வேலூர் மாவட்டம், குடியாத்தம்
நெல்லூர்பேட்டையிலிருந்து பேரணாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையில், லீலா
விநோதன் ஏஜன்சிக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த
பங்க்கில் கலப்பட பெட்ரோல் விற்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. நேற்று
300-க்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.
அதில் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள்
நடுவழியில் திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. இதனால், அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்
மெக்கானிக்கிடம் சென்று சரிபார்த்தனர். `கலப்பட பெட்ரோல் போட்டுள்ளதால் பழுது
ஏற்பட்டுள்ளது’ என்று மெக்கானிக் கூறியுள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த வாகன
ஓட்டிகள் பங்க்கை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த
காவல்துறையினர் பங்க் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். `டீசல் ஏற்றிவந்த டேங்கர்
லாரி, பெட்ரோல் இருப்பு வைத்திருந்த இடத்தில் தவறுதலாக டீசலை இறக்கிவிட்டது. இதில்
சுமார் ஆயிரம் லிட்டர் டீசல் பெட்ரோலுடன் கலந்துவிட்டது.
அதன்பிறகே தவற்றைக் கண்டுபிடித்தோம். இவ்வளவு
பெட்ரோலையும் வீணாக்க முடியாது என்பதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினோம். வாகனப்
பழுதுக்கு பொறுப்பேற்கிறோம். பழுதையும் நீக்கித் தருகிறோம்’ என்று உத்தரவாதம்
கொடுத்தனர் பங்க் ஊழியர்கள்.
`இது முதல் முறை கிடையாது. இந்த பங்க்கில்
தொடர்ந்து கலப்பட பெட்ரோல்தான் வழங்கி வருகிறார்கள். பெட்ரோல் வாடையைவிட
மண்ணெண்ணெய் வாடைதான் மூக்கைத் துளைக்கும். கையும் களவுமாக மாட்டிக்கொண்டதால்
தவறுதலாக டீசல் கலந்துவிட்டதாக நாடகமாடுகிறார்கள். பங்க் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்’ என்று வாடிக்கையாளர்கள் கொந்தளித்தனர்.
அதையடுத்து, காவல் துறையினரின்
பேச்சுவார்த்தையை ஏற்று வாகன ஓட்டிகள் சமரசமடைந்தனர். பழுதான வாகனங்களையும் பங்க்
ஊழியர்களே சரிசெய்துகொடுக்கிறார்கள். புகார் குறித்து பங்க் மேலாளர் மணியிடம்
விளக்கம் கேட்டோம். `எந்தத் தொழிலாக இருந்தாலும் சிறுசிறு பிரச்னைகள் வரத்தான்
செய்யும். அதுக்கு என்ன செய்ய முடியும்’ என்றார் இயல்பாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக