Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 டிசம்பர், 2019

மீன்களின் செயல்.!

 Image result for மீன்களின் செயல்.!
தியூரில் ஒரு பெரிய குட்டை இருந்தது. அந்த குட்டையின் ஒரு புறத்தில் மீன்கள் வசித்து வந்தன. மற்றொரு புறத்தில் வயதான தவளை ஒன்று வசித்து வந்தது. அந்த மீன்களுக்கு தவளையை கண்டாலே ஆகாது. அதுவும் இரவில் தவளை கத்தும் சத்தம் கொஞ்சம் கூடப்பிடிக்காது.

அதனால் அந்த தவளையை குட்டையை விட்டே துரத்திவிட வேண்டும் என்று மீன்கள் அடிக்கடி பேசிக்கொண்டன. ஒருநாள் எல்லா மீன்களும் சேர்ந்து தவளையிடம் வந்தன. தவளையே உன்னைக் கண்டாலே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் நீ இந்த குட்டையைவிட்டு ஓடிப் போய்விடு என்று எச்சரிக்கை செய்தன.

அதற்கு அந்த தவளை மீன்களிடம், நண்பர்களே! நம் அனைவருக்குமே பொதுவானது இந்தக் குட்டை. நான் உங்களைத் தொந்தரவு செய்வதில்லை. அப்படி இருந்தும் என்னை ஏன் போகச் சொல்கிறீர்கள்? இது நியாயம்தானா? என்று கேட்டது.

நியாயம், அநியாயம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நீ இங்கிருந்து போய்தான் ஆக வேண்டும் என்று மீன்கள் பிடிவாதம் பிடித்தன. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த குட்டையில்தான். நான் எங்கே போவது? அதுமட்டுமல்ல, இந்தக் குட்டையை விட்டுப் போக எனக்கு விருப்பமில்லை என்று அமைதியாக தவளை சொன்னது.

மீன்களின் மத்தியில் கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்பு வயதான ஒரு மீன் முன்னே வந்து தவளையே, அப்படியானால் ஒன்று செய்யலாம். இந்த குட்டையை இரண்டாக பிரிப்போம். ஒரு பகுதியில் நீ இரு. மற்றொரு பகுதியில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்கள் பகுதிக்கு நீ வரக்கூடாது என்றது.

அனைத்து மீன்களும் ஓ என்று கத்தியபடியே மகிழ்ச்சியைத் தெரிவித்தன. தவளைக்கு குட்டையைப் பிரிப்பதில் விருப்பம் இல்லைதான். வேறு வழியில்லாமல் சரி என்றது. குட்டை இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அப்பாடா! இனிமேல் அந்த தவளை இந்தப் பக்கம் வரவே வராது என்று மகிழ்ச்சியில் துள்ளியது ஒரு மீன். ஆமாம். ஆமாம். இனி இந்த பாதி குட்டை நம் கட்டுப்பாட்டில்தான் என்றது இன்னொரு மீன்.

நாட்கள் செல்லச் செல்ல மீன் கூட்டம் அதிகரித்தது. அவற்றுக்கு அந்தப் பாதிக்குட்டை போதவே இல்லை. பல மாதங்களாகக் கடுமையான வெயில் வாட்டி எடுத்தது. மழையே இல்லாமல் குட்டை நீர் வற்றத் தொடங்கியது.

நீர்ப்பற்றாக்குறை அதிகமானதால் வயதான மீன்கள் இறந்து போயின. தவளை இருந்த பக்கம் தண்ணீர் ஓரளவு இருந்தது. குட்டையின் மறுபுறம் நீர் குறைந்து, மீன்கள் வாடுவதைப் பார்த்து தவளை மனம் வருந்தியது. இப்படியே போனால் இந்தக் குட்டையும் அந்த மீன்களும் அழிந்து போய்விடுமே என்று பயந்தது.

ஏதாவது உதவி செய்து அந்த மீன்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து, குட்டையின் பிரிக்கப்பட்ட பகுதிக்கு வந்தது. அங்கு பாதிக் குட்டையில் மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதி, துன்பப்படுவதைக் கண்டது.

குட்டையை இரண்டாகப் பிரிக்க மீன்கள் சேர்ந்து உருவாக்கிய சுவரை, தனது பின்னங்கால்களால் உடைக்க ஆரம்பித்தது. சுவர் கொஞ்சம் உடைந்ததும் அந்தப் பக்கம் இருந்த தண்ணீர் இந்தப் பக்கத்தை நோக்கி வரத்தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் சிறிய ஓடைப்போல தண்ணீரின் வேகம் அதிகரித்தது.

தன் வேலை முடிந்த மகிழ்ச்சியில், தனக்கான இடத்தை நோக்கி தவளை திரும்பியது. தண்ணீரைக் கண்டதும் மீன்கள் ஆனந்தம் அடைந்தன. தங்களால் போடப்பட்ட சுவரை உடைத்து, தண்ணீரை அளித்த தவளைக்கு நன்றி கூற மீன்கள் துள்ளலுடன் புறப்பட்டன.

நீதி :

நாம் துன்பத்தில் இருந்தாலும் அதை மறந்து மற்றவர்களுக்கு நன்மைகளை செய்து அவர்கள் படும் சந்தோஷத்தை பார்த்து வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக