Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 அக்டோபர், 2019

ஆத்மா...!!!

Image result for ஆத்மா



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



அமெரிக்காவிலுள்ள ஃப்ளோரிடா (Florida) மாகாணத்தில் 1993, ஏப்ரல் 12-ம் நாள் அதிகாலை, எரீகா டேவிஸ் (Erica Davis) என்கிற பெண்மணி திடீரென தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தாள். மனதினுள் இனம்புரியா கவலைகள் சூழ, ஏனோ அழுகை வந்தது. (நீங்க நினைக்கிற மாதிரி, வேப்பங்குளத்து சூசை எல்லாம் கனவுல வந்து வெட்டல!) அறைக்கதவை நோக்கி இருகரங்களையும் நீட்டிய அந்தப்பெண் 'அப்பா' என்று கதறினாள். மறுவினாடி அவள் காதருகே 'எரீகா' என்ற குரல் கேட்டது. திரும்பினால், அவளது கட்டிலின் அருகே அவளது அப்பா! 'நான் போய்வருகிறேன்' என்று சொன்னது போலிருந்தது. 'நோ' என முரண்டுபிடித்தாள் எரீகா. சில விநாடிகள்தான்! அவ்வுருவம் மறைந்துவிட்டது. மனைவியின் சத்தத்தைக்கேட்டு எழுந்த அவளது கணவன், அவளது நீட்டிய கைகளையும், அரற்றலையும் கண்டு, டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைகளுக்கெல்லாம் போய்விட்டுத் திரும்பினான். ஒன்றும் தென்படவில்லை. திரும்பிவந்து பார்த்தபோது எரீகா உறங்கிக்கொண்டிருந்தாள், முகத்தில் சோகத்தோடு. (நல்லா தூங்கிக்கிட்டிருந்த அந்த மனுஷனோட நிலைமைய கொஞ்சம் நெனச்சுப் பாருங்க நண்பர்களே!) 

              மறுநாள் காலை, எரீகாவின் அண்ணன் கலங்கிய கண்களுடன் அவளது வீட்டிற்கு வந்து அவர்களது தந்தை, அதிகாலை 4 மணியளவில் மாரடைப்பால் காலமகிவிட்டதாகத் தெரிவித்தான். ஆம். அவளது கண்களுக்கு, கட்டிலுக்கு அருகில் அவளது தந்தை தோன்றிய அதே நேரம்.

              எப்படி அதே நேரத்தில் இவளது கனவில் அவர் பிரிவது போன்று வந்திருக்கும்? இறக்கும் தருவாயில் அல்லது இறந்த பின்பு அவரது ஆவி வந்து சொல்லியிருக்குமா? மேற்கண்ட சம்பவமாவது தூக்கத்தில் வந்த கனவு எனக் கொள்ளலாம். இதைக் கொஞ்சம் பாருங்கள். கொல்கத்தாவில் 1917, மார்ச் 19-ம் நாள் காலை, திருமதி. ஸ்பியர்மேன் (Mrs. Spearman) தனது குழந்தையைத் தூங்கவைத்துக் கொண்டிருந்தார். அவளுடைய அண்ணன் ஆல்ட்ரட் (Aldred), பிரான்ஸ் நாட்டு விமானப் படையில் விமானியாக பணிபுரிந்து வந்தார். அண்ணனிடம் ஸ்பியர்மேனுக்கு அதீத அன்பு. காலை 10 மணி இருக்கும், குழந்தையைப் படுக்கவைத்துவிட்டு திரும்பிய அவர், வியந்து போனார். அவ்வறையின் ஜன்னலுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் அவளது அண்ணன் ஆல்டரட், விமானிக்கான சீருடையில் நின்றிருந்தான். விடுமுறையில் தங்கை வீட்டிற்கு ஆல்டரட் வருவது வழக்கமான ஒன்று. ஆனால் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்ததில்லை. மகிழ்ச்சியோடு கதவைத் திறந்து, "உள்ளே வாயேன், ஏன் வெளியிலேயே நிற்கிறாய்?" எனக் கேட்ட மறுகணம், ஆல்ட்ரட்டின் முகத்தில் ஏதோ பரிதாபம். தங்கையை ஏறிட்டுப் பார்த்துத் தலையசைத்த உருவம் மெல்ல மறைந்து போனது!

              குழப்பத்தால் கலங்கிய மனது, சோகம் சூழ, சோர்வாகி, குழந்தையின் அருகிலேயே உறங்கிப் போனாள். மாலை அலுவலகம் விட்டுத் திரும்பிய கணவனிடம், நடந்ததை விவரிக்க, அவனும் வழக்கமான மனிதனாய், அனைத்தும் பிரமை என்றான். (கவிதை மாதிரி இருக்கோ?!) பெண் மனது சும்மா இருக்குமா? சில நண்பர்களிடமும் நடந்தவற்றை விவரித்தாள். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. மறுநாள் தந்தி வந்தது, அவளது அண்ணன் ஆல்ட்ரட் விமான விபத்தில் இறந்துவிட்டதாக. நொறுங்கிப்போனாள். விமானம் விழுந்து நொறுங்கியபோது ஆல்ட்ரட்டின் கைக்கடிகாரம் நசுங்கியதால், அதிலுள்ள கடிகார முட்கள் அப்படியே நின்று போயிருந்தன. அந்த நேரம் காலை 10 மணி. ('அதெப்டி காலை-னு உனக்குத் தெரியும்'-னு நீங்க கேக்கலாம். விபத்து நடந்தது காலையில் தான்)  தங்கை அண்ணனைப் பார்த்த அதே நேரம்! அப்படியானால் ஆவிகள் தான் இத்தகு விஷயங்களை நமக்கு கனவின் மூலமோ, அல்லது ஸ்பியர்மேனுக்கு நடந்ததைப் போல, விழித்திருக்கும்போதோ தகவல் தருகின்றனவா? நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. காரணம், பேய் அல்லது ஆவி போன்றவற்றின் இருப்பே கேள்விக்குறி என ஒரு புறம் வாதாடும்போது,  இதுபற்றி தீர்க்கமான முடிவிற்கு இன்னும் வர இயலவில்லை. அவற்றை விரிவாக ஆவிகள் பற்றி பார்க்கும்போது பார்க்கலாம்.




              இவ்விரண்டு சம்பவங்களிலும், கடவுளோ வேற்றுக்கிரகவாசிகளோ சம்பந்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. அப்படியானால் அது ஆவிகளா? நான் காலையில் எனது கட்டில் வரை எனது அம்மா கொண்டுவந்து கொடுக்கும் காபியிலிருந்து, உணவுப் பொருட்கள் வரை உள்ள சூடான பொருட்களிலிருந்து வரும் ஆவியை மட்டுமே பார்த்துள்ளேன்; சுடுகாட்டில் (இடுகாட்டிலும்) இருப்பதாகக் கூறப்படும் ஆவியை இதுவரை பார்த்ததில்லை. ஆனால், நாம் பார்க்கவில்லை என்பதால், அது இல்லை என்கிற முடிவுக்கும் வர இயலாது. உண்மையில் ஆவி, ஆத்மா, உயிர் என பலவாறாக அழைக்கப்படும் விஷயம், உடலில் எங்குள்ளது என்ற கேள்விக்கு, இங்குதான் என்று சுட்டிக்காட்ட இயலாத தெளிவுடன் தெம்பாக இயங்குகிறது இன்றைய விஞ்ஞானம். (ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே உயிரின் அளவைக் கூறிய தமிழர்கள் போற்றுதலுக்குரியவர்கள். திருமூலரின் அப்பாடல், முன்னரே "சூட்சுமம்" என்கிற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.)

             பிரபல எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) எழுதிய 'ஆலிவர் ட்விஸ்ட்' (Oliver Twist) என்கிற நாவலை வெளியிட முனைந்த போது, அதன் பாதி நாவல் எங்குள்ளது என கண்டறிய இயலவில்லை. பின்னர், அவரது ஆவி (!) அவரது மகனின் கனவில் வந்து அதன் இருப்பிடத்தை சரியாகத் தெரியப்படுத்தியதாக என்றோ ஒருநாள் வேர்க்கடலை வாங்கிய, ஒரு நாளேட்டின் காகிதத்தில் படித்த ஞாபகம். (இவர் வாழ்க்கைல நடந்த இந்த சம்பவம் உண்மைதானான்னு, யாராவது சரிபார்த்துச் சொல்லுங்க. எனக்கு இது உறுதியா தெரியல!)


(சார்லஸ் டிக்கன்ஸ்) க்கான பட முடிவு
சார்லஸ் டிக்கன்ஸ்





தொடர்புடைய படம்

    
உளவியலின் தந்தை என வர்ணிக்கப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு இவ்வாறான கனவுகள் குறித்து என்ன கூறுகிறார் எனப்பார்த்தால், அவராலும் அனைத்துக் கனவுகளுக்கும் விடையளிக்க இயலவில்லை என்றே முடிக்கிறார். அவற்றையும் நாம் "கனவு-நாயகன்" என்கிற தலைப்பின் கீழ் கண்டோம். இருப்பினும் பல கனவுகளுக்கு அவரது ஆராய்ச்சியின் மூலம் தீர்வு கண்டிருந்தார். அதிலும் குறிப்பாக,"Dreams of the death of the beloved persons" என்கிற தலைப்பின் கீழ் அவர் எழுதிய கட்டுரையில், "நமக்கு நெருக்கமானவர் இறந்துபோவதுபோல் நமக்குக் கனவு வருமாயின், அவர் இறப்பதை நாம் மனமார விரும்பியதால்தான் அவ்வாறு கனவு வந்தது என நான் கூற மாட்டேன். காரணம், நமது கனவுகள் நமது சிந்தனை மற்றும் சூழ்நிலைகளின் பிணைப்பு சார்ந்த விஷயமாக இருந்தாலும், இதுபோன்ற சில வழக்குகளில், அக்கனவு கண்டவர், தனது கனவில் இறந்ததாகக் கருதப்படும் நபரை ஒரு கணமேனும், (தனது வாழ்நாளில்) இறந்தால் நல்லது என்பது போல உணர்ந்திருப்பார். உதாரணத்திற்கு, அதிகமாக சேட்டை செய்யும் குழந்தையை அதன் தாய், "செத்துத் தொலையேன்" எனத் திட்டுவது போலத்தான். ஒரு தாய் அவள் குழந்தையின் இறப்பை விரும்ப மாட்டாள் என்றாலும், அக்கணத்திற்கு அவள் மனதானது, அக்குழந்தையின் மரணத்தை விரும்புகிறது என்பதே உண்மை. இத்தகு பதிவானது, ஆழ்மனதைவிட்டு என்றேனும் ஒருநாள் கனவில் கசியும்போது, அதுகுறித்த பயம் உண்டாகிறது. ஆனால், இவ்வாறு நீங்கள் என்றேனும் நீங்கள் உங்கள் வாழ்வில் நினைத்திருப்பீர்கள் என நாம் கூறினால், இல்லை என்றே சாதிப்பார்கள். அதையும் அவர்கள் வேண்டுமென்று மறுக்கவில்லை. உண்மையில் அவர்களது நினைவில் அது இல்லை!" என்று விளக்குகிறார்.

            ஆனால், அவ்வாறு கண்ட கனவுகள் எப்படி பலிக்கின்றன? அதுதான் அவரே தன்னால் சிலவற்றுக்கு விளக்கம் தர இயலவில்லை என ஒப்புக்கொண்டுவிட்டாரே. எனவே இனி இதுகுறித்து இவரிடம் கேட்டு பயனில்லை. அதற்கு வேறு ஒருவர் இருக்கிறார். அவர் கூறும் காரணமானது, நமது கனவிற்கும், நமது கடந்த ஜென்மத்திற்கும் ('கடந்த காலத்திற்கும்' அல்ல) தொடர்பு உண்டு என்பதே. அப்படியானால், பூர்வ ஜென்மம் உண்டா? அவை உண்மையா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக