Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 டிசம்பர், 2019

பாக்கியைக் கொடுக்கலனா டிக்கெட் கிடையாது: ஏர் இந்தியா அதிரடி!

ரசு அதிகாரியாக இருந்தாலும் பழைய பாக்கியைக் கொடுக்காவிட்டால் டிக்கெட் கிடையாது என்று ஏர் இந்தியா அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதன்முறையாக அரசு அமைப்புக்கு டிக்கெட் தர மறுத்துள்ளது ஏர் இந்தியா.
மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏர் இந்தியாவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கும் நிலையில் தொடர்ந்து இயங்க முடியாமல் தவித்து வருகிறது. இதனால் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி, அதன் வாயிலாகக் கடனை அடைக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்து அதைத் தனியார் மயமாக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

கடுமையான நிதி நெருக்கடி இருப்பதால் கடினமான சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் தொழில் முறைப் பயணத்துக்கும் அரசு அதிகாரிகளின் பயணத்துக்கும் ஏர் இந்தியாதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். ஏர் இந்தியா சேவை வழங்காத இடங்களுக்கு மட்டுமே தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும். இந்நிலையில், அரசு அமைப்பின் விமானப் பயணத்துக்கு டிக்கெட் வழங்க ஏர் இந்தியா மறுத்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கான பயணத்துக்கு ஏர் இந்தியா டிக்கெட் வழங்க மறுப்பது இதுவே முதன்முறையாகும். அதாவது ரூ.10 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ள அரசு அமைப்புகளுக்கு சேவை வழங்கப்படமாட்டாது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அரசு அமைப்புகள் இதுவரையில் ரூ.268 கோடி பாக்கி வைத்துள்ளன. இதை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏர் இந்தியா இருக்கிறது. சிபிஐ, அமலாக்கத் துறை, கலால் ஆணையம், மத்திய தொழிலாளர் நிறுவனம், இந்திய தணிக்கை வாரியம், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட அரசு அமைப்புகள் ரூ.10 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ளன.

பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ஏர் இந்தியா, சென்ற மாதம் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு பாக்கித் தொகை வரவேண்டியுள்ளது என்று கணக்கெடுத்துள்ளது. பழைய பாக்கியை வழங்காவிட்டால் டிக்கெட் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது ஏர் இந்தியா. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், மக்களவை, விமான நிலையங்கள் ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக