தென்கயிலை என பக்தர்களால்
அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும்
ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ
சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி
அருள்கிறார். தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. இங்கு
ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும். தென்கயிலாயம் எனக்கூறப்படும்
இத்தலத்து இறைவனிடம் எது வேண்டினாலும் கிடைக்கும்.
மூலவர் : வெள்ளிங்கிரி ஆண்டவர்
அம்மன் : மனோன்மணி
தீர்த்தம் : பாம்பாட்டி சுனை என்ற
தீர்த்தம்
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
தல
சிறப்பு:
கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள
வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோவில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான
சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது.
இம்மலைக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை,
வைகாசி 15ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இம்மாதங்களில் நிலவும்
சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக சித்ரா பவுர்ணமியன்று இலட்சக்கணக்கான
பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும்.
இம்மலையில் இருக்கும் போது கிழக்கில் சூரியன்
உதிக்கும் அழகையும், சிறுவாணி நீர்த்தேக்கத்தின் எழில் தோற்றத்தையும் கேரள மலைத்
தொடரின் பசுமையான அழகிய காட்சிகளை கண்டு களிக்கலாம்.
சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு
ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப்
போற்றப்படுகிறது.
தல
பெருமை :
இறைவன் பஞ்சலிங்கமாக விளங்கும் இத்தலம்
இரசதகிரி, தக்கிண கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. சிவபெருமானுக்கு
மாறாக தக்கன் செய்த வேள்விக்கு தேவர் முனிவர்கள் சென்றதனால் இறைவன் வேள்வியை
கோபங்கொண்டு அழித்தார். தேவர் முனிவர்களை சபித்தார். பிறகு தன் முகங்களை ஐந்து
கிரிகளாகக் கொண்டு கொங்குநாட்டில் மறைந்தார். சாபம் நீங்கப் பெற்ற தேவர்
முனிவர்கள் சிவபெருமானைக் காண சென்றனர். நவகிரக பீடிதங்கள் நீங்கி பழநி
திருவாவினன்குடி கன்னிகாவனத்தில் புரட்டாசி மாதம் ஐந்து வாரம் தவம் இயற்றி
சனிபகவான் அருள்பெற்றும், ஐப்பசி ஐந்து வாரம் பவானியில் துலாமுழுக்கு செய்தும்,
கார்த்திகை மாதம் ஐந்து வாரங்களில் மேற்கண்ட பஞ்சகிரிகளுக்கும் சென்று
பஞ்சமுகங்களைத் தொழுதும் பேறுபெற்றனர். முடிவில் ஐந்தாம் வாரத்தில்
வெள்ளியங்கிரியில் இறைவனைக் கண்டும் வணங்கி பேறுபெற்றனர். அர்ஜூனன் கடுந்தவம்
புரிந்து பாசுபதம் பெற்றதும், முக்தி பெற்றதும் இத்தலமே. சிவபெருமான், உமயவளின்
வேண்டுதலின்படி திருநடனம் ஆடியதும் இத்தலத்தில் தான். வெள்ளிமலையானை நினைத்து
ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தலத்திற்கு வருகை தருவோர்க்கு எல்லா பயனையும்
நல்குவார்.
திருவிழா:
இத்திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி
மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி
மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள்
நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக