Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 டிசம்பர், 2019

அழகுராணி.!

 Image result for beauty cartoon
ரிடத்தில் எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நட்புடன் பழகி வந்தன. ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மௌனமாக இருக்கும். குரங்கு நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாக சொல்வார்கள்! என்று குதித்துக்கொண்டே கூறியது.

எலி நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்து வாழ்கிறோம்! எங்களிடம் அழகும், அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை! என்று கூறியது. வெட்டுக்கிளி மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அழகாக இருக்கிறேன்! என்று பெருமிதம் பொங்கக் கூறியது.

நான் இந்த அழகுப் போட்டிக்கே வரவில்லை! என்று முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது. என்ன இருந்தாலும் முயல் ஓடி வரும் அழகே தனிதான்! என குரங்கு சொல்லியது. அதற்கு எலி நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறியது.

வெட்டுக்கிளி எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன? எனக் கேட்டது. போட்டி நடத்தலாம், ஆனால் நடுவர் யார்? என்று எலி சந்தேகம் எழுப்பியது. அப்போது நடுவராக நானிருக்கிறேன்! என திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது. நீங்கள் எப்படி? என்று குரங்கு ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு காகம் நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலையும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்! என்று கூறியது. அனைத்தும் சேர்ந்து சரி என்று குரல் கொடுத்தன.

மறுநாள் அனைவரும் காகத்தை தேடி போய்க் கொண்டு இருந்தன. அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து என் காலில் காயப்படுத்தி விட்டான்! என குருவி உதவி கேட்டது.

குரங்கு நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். இப்படி அபசகுனமாக பேசாதே! என்று கடுமையாக கூறியது. குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விட்டன. ஆனால் முயல் மட்டும் அவசர அவசரமாக மருந்து தேடி எடுத்து குருவியின் காலுக்கு போட்டு விட்டு பிறகு அழகிப்போட்டிக்கு சென்றது.

அழகிப் போட்டி தொடங்கியது, குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனதிற்குள் மகிழ்ந்தன. அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்! என காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.

முயல் வந்ததும் காகம் முயல் தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி என்னிடம் கூறியது. அப்பொழுது நீங்கள் மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனம் உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்! என காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவை வெட்கத்தில் தலைகுனிந்தன.

நீதி :
 நாம் யாருக்காவது உதவி செய்தால் அது ஒருநாள் நமக்கு எதிர்பாராத பயனைத்தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக