தேனியிலிருந்து ஏறத்தாழ 65கி.மீ தொலைவிலும், கோவையிலிருந்து ஏறத்தாழ 212கி.மீ தொலைவிலும், அமைந்துள்ள பிரம்மாண்டமான இயற்கை சுற்றுலாத்தலமாக கொழுக்குமலை திகழ்கிறது.
அழகான மலையும், சாரல் குளிர்காற்றும் நம்மை உற்சாகப்படுத்தும் உணர்வே தனி சுகம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலைதான் கொழுக்கு மலை.
சிறப்புகள் :
உலகிலேயே உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம் கொழுக்குமலை ஆகும். இந்த மலையின் சிறப்பு வருடம் முழுவதும் குளிர்வான காலநிலையை கொண்டிருக்கும். கொள்ளை அழகு கொண்ட கொழுக்குமலை தமிழகத்தில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். கொழுக்குமலை சுற்றுலா பயணிகளின் நுழைவுவாயிலாக சூரிய நெல்லி கிராமம் அமைந்துள்ளது.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல் வழியாகச் சென்றால் ரம்மியமாக பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம். இந்த இடத்தை ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்த்து ரசித்து பரவசம் அடையலாம்.
இங்குள்ள மேகக் கூட்டங்கள் தேயிலை தோட்டங்களின் மலை முகட்டில் மறைந்து வெளியேறும் அனுபவத்தைப் பார்க்க முடியும். மேகக்கூட்டங்கள் மலைகளுடன் விளையாடுவது போலவும், ஆகாயங்கள் மலைகளுடன் பேசிக் கொண்டு இருக்கும் காட்சிகளைக் இங்கு கண்டுக்களிக்கலாம். இந்த காட்சிகளை காலை நேரங்களில் சூரியன் உதிக்கும் வேளையில் தாராளமாக பார்த்து ரசிக்கலாம். மலைகளும், மேகங்களும் ஆகாயம் தொட்ட அழகிய இடமாக கொழுக்குமலை திகழ்கிறது.
பிறகு கொழுக்குமலைக்கு அருகில் உள்ள மலை முகடுதான் மீசைப்புலி. கொழுக்குமலையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் ஜீப்பில் பயணித்தால் மீசைப்புலி மலைப்பகுதியைச் சென்று அடையலாம். இங்கே மலையேற்றமும் செய்ய முடியும். மீசைப்புலி மலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரிந்துள்ள பசுமை அழகைக் காண முடியும்.
எப்படி செல்வது?
தேனி மற்றும் போடிமெட்டுலிருந்து கொழுக்குமலைக்கு பஸ் வசதிகள் உள்ளன.
எங்கு தங்குவது?
போடிமெட்டில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
பார்க்கவேண்டிய இடங்கள்?
யானை இரங்கல் டேம்.
மீசைப்புலி.
தவழும் மேகக் கூட்டங்கள்.
தேயிலை தோட்டங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக