Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 டிசம்பர், 2019

வங்கிகளில் குறையாத நிதி மோசடிகள்!

2018-19ஆம் ஆண்டில் இந்திய வங்கிகளில் மொத்தம் ரூ.71,543 கோடிக்கு நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே வாராக் கடன் பிரச்சினையால் தத்தளித்து வருகின்றன. கடனை வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பதால் வங்கிகள் இயங்குவதற்கான நிதியாதாரமும் இல்லாமல் போகிறது. அதோடு, போலியான ஆவணங்களைக் கொண்டு கடன் வாங்கிவிட்டு மோசடி செய்வதும், மோசடி கண்டறியப்படுவதற்கு முன்னரே நாட்டை விட்டுத் தப்பியோடுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்வதால் சிறு நிறுவனங்கள் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் கூடக் கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன.

இந்நிலையில் 2018-19 நிதியாண்டில் இந்திய வங்கிகளில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்த விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-19ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.71,543 கோடிக்கு நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. 2017-18ஆம் ஆண்டில் ரூ.41,167 கோடிக்கு நிதி மோசடிகள் நடைபெற்றிருந்தன. அதாவது இந்த ஒரு ஆண்டில் மட்டும் நிதி மோசடிகள் 74 சதவீதம் அதிகரித்துள்ளன. நிதி மோசடிகளில் பொதுத் துறை வங்கிகளில் மட்டும் 55.4 சதவீத மோசடிகள் நடைபெற்றுள்ளன.

பொதுத் துறை வங்கிகளை மீட்டெடுக்கும் நோக்கத்தில் 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் கடன் மீட்பு நடவடிக்கையை அரசு கடுமையாக்கியது. அதன்படி, ரூ.50 கோடிக்கு மேல் டெபாசிட் உள்ள செயல்படாத வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. இதன்மூலம் சட்டவிரோதமான பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் நிதி மோசடிகள் அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் வங்கிகளில் நிதி மோசடிகள் 30.7 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. வெளிநாட்டு வங்கிகளில் 11.2 சதவீதத்துக்கு நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன.

நிதி மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையில் பொதுத் துறை வங்கிகளில் 91.6 சதவீத அளவுக்கு மோசடிகள் நடந்துள்ளன. அந்நியச் செலாவணிப் பரிவர்த்தனைகளில் ரூ.64,548 கோடி மதிப்புக்கு நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 3,606 மோசடிகள் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக