ஏதாவது ஒரு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ, உங்களின் திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும்போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை, 'மன அழுத்தம்" என்று கூறலாம். இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவர்களின் சிந்தனை செயலிழக்கப்படுகிறது.
உங்களுக்கு ஏற்படும் பதட்டம் மனச்சோர்வை ஏற்படுத்துகிறதா? மன அழுத்தத்தால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள் :
எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்சனையை பற்றி நீங்கள் முன்னரே தெரிந்து இருந்தால் முன்கூட்டியே மனதளவில் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். இது உங்களுக்கு கஷ்டத்தை சமாளிக்கும் மனவலிமையை தரும்.
தனிமையில் இருப்பதிலிருந்து விடுபட்டு நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து, கலகலப்பாக உரையாடுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
நல்ல இசையை கேட்பதன் மூலம் அழுத்தம், பதட்டம், கவலை ஆகியவை குறையும். பாடல்களை கேட்பது மனநிலையை மாற்ற உதவும்.
உங்கள் விருப்பங்களையும், எண்ணங்களையும் மற்றவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அதில் நேர்மையாக இருக்க வேண்டும். இது உங்கள் உறவுகளை மேம்படுத்த உதவும்.
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், உண்மையை ஏற்று அதை எதிர்கொள்ள தயாராகுங்கள். ஏனெனில் உண்மையை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
மது, புகை ஆகியவை அந்த நேரத்திற்கு மகிழ்ச்சியை தந்தாலும் அது மன அழுத்தத்தை இன்னும் தீவிரப்படுத்தும். எனவே அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதில் க்ரீன் டீயை பருகுவது மனதை நிதானப்படுத்தும்.
போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினால், அலுவலகத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சென்றுவிடுங்கள் அல்லது போக்குவரத்து நெரிசல் குறைந்த சாலையை பயன்படுத்துங்கள்.
நல்ல உறக்கமும், ஆரோக்கியமான உணவு முறைகளும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா மற்றும் தியானம் சிறந்த வழிகளாக கருதப்படுகிறது. இவற்றின் மூலம் மனமும், சிந்தனையும் நிதானமாக இருக்கும்.
தாங்க முடியாத மன அழுத்தம் இருந்தால் நீங்கள் உடனே மனநல மருத்துவரை அணுகுங்கள். மன அழுத்தத்தை குறைக்கவும், வாழ்க்கையை மேம்படுத்தவும் அது உங்களுக்கு உதவும்.
மன அழுத்தத்திற்கான சிக்கலை முதலில் அறிந்து கொள்ளுங்கள். இது உங்கள் பிரச்சனையை எளிதாக சமாளிக்க உதவி செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக