா என்றவள் முப்பது ரூபாயை
வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டினாள். ரூபாயை முந்தனையில் முடிந்து
வைத்துக் கொண்டாள். வீட்டுக்கு வந்ததும் மகனிடம், டேய் நாகராஜ் நீ நாளை
பள்ளிக்கூடம் செல்லலாம். அம்மாவே உன்னைக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில விடுறேன்
என்று ஆதரவாகப் பேசினாள். நாகராஜன் அப்படியே தூங்கிவிட்டான். கள்ளச் சாராயம்
குடித்துவிட்டு வெகுநேரம் கழித்து வந்த நாகவள்ளியின் கணவன் வழக்கம் போல மனைவியோடு
சண்டை போடக்கூட முடியாமல் போதையில் விழுந்த இடத்தில் தூங்கிவிட்டான்.
காலையில எழுந்த நாகராஜன்
குளித்துவிட்டு பழைய சாதம் ஊறுகாய் வைத்து சாப்பிட்டான். நாகவள்ளி மகனை அலங்காரம்
செய்து அழகு பார்த்தாள். சட்டையில் இரண்டு பட்டன் இல்லாமல் விலகி நின்றது
நாகராஜனுக்கு. தாலிக்கயிற்றில் கோர்த்துப் போட்டிருந்த ஊக்கை கழற்றி நாகராஜன்
சட்டையில் நேர்த்தியாக மாட்டிவிட்டாள். ம்.. இப்பதான் அழகா இருக்க என்று நாகராஜன்
நெற்றியில் முத்தமிட்டாள்.
புத்தகப் பையை தோளில் தூக்கிப்
போட்டுக்கொண்டு அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கிப் போனான்.
நாகவள்ளி முந்தானையில் முடிஞ்சி வைத்திருந்த ரூபாயைத் தெட்டுப் பார்த்துக்
கொண்டாள்.
பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் அங்கும்
இங்கும் போய்கொண்டும், வந்துகொண்டும் இருக்கிறார்கள். நாகவள்ளி நாகராஜனைக் கையில்
பிடித்துக் கொண்டு ஆசிரியர் முத்தானந்தத்திடம் அழைத்துக் கொண்டு போனாள். ஆசிரியர்
முத்தானந்தம் வகுப்பறை வாசலில் நின்று கொண்டிருந்தார்.
சார் இனிமே என் பையன் ஒழுங்கா வீட்டு
பாடம் செய்து விடுவான். பள்ளிக்கூடத்திற்கு லீவு போடாமல் தினமும் வந்துவிடுவான்,
என்று கூறிக் கொண்டே முந்தானையில் முடிந்து வைத்திருந்த ரூபாயை எடுத்து கொடுக்க
ஆசிரியர் வாங்க கை நீட்டினார். வெடுக்கென்று ரூபாயைப் புடுங்கிய நாகவள்ளியின்
கணவன், ஏண்டி நாயே எதுக்குடி வெண்கலச் செம்ப சொர்ணாக்காட்ட கொண்டு போய் அடகு வச்ச
என்று அவளின் தலை முடியை கொத்தாய் பிடித்து கீழே இழுத்துப் போட்டு அடியும்,
மிதியும் கொடுக்க அலறித் துடித்தாள் நாகவள்ளி. அதற்குள் மாணவர்கள் சுற்றி நின்று
வேடிக்கைப் பார்த்தார்கள். அம்மா, அம்மா என்று நாகராஜன் அழ இன்னும் கூட்டம்
கூடியது. ஆசிரியர் முத்தானந்தம் செய்வதறியாது திகைத்து நின்றார்.
காலையில் டீக்கடைக்குப் போக முடியல.
அங்க பேசுரானுக. நீP செம்பை அடகு வச்ச விசயத்தை டீக்கடையில பேசுரானுக. எவ்வளவு
திமிரு இருந்தா இந்தக் காரியம் செஞ்சிருப்பே. நான் குடிகாரனா இருந்தாலும்
மானத்தோடு வாழ்றவன்டி என்று கையில் இருந்த இரண்டு பத்து ரூபாயை தாளைக் கிழித்து
அவள் முகத்தில் எறிந்துவிட்டு போய் விட்டான், நாகவள்ளியின் கணவன்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு தான்
ஆசிரியர் முத்தானந்தம் எந்த மாணவனுக்கும், எந்தக் காரணத்துக்கும் அபராதம்
போடுவதில்லை. குற்ற உணர்வு அவரை மிகவும் கவலைப்பட வைத்தது. ஒவ்வொரு மாணவனுக்கும்
ஒவ்வொரு விதமான குடும்பச் சூழல். பித்தம் இறங்கி சித்தம் தெளிந்ததைப் போல ஆசிரியர்
முத்தானந்த்திடம் ஒரு தெளிவு பிறந்தது.
பழைய நினனவுகளில் மூழ்கியிருந்த
ஆசிரியர் முத்தானந்தம் காப்பியைக் குடித்து முடித்திருந்தார்.
செல்போனில் பேசிக் கொண்டிருந்த
தாசில்தார் நாகராஜன் பேசி முடிந்ததும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு பழைய நான்காம்
வகுப்பு ஆசிரியரிடம் பேச்சுக் கொடுத்தார். சார் - உங்களைப் பார்த்ததும் பழைய
சம்பவங்கள் ஞாபகத்திற்கு வந்தது. அதனால அப்புறம், இப்ப என்ன செய்றீங்க. உங்களுக்கு
என்னால் எந்த உதவியும் வேணும்ன்னாக் கேளுங்க என்று ஆர்வமாய் பேசினான்.
ஐயா, நான் பணியில் இருந்து ஓய்வு
பெற்று கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் ஆகிறது. என்னுடைய பணி ஓய்விற்குக் கிடைத்த பணத்தில்
ஒரு நாலு செண்ட் இடம் வாங்கிப் போட்டேன். வேறு ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி
இல்லையா. ஏதோ ஓய்வூதியத்தை வைத்து மூனு வேளை சாப்பிடுறோம். எனக்கும் என்
மனைவிக்கும் மருத்துவ செலவு தானட அதிகமாகுது. வயசாயிடுச்சில்லையா?
சார் இந்தாங்க உங்களுடைய பட்டா. சார்
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எப்போ வேண்டுமானாலும் நீங்க இங்க வரலாம்.
சரிய்யா அப்போ நான் போய்ட்டு
வருகிறேன் என்ற ஆசிரியர் எழுந்து தனது கையில் வைத்திருந்த ரூபாயை நாகராஜனிடம்
தயங்கி தயங்கி...
சார் நீங்க வரும் போது பார்த்த
தாசில்தார் நாகராஜன் வேற இப்ப பார்க்கிற தாசில்தார் நாகராஜன் வேற.
கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக