Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 டிசம்பர், 2019

யார் உறவினர்கள்.?


 Image result for relatives
ரு ஊரில் உள்ள குளத்தில் நிறையத் தண்ணீர் இருந்தது. தண்ணீர் நிறைந்திருந்ததால் அந்த குளம் மிக அழகாக காட்சியளித்தது. அந்த குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற நீர் கொடிகள் படர்ந்து இருந்தன. அங்கு கொக்கு, நாரை போன்ற நீர்ப்பறவைகளும் இருந்தன.

எல்லாம் ஒரு குடும்பம் போல் ஒன்றாக வாழ்ந்து வந்தன. அந்த குளம் தன் உறவினர்களான கொடிகளுக்கு வேண்டிய அளவு தண்ணீர் குடிக்கக் கொடுத்து உயிர்வாழ செய்தது. அது போலவே, அன்புடன் தன்னிடமுள்ள மீன்களையும், நண்டுகளையும் நீர்ப்பறவைகளுக்கு உணவாக கொடுத்து உறவாடிக் களித்தது.

ஓராண்டு உரிய காலத்தில் மழை பெய்யவில்லை. ஊரே வறண்டு போய் விட்டது. பயிர் பச்சைகளும் விளையவில்லை. அந்த குளத்தில் இருந்த நீரும் சிறுது சிறிதாக வற்றி, கடைசியில் அடித்தரையும் காய்ந்து போய் விட்டது.

இனி இந்த குளத்தில் தங்களுக்கு உணவு கிடைக்காது என்று அறிந்த பறவைகள் வேறு நீருள்ள குளத்தை நாடிப் பறந்து சென்று விட்டன. கொடிகளில் சின்னஞ்சிறிய கொடி ஒன்று, மற்ற கொடிகளைப் பார்த்து, இந்த குளத்திலேயே நாம் இனியும் இருந்தால் காய்ந்து கருக வேண்டியதுதான். நீர்ப்பறவைகளை போல் நாமும் வேறு எங்கேயாவது போய் விட்டால் என்ன? என்று கேட்டது.

அதற்குப் பெரிய கொடி ஒன்று, இந்த குளம் நீர் நிறைந்திருந்தபோது தாயைப்போல நம்மை ஆதரித்துக் காப்பாற்றியது. நீர்ப்பறவைகள் சிறிதுகூட நன்றியில்லாமல் துன்பம் வந்த காலத்தில் பறந்து போய்விட்டன. அப்படி நாமும் நன்றியற்றவர்களாக நடந்து கொள்ளக்கூடாது.

காய்ந்து கருகினாலும் இந்த குளத்திலேயே கிடந்து சாக வேண்டியதுதான். நம்மை வாழ வைத்த குளத்திற்கு வந்த துன்பம் நமக்கும் வரட்டும், துன்பத்தை பங்கு கொள்வதுதான் உறவு என்று கூறியது. அதைக்கேட்ட மற்ற எல்லாக் கொடிகளும் அதன் கருத்தை ஒப்புக்கொண்டன. குளத்தின் வறண்ட கரையிலேயே அவை ஒட்டிக் கிடந்து தங்கள் உறவை நிலை நிறுத்தின.

நீதி :

வறுமை ஏற்பட்ட காலத்தில் நீர்ப்பறவைகள் போல் பறந்து செல்பவர்கள் உறவினரல்லர். கொடிகள் போல் ஒட்டிக் கிடந்து பங்கு பெரும் இயல்பினரே உண்மையான உறவினராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக